பண்ருட்டி : பண்ருட்டி அருகே அண்ணா கிராமத்தில் கட்டி முடிக்கப்பட்ட திருமண மண்டபத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
பண்ருட்டி அருகே உள்ள அண்ணாகிராமம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் சுமார் 1000க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் வீட்டு சுப நிகழ்ச்சி உள்ளிட்ட அனைத்து நிகழ்ச்சிகளையும் குறைந்த செலவில் நடத்த பல ஆண்டுக்கு முன் அண்ணாகிராமத்தில் திருமண மண்டபம் கட்டப்பட்டது.
ஆனால் காலப்போக்கில் இந்த திருமண மண்டப கட்டிடம் சேதமடைந்து அதில் நிகழ்ச்சிகள் நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் இந்த கட்டிடம் இடிக்கப்பட்டது. இதையடுத்து இப்பகுதியினரின் நலன் கருதி, பண்ருட்டி -கடலூர் பிரதான சாலையில் அண்ணா திருமண மண்டபம் கட்டப்பட்டது.இந்த திருமண மண்டபத்தில் சமையலறை வசதியுடன், 300 பேர் உணவருந்தும் இட வசதியுடன், 650 பேர் அமரும் வகையில் கட்டப்பட்டுள்ளது. இங்கு பொதுமக்கள் திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்த குறைந்த கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது.
இந்நிலையில் இந்த திருமண மண்டபம் கட்டி முடிக்கப்பட்டு பல ஆண்டுகளுக்கு மேலாக மூடியே கிடக்கிறது. இதனால் யாருக்கும் பயன்படாமல் திருமண மண்டபம் வெறும் காட்சிப்பொருளாகவே உள்ளது. இதையடுத்து பல்வேறு தரப்பினரின் கோரிக்கையை ஏற்று சீரமைக்கும் பணிகள் நடந்து வந்தது. அதுவும் பல்வேறு காரணங்களால் பணிகள் துவங்கிய நிலையில் நிறுத்தப்பட்டது. தற்போது திறக்கப்படாமல் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வராமல் உள்ளது. எனவே இந்த திருமண மண்டபத்தை அனைத்து வசதிகளுடன் சீரமைத்து உடனடியாக பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post அண்ணா கிராமத்தில் கட்டி முடிக்கப்பட்ட திருமண மண்டபம் பயன்பாட்டுக்கு வருவது எப்போது? appeared first on Dinakaran.