ஜோ பைடன் விலகியதைத் தொடர்ந்து அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட கமலா ஹாரிசுக்கு ஆதரவு குவிகிறது: இந்திய அமெரிக்கர்கள் அமோக வரவேற்பு

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் இருந்து அதிபர் ஜோ பைடன் விலகியதைத் தொடர்ந்து ஆளும் ஜனநாயக கட்சி வேட்பாளராக துணை அதிபரும், இந்திய வம்சாவளியுமான கமலா ஹாரிசுக்கு ஆதரவுகள் குவிகின்றன. இந்திய அமெரிக்கர்களும் உற்சாகமாக வரவேற்றுள்ளனர். அமெரிக்காவில் வரும் நவம்பர் 5ம் தேதி அதிபர் தேர்தல் நடக்க உள்ளது. இதற்கான பிரசாரத்தில், ஆளும் ஜனநாயக கட்சி வேட்பாளர் தற்போதைய அதிபர் ஜோ பைடனை விட எதிர்க்கட்சியான குடியரசு கட்சியின் வேட்பாளர் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப்புக்கு ஆதரவு பெருகியது. வயது மூப்பு காரணத்தால், கட்சியிலும் பைடனுக்கு எதிர்ப்புகள் வலுத்தன. இதனால், அதிபர் தேர்தலில் இருந்து விலகுவதாக பைடன் நேற்று முன்தினம் அறிவித்தார்.

அதோடு தனக்கு பதிலாக ஜனநாயக கட்சி வேட்பாளராக துணை அதிபரும், இந்திய வம்சாவளியுமான கமலா ஹாரிசை பைடன் பரிந்துரைத்தார். கடந்த 2021 முதல் அமெரிக்காவின் முதல் பெண் துணை அதிபராகவும், முதல் இந்திய வம்சாவளி துணை அதிபராகவும் கமலா ஹாரிஸ் பதவி வகித்து வருகிறார். ஏற்கனவே இவரைத்தான் ஜனநாயக கட்சி வேட்பாளராக நிறுத்த வேண்டுமென பலரும் கூறி வந்த நிலையில் தற்போது கமலா ஹாரிசுக்கு ஆதரவுகள் குவிகின்றன. முக்கியமாக முன்னாள் அதிபர் பில் கிளிண்டன், அவரது மனைவியும் முன்னாள் வெளியுறவு அமைச்சருமான ஹிலாரி கிளிண்டன் ஆகியோர் கமலா ஹாரிசுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். கமலா ஹாரிஸ் அதிபர் தேர்தல் வேட்பாளராக போட்டியிடுவதை அமெரிக்க இந்தியர்களும் வரவேற்றுள்ளனர்.

அடுத்த மாதம் 19ம் தேதி சிகாகோவில் நடக்க உள்ள ஜனநாயக கட்சியின் தேசிய மாநாட்டில் கட்சியின் அதிபர் வேட்பாளர் யார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுவார். தற்போதைய நிலையில், கமலா ஹாரிசுக்கு போட்டியாக கட்சியின் மூத்த தலைவர்கள் சிலர் இருந்தாலும், கமலா ஹாரிசுக்கே வாய்ப்புகள் அதிகம். மாநாட்டில் ஒருமனதாக அவர் தேர்ந்தெடுக்கப்படாத பட்சத்தில் உட்கட்சி பிரதிநிதிகள் வாக்களிப்பு நடத்தி அதிபர் வேட்பாளரை தேர்வு செய்வார்கள்.

பைடனின் ஆதரவுக்குப் பிறகு பேட்டி அளித்த கமலா ஹாரிஸ், ‘‘அதிபர் பைடனின் ஆதரவை பெற்றதை நான் கவுரவமாகக் கருதுகிறேன். இந்த தேர்தலில் வெற்றி பெறுவதே எனது நோக்கம். 2025ல் டிரம்ப் மற்றும் அவரது தீவிரமான திட்டங்களை நான் தோற்கடிப்பேன்’’ என சூளுரைத்துள்ளார். கமலாவின் வரவைத் தொடர்ந்து அமெரிக்க அதிபர் தேர்தல் சூடுபிடிக்கத் தொடங்கி உள்ளது. முதல் பெண் அதிபராகி சாதிக்க வாய்ப்பு கடந்த 2016 தேர்தலில் முதல் பெண் அதிபர் வேட்பாளராக ஹிலாரி கிளிண்டன் போட்டியிட்டு தோற்றுள்ளார். இம்முறை கமலா ஹாரிஸ் தேர்வு செய்யப்பட்டு அதிபர் தேர்தலில் வெல்லும் பட்சத்தில் அமெரிக்காவின் முதல் பெண் அதிபர் என்கிற வரலாற்று சாதனையை படைப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

* சொந்த ஊரில் குல தெய்வ கோயிலில் உறவினர்கள் வேண்டுதல்

கமலா ஹாரிஸ், திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அடுத்த பைங்காநாடு துளசேந்திரபுரம் கிராமத்தை பூர்வீகமாக கொண்டவர். இவரது தாய் வழி தாத்தா பிவி கோபாலன், பாட்டி ராஜம் ஆகியோர் இந்த கிராமத்தை சேர்ந்தவர்கள். தற்போது அமெரிக்க அதிபர் பதவிக்கு போட்டியிடுகிறார். இதுகுறித்து பைங்காநாட்டை சேர்ந்த அருள்மொழி கூறுகையில், கமலா ஹாரிஸ் கண்டிப்பாக வெற்றி பெறுவார். இதற்காக இங்குள்ள அவரது குலதெய்வ கோயிலான தர்ம சாஸ்தா கோயிலில் உறவினர்கள் வேண்டி கொள்கிறோம் என்றார்.

 

The post ஜோ பைடன் விலகியதைத் தொடர்ந்து அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட கமலா ஹாரிசுக்கு ஆதரவு குவிகிறது: இந்திய அமெரிக்கர்கள் அமோக வரவேற்பு appeared first on Dinakaran.

Related Stories: