அய்யம்பாளையம் மருதாநதி அணை 2 மாதமாக ‘ஃபுல்’; விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி

பட்டிவீரன்பட்டி: தொடர் மழையால் அய்யம்பாளையத்தில் கடந்த 2 மாதங்களாக மருதாநதி அணை நிரம்பி வழிவதால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பட்டிவீரன்பட்டி அருகே அய்யம்பாளையத்தில் 72 அடி உயர மருதாநதி அணை உள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதிகளான மேற்கு தொடர்ச்சி மலை, தாண்டிக்குடி மலையடிவார பகுதிகளில் மழை பெய்யும் போது, அணைக்கு நீர்வரத்து இருக்கும். இந்த அணை மூலம் ஆத்தூர், நிலக்கோட்டை தாலுகாவில் உள்ள 7 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இதுதவிர அய்யம்பாளையம், பட்டிவீரன்பட்டி, சேகவும்பட்டி பேரூராட்சிகள் மற்றும் சித்தரேவு உள்பட 10க்கும் மேற்பட்ட ஊராட்சிகளின் குடிநீர் ஆதாரமாகவும் இந்த அணை திகழ்கிறது.

நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் மழையால், கடந்த 2 மாதங்களாக அணை முழு கொள்ளளவுடன் உள்ளது. மேலும், தற்போது கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழையால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஆனால் அணை நிரம்பியுள்ளதால் அணைக்கு வரும் 20 கனஅடி நீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது.

இதுகுறித்து பொதுப்பணி துறை அதிகாரிகள் கூறுகையில்:
‘அணையில் தற்போது 190 மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ளது. அணை முழு கொள்ளளவுடன் உள்ளதால், தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். அணையின் உபரிநீரால் கோம்பைபட்டி கண்மாய் நிரம்பியுள்ளது. தற்போது வாடிப்பட்டி கண்மாய்க்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. முதல்போக பாசனம் துவங்குவதற்கு முன்பாக அனைத்து கண்மாய், குளங்களை நிரப்ப திட்டமிடப்பட்டுள்ளது’ என்றனர்.

மருதாநதி அணை தொடர்ந்து முழு கொள்ளளவுடன் உள்ளதால், அணையை சுற்றியுள்ள கிணறு உள்ளிட்ட நீர்நிலைகளில் தண்ணீர் நிரம்பி வழிகிறது. இதனால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

The post அய்யம்பாளையம் மருதாநதி அணை 2 மாதமாக ‘ஃபுல்’; விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி appeared first on Dinakaran.

Related Stories: