நாவலூர் கட்டுமான தொழிலாளி கொலை 2 ஆண்டுகளுக்குப் பின் ஜார்க்கண்ட்டில் கொலையாளி கைது: தாழம்பூர் போலீசார் அதிரடி

திருப்போரூர், ஜூலை 21: திருப்போரூர் நாவலூரில் 2022ம் ஆண்டு கட்டுமான தொழிலாளி அடித்துக்கொலை செய்யப்பட்ட வழக்கில், ஜார்க்கண்ட் மாநிலத்தில் பதுங்கி இருந்த கொலையாளியை, தாழம்பூர் போலீசார் கைது செய்தனர். சென்னை புறநகர் பகுதியான நாவலூரில் தாழம்பூர் செல்லும் சாலையில் பிரசாந்த் என்பவருக்குச் சொந்தமான வீட்டின் கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது. இங்கு மேற்கு வங்கம், ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த 10க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தங்கியிருந்து வேலை செய்கின்றனர்.

கடந்த, 2022ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 25ம் தேதி மேற்கு வங்கத்தைச் சேர்ந்த சங்கர்தாஸ் (26), ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ரஷீத் ஷேக் (31) மற்றும் ரபி ஆகியோர் மது அருந்தினர். அப்போது, 3 பேருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டு, ஒருவரையொருவர் சரமாரியாக தாக்கினர். இதில் ரஷீத் ஷேக் தள்ளி விட்டதில் சங்கர்தாஸ் என்பவருக்கு தலையில் காயம் ஏற்பட்டு மயங்கினார். அவர் மதுபோதையில் மயங்கி விட்டதாக நினைத்த மற்ற 2 பேரும் தங்களின் வீடுகளுக்குச் சென்று விட்டனர். மறுநாள் காலை கட்டிட பணிகள் செய்ய மற்ற தொழிலாளர்கள் வந்தனர். ஆனால் சங்கர்தாஸ் வேலைக்கு வரவில்லை.

இதுகுறித்து கட்டிட உரிமையாளர் பிரசாந்த் விசாரித்துள்ளார். அப்போது சண்டை குறித்து சக தொழிலாளர்கள் கூறியுள்ளனர். இதையடுத்து அனைவரும் சங்கர்தாஸ் தங்கியிருந்த இடத்திற்குச் சென்று பார்த்தபோது, அவர் மயங்கிய நிலையில் கிடந்தது தெரியவந்தது. அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். தகவலறிந்த தாழம்பூர் போலீசார், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த ரஷீத் ஷேக்கை தேடி வந்தனர். அவர் வங்கதேச நாட்டிற்குச் சென்று அங்கேயே தங்கி இருப்பதும், கடந்த 15ம் தேதி ஜார்க்கண்ட் மாநிலம் சாேஹப்கஞ்ச் பகுதியில் நடைபெறவுள்ள குடும்ப விழா ஒன்றில் கலந்துக்கொள்ள இருப்பதும் தெரியவந்தது.

இதனையடுத்து தாழம்பூர் எஸ்ஐ சுமன், தலைமைக் காவலர் காசிமுருகன், காவலர்கள் முரளி மனோகர், முஸ்தாக் ஷேக் ஆகியோர் கொண்ட குழுவினர், ஜார்க்கண்ட் மாநில உள்ளூர் போலீசாரை தொடர்புகொண்டு மாறு வேடத்தில் காத்திருந்தனர். பின்னர் கடந்த 16ம் தேதி விழாவிற்கு வந்த ரஷீத் சேக்கை மடக்கிப்பிடித்த போலீசார், அந்த மாநில நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி தாழம்பூர் கொலை வழக்கு விவரங்களை தாக்கல் செய்து நேற்று முன்தினம் சென்னை வந்த அவர்கள், குற்றவாளியை சோழிங்கநல்லூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். ஜார்க்கண்ட் மாநிலத்திற்குச் சென்று குற்றவாளியை பிடித்ததோடு, பாதுகாப்பாக சென்னைக்கு அழைத்து வந்த தாழம்பூர் போலீசாரை, தாம்பரம் காவல் ஆணையர் அபின் தினேஷ் மோடக் பாராட்டினார்.

The post நாவலூர் கட்டுமான தொழிலாளி கொலை 2 ஆண்டுகளுக்குப் பின் ஜார்க்கண்ட்டில் கொலையாளி கைது: தாழம்பூர் போலீசார் அதிரடி appeared first on Dinakaran.

Related Stories: