மாமல்லபுரம் புராதன சின்னங்களை சுற்றி பார்த்த சிலை கடத்தல் தடுப்பு பயிற்சி குழுவினர்

 

மாமல்லபுரம், செப்.11: இந்திய தொல்லியல் துறை மற்றும் அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் இணைந்து, தொல்பொருட்கள் பாதுகாப்பு குறித்தும், சிலை கடத்துதலை தடுப்பது குறித்தும், 5நாள் பயிற்சி பட்டறை கடந்த 9ம் தேதி சென்னை வேளச்சேரியில் துவங்கியது. வரும் 13ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில், அமெரிக்கா, நேபாளம், இந்தியா ஆகிய நாடுகளை சேர்ந்த தொல்லியல் துறை, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், அருங்காட்சியக அலுவலர்கள், சுங்கத்துறை அதிகாரிகள், பழம்பொருள் கண்டுபிடிப்பு நிபுணர்கள், காவல் துறையினர் மற்றும் துறைமுக அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அந்த, குழுவை சேர்ந்த ஆண்கள் மற்றும் பெண்கள் என 44பேர் கொண்ட குழுவினர் நேற்று 2 சொகுசு வாகனத்தில் மாமல்லபுரம் கடற்கரை கோயில் நுழைவு வாயில் வந்தனர். அவர்களை, தொல்லியல் துறை சென்னை வட்ட கண்காணிப்பாளர் காளிமுத்து, திருச்சி மாவட்ட சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஏடிஎஸ்பி பாலமுருகன், மாமல்லபுரம் தொல்லியல் துறை அலுவலர் ஸ்ரீதர் ஆகியோர் வரவேற்று கடற்கரை கோயிலை சுற்றிப் பார்க்க அழைத்துச் சென்றனர்.

தொடர்ந்து, கடற்கரை கோயில் ஐந்து ரதம், அர்ஜூனன் தபசு, வெண்ணெய் உருண்டை பாறை உள்ளிட்ட புராதன சின்னங்களை சுற்றி பார்த்து, அதன் முன்பு நின்று செல்பி மற்றும் குழுப் புகைப்படம் எடுத்து மகிழ்ச்சி அடைந்தனர். உணவு இடைவெளிக்கு பிறகு மாமல்லபுரம் அரசினர் கட்டிடக்கலை மற்றும் சிற்பகலை கல்லூரியில் மாணவர் கைவண்ணத்தில் செதுக்கிய சிற்பங்களை பார்வையிட்டு, மாணவர்களுடன் 15 நிமிடங்கள் கலந்துரையாடினர். முன்னதாக, சென்னையில் இருந்து வரும்போது, வட நெம்மேலி பாம்பு பண்ணை, சாலவான்குப்பம் புலிக்குகை ஆகியவற்றை சுற்றிப் பார்த்தனர்.

The post மாமல்லபுரம் புராதன சின்னங்களை சுற்றி பார்த்த சிலை கடத்தல் தடுப்பு பயிற்சி குழுவினர் appeared first on Dinakaran.

Related Stories: