காஞ்சிபுரத்தில் இன்று முதல் வரும் 23ம்தேதி வரை முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள்

 

காஞ்சிபுரம், செப்.11: காஞ்சிபுரத்தில் இன்று முதல் வரும் 23ம்தேதி வரை மாவட்ட அளவிலான, `முதலமைச்சர் கோப்பை’ விளையாட்டு போட்டிகள் நடைபெறவுள்ளன என்று மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளார். இது குறித்து காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 2024-2025ம் ஆண்டிற்கான முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 5 பிரிவுகளாக இன்று (செப்.11ம்தேதி) முதல் வரும் 23ம்தேதி வரை நடைபெறுகின்றன.

அதன்படி, பள்ளி மாணவ – மாணவிகளுக்கான போட்டி (12 முதல் 19 வயது வரை) இன்று (11ம்தேதி) முதல் 14ம்தேதி மற்றும் 16ம் தேதிகளிலும் நடைபெறும். கல்லூரி மாணவ – மாணவிகளுக்கு (17 முதல் 25 வயது வரை), 18, 19ம்தேதி மற்றும் 21ம்தேதி வரையிலும் நடக்கவுள்ளன. அரசு ஊழியர்கள் (ஆண்கள், பெண்கள் வயது வரம்பு இல்லை) 20ம்தேதி, பொதுப்பிரிவு (ஆண்கள், பெண்கள் 15 முதல் 35 வயது வரை) 15ம்தேதி, மாற்றுத்திறனாளிகள் (ஆண்கள், பெண்கள் வயது வரம்பு இல்லை) 23ம்தேதி, சதுரங்க போட்டி மட்டும் பள்ளி, கல்லூரி, அரசு ஊழியர்கள் மற்றும் பொதுப்பிரிவினருக்கு 22ம்தேதி ஆகிய நாட்களில் போட்டிகள் நடைபெறவுள்ளன.

மேலும், மட்டைப்பந்து போட்டி மட்டும் பள்ளி, கல்லூரி மற்றும் பொதுப்பிரிவினருக்கு அனைத்து நாட்களும் நடைபெறவுள்ளது. இப்போட்டிகள் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 2 இடங்களில் நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது. இதில் தடகளம், இறகுபந்து, கூடைபந்து, கால்பந்து, வளைகோல் பந்து, கபடி, சிலம்பம், நீச்சல், மேஜைபந்து, கையுந்து பந்து, கைப்பந்து, கேரம், சதுரங்கம், கோ-கோ ஆகிய போட்டிகள் அண்ணா மாவட்ட அரங்கத்திலும், மட்டைப்பந்து விளையாட்டு மட்டும் (அனைத்து பிரிவினருக்கும்) ஏனாத்தூரில் உள்ள சங்கரா பல்கலைக்கழகம் விளையாட்டு மைதானத்திலும் நடைபெறவுள்ளது.

விளையாட்டு போட்டிகள் அனைத்தும் காலை 7 மணியளவில் துவங்கப்படும். இணையதளத்தில் பதிவு செய்தவர்கள் மட்டுமே விளையாட்டு போட்டியில் கலந்துகொள்ள இயலும். நேரடி பதிவு செய்யும் முறை கிடையாது. மேலும், விவரங்களுக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் காஞ்சிபுரம் மாவட்ட விளையாட்டு அலுவலகத்தை 74017 03481 என்ற அலைபேசி எண்ணில் தொடர்புகொண்டு தகவல்கள் பெறலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

The post காஞ்சிபுரத்தில் இன்று முதல் வரும் 23ம்தேதி வரை முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள் appeared first on Dinakaran.

Related Stories: