பிரதமர் மோடிக்கு நெருக்கமான யுபிஎஸ்சி தலைவர் திடீர் ராஜினாமா: ஐஏஎஸ் அதிகாரி பூஜா கேட்கர் விவகாரம் உள்பட பல மோசடிகள் அம்பலமானதால் அதிரடி முடிவு; இன்னும் 5 ஆண்டுகள் பதவிக்காலம் உள்ள நிலையில் விலகியதால் பெரும் பரபரப்பு

புதுடெல்லி: பிரதமர் மோடிக்கு மிகவும் நெருக்கமானவரான, யுபிஎஸ்சி தலைவர் மனோஜ் சோனி திடீரென தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். யுபிஎஸ்சி தேர்வில், புனே ஐஏஎஸ் அதிகாரி பூஜா கேட்கர் விவகாரம் உள்ளிட்ட பல மோசடிகள் அம்பலமான நிலையில், மனோஜ் சோனியின் ராஜினாமா பெரும் சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளது. மேலும், இன்னும் 5 ஆண்டுகள் பதவிக்காலம் இருக்கும் நிலையில் முன்கூட்டியே அவர் பதவி விலகியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட பணிகளுக்கான தேர்வுகளை யுபிஎஸ்சி எனும் ஒன்றிய பணியாளர் தேர்வாணையம் நடத்தி வருகிறது.

இதுதவிர ஒன்றிய அரசின் குரூப் 1, குரூப் 2 உள்ளிட்ட பிற தேர்வுகளையும் இந்த யுபிஎஸ்சிதான் மேற்கொண்டு வருகிறது. இந்த யுபிஎஸ்சியின் தலைவராக இருப்பவர் மனோஜ் சோனி. இந்த ஆணையத்தில் மொத்தம் 10 உறுப்பினர்கள் மற்றும் ஒரு தலைவர் பொறுப்பு உள்ளது. கடந்த 2017ம் ஆண்டு யுபிஎஸ்சி உறுப்பினராக மனோஜ் சோனி பொறுப்பேற்றார். பின்னர் 2023ம் ஆண்டு மே 16ம் தேதி யுபிஎஸ்சி தலைவராக நியமனம் செய்யப்பட்டார். குஜராத்தை சேர்ந்த மனோஜ் சோனி, பிரதமர் மோடிக்கு மிகவும் நெருக்கமானவர். கடந்த 2005ம் ஆண்டில் 40 வயதாக இருந்தபோது வதோதராவின் புகழ்பெற்ற எம்எஸ் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக நியமிக்கப்பட்டார்.

இதனால் நாட்டின் இளம் வயது துணைவேந்தர் என்ற பெருமையை பெற்றார். ஜூன் 2017ம் ஆண்டு யுபிஎஸ்சிக்கு நியமனம் செய்யப்படுவதற்கு முன்பு, குஜராத்தில் 2 பல்கலைக்கழகங்களில் 3 முறை துணைவேந்தராக பணியாற்றினார். பாபாசாகேப் அம்பேத்கர் திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக 2 முறை பணியாற்றினார். இந்நிலையில்தான் தற்போது மனோஜ் சோனி திடீரென யுபிஎஸ்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தனது ராஜினாமா கடிதத்தை ஒரு மாதத்திற்கு முன்பே ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு அவர் அனுப்பியதாகவும் கூறப்படுகிறது.

ஆனால், மனோஜ் சோனியின் ராஜினாமாவை ஜனாதிபதி இன்னும் ஏற்கவில்லை என்றும், ஜனாதிபதி ஏற்கும் பட்சத்தில் யுபிஎஸ்சிக்கு புதிய தலைவர் நியமிக்கப்படுவார் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மனோஜ் சோனி பதவிக்காலம் இன்னும் 5 ஆண்டுகள் உள்ளது. வரும் 2029ம் ஆண்டு வரை இந்த பொறுப்பில் நீடிக்க முடியும் என்ற சூழலில் அவர் திடீரென ராஜினாமா செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் பயிற்சி பெண் ஐஏஎஸ் அதிகாரியாக பணியாற்றிய பூஜா கேட்கர், தனது அதிகாரத்திற்கு மீறிய சில நடவடிக்கைகளில் ஈடுபட்டதால் பரபரப்பாக பேசப்பட்டார்.

அதைத் தொடர்ந்து அவர் போலி மாற்றுத்திறனாளி சான்றிதழ் சமர்பித்தும், வருமானத்தை குறைத்துக் காட்டி ஓபிசி கிரிமிலேயர் மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பினர் பிரிவின் கீழ் இடஒதுக்கீடு சலுகையை பெற்று ஐஏஎஸ் ஆனது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, பூஜாவைப் போல பல ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் இடஒதுக்கீட்டை தவறாக பயன்படுத்தி பலன் பெற்றது தொடர்பான அவர்களின் பெயர், விவரங்கள் சமூக வலைதளங்களில் பலர் வெளியிட்டனர். இதனால் யுபிஎஸ்சிக்கு கடும் அவப்பெயர் ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில், யுபிஎஸ்சி தலைவர் பதவியை மனோஜ் சோனி ஒரு மாதத்திற்கு முன்பாகவே ராஜினாமா செய்து விட்டார் என கூறப்பட்டிருப்பது பெரும் சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளது.

பிரதமர் மோடிக்கு நெருக்கமானவர் என்பதால் குற்றச்சாட்டுகளில் இருந்து மனோஜ் சோனியை காப்பாற்ற முயற்சிக்கப்படுகிறதா என்கிற கேள்வியையும் ஏற்படுத்தி உள்ளது. அதே சமயம் மனோஜ் சோனி ராஜினாமாவுக்கும், புனே ஐஏஎஸ் அதிகாரி பூஜா கேட்கர் சம்பவத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும், மனோஜ் சோனி தனிப்பட்ட காரணங்களுக்காக ஓய்வு பெற முடிவு செய்திருப்பதாகவும் அரசு தரப்பில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. ராஜினாமாவுக்கு பிறகு குஜராத்தில் உள்ள சுவாமிநாராயண் பிரிவின் கிளையான அனூபம் மிஷனில், தொண்டு செய்வதில் அதிக நேரம் ஒதுக்க மனோஜ் சோனி விரும்புவதாக கூறப்படுகிறது. அவர், கடந்த 2020ம் ஆண்டில் தீட்சை பெற்று அந்த பிரிவில் ஒரு துறவி ஆனது குறிப்பிடத்தக்கது. ஆனாலும் இந்த விவகாரம் அரசியல் ரீதியாக பெரும் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.

* ஒரு மாதமாக மறைத்து வைக்க காரணம் என்ன?
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூனா கார்கே தனது எக்ஸ் தள பதிவில், ‘‘பாஜ, ஆர்எஸ்எஸ் இணைந்து அரசியல் சாசன அமைப்புகளை கையகப்படுவதன் மூலம் அவற்றின் நற்பெயர், ஒருமைப்பாடு, சுதந்திரத்திற்கு பாதிப்பை விளைவித்து வருகின்றன. யுபிஎஸ்சியில் நடந்திருக்கும் பல ஊழல்கள் தேசிய அளவில் கவனம் பெற்றுள்ளது. போலி சாதி, மருத்துவ சான்றிதழ்களால் தகுதியற்ற நபர்கள் தேர்வாகி, கஷ்டப்பட்டு படித்த லட்சக்கணக்கான மாணவர்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர். இதன் காரணமாகதான் யுபிஎஸ்சி தலைவர் வெளியேற்றப்பட்டிருக்கிறார். அவரது ராஜினாமா ஒரு மாதம் ரகசியமாக வைக்கப்பட்டது ஏன்? ஏராளமான ஊழல்களுக்கும் ராஜினாமாவிற்கும் ஏதாவது தொடர்பு உள்ளதா என்பது குறித்து அரசு விளக்க வேண்டும்’’ என கூறி உள்ளார்.

The post பிரதமர் மோடிக்கு நெருக்கமான யுபிஎஸ்சி தலைவர் திடீர் ராஜினாமா: ஐஏஎஸ் அதிகாரி பூஜா கேட்கர் விவகாரம் உள்பட பல மோசடிகள் அம்பலமானதால் அதிரடி முடிவு; இன்னும் 5 ஆண்டுகள் பதவிக்காலம் உள்ள நிலையில் விலகியதால் பெரும் பரபரப்பு appeared first on Dinakaran.

Related Stories: