சென்னையில் 2வது நாளாக 16 விமானங்கள் ரத்து: 30 விமானங்கள் தாமதம்

மீனம்பாக்கம்: சென்னை விமானநிலையத்தில் நேற்று முதல் சர்வதேச அளவில் மைக்ரோசாப்ட் விண்டோஸ் செயலிழப்பு காரணமாக, இன்று 2வது நாளாக வருகை, புறப்பாடு என மொத்தம் 14 விமானங்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளன. மேலும், 30க்கும் மேற்பட்ட விமானங்கள் பலமணி நேர தாமதமாக இயங்கின. இதனால் விமானப் பயணிகள் பெரிதும் அவதிப்பட்டனர். சர்வதேச அளவில் நேற்று முதல் விமானசேவை உள்பட பல்துறைகளில் மைக்ரோசாப்ட் விண்டோஸ்களின் செயல்பாடுகள் திடீரென முடங்கிப் போனது. இதன் காரணமாக, சென்னை விமான நிலையத்தில் நேற்று மதியம் பெருமளவு விமான சேவைகள் பாதிக்கப்பட்டு உள்ளன. இங்கு நேற்று மதியம் முதல் நள்ளிரவு வரை 32 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டது. மேலும், 60க்கும் மேற்பட்ட விமானங்கள் பலமணி நேர தாமதமாக இயங்கின. இதனால் சென்னை விமானநிலையத்தில் ஏராளமான பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபடுவதுடன், அங்கேயே உணவருந்துவதில் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.

இந்நிலையில், சென்னை விமானநிலையத்தில் உள்நாடு மற்றும் சர்வதேச முனையத்தில் இன்று 2வது நாளாக இதுவரை 8 வருகை மற்றும் 8 புறப்பாடு என மொத்தம் 16 விமானங்களின் சேவைகள் ரத்து செய்யப்பட்டு உள்ளன. மேலும், சர்வதேச முனையத்தில் லண்டன், சிங்கப்பூர், கோலாலம்பூர், துபாய், குவைத், அபுதாபி, தோகா, இலங்கை மற்றும் உள்நாட்டு முனையத்தில் இருந்து டெல்லி, மும்பை, கொல்கத்தா, புனே, அந்தமான், திருவனந்தபுரம், கொச்சி, திருச்சி, மதுரை உள்பட 30க்கும் மேற்பட்ட விமானங்களின் சேவைகள் பலமணி நேரம் தாமதமாக இயக்கப்பட்டு வருகின்றன.

இதனால் சென்னை விமான நிலையத்தில் உள்நாடு மற்றும் சர்வதேச முனையங்களில் இன்று 2வது நாளாக ஏராளமான பயணிகள் கடும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். சென்னை விமான நிலையத்தில் இன்று நிலையை ஓரளவு சீரடைந்து உள்ளது. எனினும், இங்கு மைக்ரோசாப்ட் விண்டோஸின் இணையதள சேவை விட்டுவிட்டு கிடைப்பதால், பெருமளவிலான விமானங்களின் சேவையில் பாதிப்பு ஏற்படுகிறது. இன்றும் இணையதள சேவைகளை சீரமைக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இன்று மதியத்துக்குள் முழுமையாக சீரடையும் என எதிர்பார்க்கிறோம். இப்பிரச்னை சென்னை விமான நிலையத்தில் மட்டுமின்றி, சர்வதேச அளவில் மிகப்பெரிய பிரச்னையாக உள்ளது என்று சென்னை விமானநிலைய அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.

The post சென்னையில் 2வது நாளாக 16 விமானங்கள் ரத்து: 30 விமானங்கள் தாமதம் appeared first on Dinakaran.

Related Stories: