சாண்டியாகோ: பசிபிக் பெருங்கடலின் “ரிங் ஆஃப் ஃபயர்” என்று அழைக்கப்படும் பகுதியில் அமைந்துள்ள சிலி நாட்டில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தாக்கியதால் பெரும் பரபரப்பு நிலவுகிறது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோளில் 7.4 ஆக பதிவானதாக ஐரோப்பிய மத்தியதரைகடல் நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென் அமெரிக்க கண்டத்தில் உள்ள சிலி நாட்டின் கடற்கரை நகரமான அன்டோஃபகாஸ்டாவில் இருந்து கிழக்கே 265 கிலோமீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
பூமிக்கு அடியில் 128 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்டிடங்கள் தொடர்ச்சியாக அதிர்ந்ததால் வீடுகளை விட்டு வெளியேறி மக்கள், திறந்தவெளி பகுதிகளில் தஞ்சம் அடைந்தனர். ஆற்றல் மிக்க நிலநடுக்கம் ஏற்பட்ட போதும், சிலியில் உடனடியாக சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை. நிலநடுக்கத்தின் எதிரொலியாக ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து உடனடியாக தகவல்கள் ஏதும் வெளியிடப்படவில்லை.
இந்த நிலநடுக்கம் குறித்து சிலி அதிபர் கேப்ரியல் போரிக் வெளியிட்ட பதிவில், “சக்திவாய்ந்த நிலநடுக்க ஏற்பட்ட போதும், சுனாமி தாக்குதலுக்கான அச்சம் இல்லை, தொடர் மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதுவரை எந்த உயிரிழப்பும் குறித்து தகவல் இல்லை,” என்றும் அவர் பதிவிட்டுள்ளார். முன்னதாக கடந்த ஜனவரி மாதம், வடக்கு சிலியின் டாராபாக்காவில் 5.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. மேலும் கடந்த 2010ம் ஆண்டு சிலி நாட்டில் 8.8 ரிக்டரில் ஏற்பட்ட பூகம்பத்தில் 526 பேர் உயிரிழந்தனர். உலகில் நிலநடுக்கத்தால் அதிகம் பாதிக்கப்படும் நாடுகளில் சிலியும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
The post சிலி நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்… ரிக்டர் அளவு கோளில் 7.4 ஆக பதிவு : சுனாமி எச்சரிக்கை இல்லை!! appeared first on Dinakaran.