பெரியபாளையம், ஜூலை 18: பாவனி அம்மன் கோயிலில் ஆடி முதல் நாளை முன்னிட்ட பக்தர்கள் குவிந்து நீண்ட நேரம் காத்திருந்து சாமி தரிசம் செய்தனர். திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையத்தில் ஆரணி ஆற்றங்கரையில் சுழம்புவாக எழுந்தருளிய புகழ்பெற்ற பவானி அம்மன் திருக்கோயில் உள்ளது. இந்த கோயிலில் ஆடி மாதம் தொடர்ந்து 14 வாரம் வெகு விமரிசையாக விழா நடைபெறும். மேலும் கோயிலுக்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், திருவண்ணாமலை, தமிழகம் மட்டுமல்லாமல் ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி, தெலங்கானா போன்ற மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வாகனங்களிலும், பேருந்துகளிலும் ஒவ்வொரு சனிக்கிழமை பெரியபாளையம் வருவார்கள்.
பின்னர், கோயில் அருகில் வாடகைக்கு விடுதி எடுத்து இரவு தங்கி ஞாயிற்றுக்கிழமை காலை கோயில் வளாகத்தில் ஆண்கள், சிறுவர்கள், பெண்கள் என அனைவரும் முடி காணிக்கை செலுத்தி பொங்கல் மண்டபத்தில் பொங்கலிட்டு ஆடு, கோழிகளை பலியிட்டு வேப்பமர அடியில் படையலிட்டுவார்கள். வேப்பஞ்ேசலை ஆடை அணிந்து கையில் தேங்காய் ஏந்தி கோயிலை சுற்றிவலம் வருவார்கள். அதன்பிறகு இலவச தரிசனம் மற்றும் ₹100 கட்டண தரிசனத்தில் நீண்ட நேரம் காத்திருந்து பவானி அம்மனை வழிபட்டு செல்வார்கள். இந்நிலையில் நேற்று ஆடி மாதம் முதல் நாள் என்பதால் மூலவரான பவானி அம்மனுக்கு காலையில் பால், தயிர், பன்னீர் சந்தனம், இளநீர் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்கள் மூலம் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் வெள்ளிக் கவசம் அணிவிக்கப்பட்டு, மலர்களால் அலங்கரிக்கப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது.
பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் ஏராளமானோர் குவிந்ததால் நீண்ட நேரம் காத்திருந்து அம்மனை தரிசனம் செய்தனர். முன்னதாக பக்தர்கள் ஆற்றில் புனிதநீராடி மஞ்சள் மற்றும் சிகப்பு ஆடைகளை அணிந்து கையில் வேப்பிலை ஏந்தி பவானி அம்மன் கோயிலுக்கு பாதயாத்திரையாக நடந்து வந்தனர். கோயில் வளாகத்தில் உள்ள புற்றுப்கோயிலில் பால் ஊற்றியும், சக்தி மண்டபம் எதிரில் நெய் தீபம் ஏற்றியும், கற்பூரம் ஏற்றியும் அம்மனை தரிசனம் செய்தனர்.
ஆரணியாற்றில் தற்காலிக கொட்டகை அமைக்க தடைவிதிப்பு: நீர்வளத்துறை நடவடிக்கை
பவானி அம்மன் கோயிலின் ஆடித்திருவிழா சனி, ஞாயிற்றுக்கிழமை என 14 வாரங்கள் நடைபெறும். இந்த திருவிழாவிற்கு பல்வேறு பகுதிகளில் இருந்து பல்வேறு வாகனங்களில் வரக்கூடிய பக்தர்கள் சனிக்கிழமை இரவு தங்கி மறுநாள் ஞாயிற்றுக்கிழமை காலை பொங்கல் வைப்பது வழக்கம். அதேபோல், மொட்டையடித்து, வேப்பிலை ஆடை அணிந்து கோயிலை வலம் வந்தும், ஆடு, கோழிகளை பலியிட்டும் பக்தர்கள் தங்கள் நேர்த்திக் கடனை செலுத்துவார்கள். அவ்வாறு ஆடித்திருவிழாவிற்கு வரும் பக்தர்கள் இரவில் தங்குவதற்கு கோயில் நிர்வாகம் சார்பில் கோயில் வளாகத்திலேயே பக்தர்கள் வசதிக்காக கட்டிட வசதி இருந்தது. ஆனால் தற்போது அரசு சார்பில் ₹159 கோடி செலவில் கோயிலைச் சுற்றி வளர்ச்சி பணிகள் நடைபெறுவதால் பக்தர்கள் அங்கு தங்க இடம் இல்லை. இந்நிலையில் பக்தர்கள் தங்குவதற்காக தனி நபர்கள் சிலர் ஆரணியாற்றில் தீப்பிடிக்காத தற்காலிக கொட்கைகளை அமைத்தனர். அப்படி கொட்டகைகள் அமைக்க கூடாது என கடந்த வாரம் நடந்த அதிகாரிகளின் ஆலோசனைக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. அதன்படி கோயில் எதிரே நீர்வளத்துறை அதிகாரிகள் சார்பில் ஆரணியாற்றில் பொக்லைன் இயந்திரம் மூலம் பள்ளம் தோண்டப்பட்டு, கொட்டகை அமைக்கக்கூடாது என நேற்று அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.
The post ஆடி முதல் நாளில் பவானி அம்மன் கோயிலில் குவிந்த பக்தர்கள்: நீண்ட நேரம் காத்திருந்து தரிசனம் appeared first on Dinakaran.