திண்டிவனம் அருகே அக்காள், தங்கை கூட்டு பலாத்காரம்: 15 பேருக்கு 20 ஆண்டுகள் சிறை

 

விழுப்புரம், ஜூலை 17: திண்டிவனம் அருகே சிறுமிகள் கூட்டு பலாத்காரம் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 15 பேருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ.32 ஆயிரம் அபராதம் விதித்து போக்சோ வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்து உத்தரவிட்டது. விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே பிரம்மதேசம் காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட ஒரு கிராமத்தை சேர்ந்த பெண் திருமணமாகி வாழ்ந்து வந்தார். அவருக்கு 9, 7வயது (சம்பவத்தின்போது) மதிக்கத்தக்க இரண்டு மகள்கள் இருந்தனர்.

இதனிடையே இந்த பெண்ணுக்கு வேறொருவருடன் பழக்கம் ஏற்பட்டதால் முதல் கணவர் பிரிந்து சென்றுவிட்டார். இதனால் சிறுமிகளின் தாய் தனது பிள்ளைகளை தாத்தா, பாட்டி வீட்டில் அழைத்து சென்று அவர்கள் பாதுகாப்பில் விட்டு சென்றுள்ளார். சிறுமிகள் இருவரும் புதுச்சேரி மாநிலம் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் சேர்ந்து படித்து வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த 2019ம் ஆண்டு ஜூலை 18ம் தேதி பள்ளிக்கு சென்ற சிறுமிகள் மயக்கமடைந்து சோர்வுடன் காணப்பட்டனர்.

உடனே பள்ளி ஆசிரியர்கள் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதித்தனர். டாக்டர்கள் பரிசோதனை செய்ததில் இரண்டு சிறுமிகளும் கூட்டு பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதனை கண்டு தாய் அதிர்ச்சியடைந்தார். அப்போது புதுச்சேரி குழந்தைகள் நலக்குழு நடத்திய விசாரணையில் தாத்தா, பாட்டி வீட்டில் தங்கியிருந்தபோது தான் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகியிருந்தது தெரியவந்தது.

சம்பவம் நடந்தது விழுப்புரம் மாவட்டம் என்பதால் இம்மாவட்ட குழந்தைகள் நலக்குழுவுக்கு அறிக்கை அனுப்பி விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அதில், குற்றவாளிகள் மற்றும் அவரது நண்பர்கள் என 15 பேர் சேர்ந்து பல மாதங்களாக சிறுமிகளான அக்கா, தங்கையை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமிகளின் தாய் பிரம்மதேசம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன்பேரில் தென்நெற்குணம் கிராமத்தை சேர்ந்த ரவி மகன் தீனதயாளன்(24), ஆறுமுகம் மகன் அஜித்குமார்(22), இருசப்பன் மகன் பிரபாகரன்(23), பிரசாந்த்(20), ராகவன் மகன் ரவிக்குமார்(23), ஆறுமுகம் மகன் அருண்(எ) தமிழரசன்(24), ராமலிங்கம் மகன் மகேஷ்(37), துரைசாமி மகன் ரமேஷ்(30), காவேரி மகன் துரை(47), மோகன்(23), சின்னராசு மகன் செல்வம்(37), சுப்பிரமணி மகன் கமலக்கண்ணன்(30), வாசுதேவன் மகன் முருகன்(40), பெருமாள் மகன் துரைசாமி(55), சின்னராசு மகன் செல்சேகர்(எ) செல்வசேகர்(55) ஆகிய 15 பேர் மீதும் போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை விழுப்புரம் போக்சோ வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. சாட்சிகள் விசாரணை முடிவடைந்த நிலையில் நீதிபதி வினோதா நேற்று தீர்ப்பு கூறினார். அதில் குற்றம்சாட்டப்பட்ட 15 பேருக்கும் இரண்டு பிரிவுகளில் 20 ஆண்டுகள் என மொத்தம் 40 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ.32 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டார். இந்த சிறை தண்டனையை ஏககாலத்தில் அனுபவிக்க உத்தரவிட்டதால் 20 ஆண்டுகள் சிறை தண்டனை மட்டும் 15 பேரும் அனுபவிக்க வேண்டும். சிறை தண்டனை விதிக்கப்பட்ட அனைவரும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

 

The post திண்டிவனம் அருகே அக்காள், தங்கை கூட்டு பலாத்காரம்: 15 பேருக்கு 20 ஆண்டுகள் சிறை appeared first on Dinakaran.

Related Stories: