டேங்கர் லாரி மோதி ஆசிரியை பலி பயத்தில் டிரைவர் தீக்குளித்து தற்கொலை: காப்பாற்ற முயன்ற 2 நண்பர்களும் சாவு; மேலும் 4 பேர் கவலைக்கிடம்

சூலூர்: கோவை அருகே டேங்கர் லாரி மோதி ஆசிரியை பலியானதால், பயந்துபோன டிரைவர் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார். அவரை காப்பாற்ற முயன்ற நண்பர்கள் 2 பேரும் தீயில் கருகி பலியானார்கள். கோவை மாவட்டம் சூலூர் அருகே கொத்துகவுண்டன்புதூர் பகுதியில் தனபால் என்பவரது வீட்டை வாடகைக்கு எடுத்து, பெட்ரோல் டேங்கர் லாரி டிரைவர்கள் அழகுராஜா, முத்துக்குமார், சின்னக்கருப்பு, தினேஷ், வீரமணி, மனோஜ், பாண்டீஸ்வரன் ஆகிய 7 பேர் தங்கி உள்ளனர்.

இவர்கள் தேனி, புதுக்கோட்டை, மதுரை, திண்டுக்கல் பகுதியை சேர்ந்தவர்கள். இவர்கள், இருகூரில் உள்ள இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் கிடங்கில் இருந்து பெட்ரோல், டீசலை டேங்கர் லாரியில் ஏற்றி பல்வேறு ஊர்களில் உள்ள பெட்ரோல் பங்க்குகளுக்கு சப்ளை செய்யும் பணி செய்பவர்கள். லாரியில் மிச்சமிருக்கும் டீசல், பெட்ரோலை கேன்களில் பிடித்து வந்து வீட்டில் வைத்து, குறைந்த விலைக்கு விற்று வந்ததாகவும் கூறப்படுகிறது. இப்படி மீதமான 20 லிட்டர் பெட்ரோலை கேனில் பிடித்து வீட்டில் வைத்திருந்தனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் காலை இருகூர் அருகே டிரைவர் அழகுராஜா டேங்கர் லாரி ஓட்டி வந்து கொண்டிருந்தார். ராவத்தூர் அருகே, சிங்காநல்லூர் திருக்குமரன் நகரை சேர்ந்த சுரேஷ்குமார் என்பவரின் மனைவியும், பள்ளி ஆசிரியையுமான புஷ்பலதா (54) வந்த மொபட் மீது டேங்கர் லாரி மோதியது. இதில் புஷ்பலதா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். இதையடுத்து சிங்காநல்லூர் போலீசார் டிரைவர் அழகுராஜாவை பிடித்து காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரித்தனர்.

பின்னர் சொந்த ஜாமீனில் விடுவித்து, மறுநாள் (நேற்று) காலை மீண்டும் காவல் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என எச்சரித்து அனுப்பி வைத்தனர். வீட்டுக்கு வந்த டிரைவர் அழகுராஜா,நண்பர்களான சின்னகருப்பு, பாண்டீஸ்வரன், தினேஷ், வீரமணி, மனோஜ் ஆகியோருடன் மது அருந்தி உள்ளார். அப்போது விபத்து தொடர்பாகவும், அதில் ஆசிரியை பலியானது குறித்தும் போதையில் நீண்டநேரம் பேசிக்கொண்டு இருந்தார். திடீரென மன உளைச்சலுக்கு ஆளான அழகுராஜா, வீட்டில் கேனில் வைத்திருந்த 20 லிட்டர் பெட்ரோலை எடுத்து தனது உடல் மீது ஊற்றினார். நண்பர்கள் அவரை தடுத்து, காப்பாற்ற முயன்றனர். அந்த நேரத்தில் வீட்டில் பாண்டீஸ்வரன் சமையல் செய்து கொண்டிருந்ததால் பெட்ரோல் பரவி வீட்டில் தீப்பிடித்தது.

இதில் 7 பேர் மீதும் தீப்பற்றிக்கொண்டது. அவர்களில் அழகுராஜா, முத்துக்குமார், சின்னகருப்பு ஆகியோர் சம்பவ இடத்திலேயே கருகி பலியாகினர். பாண்டீஸ்வரன், தினேஷ், வீரமணி, மனோஜ் ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர். அவர்களை அப்பகுதியினர் மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து சூலூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் ஆசிரியை பலியானதும், விபத்துக்கு காரணமான டேங்கர் லாரி டிரைவர் தீக்குளித்து இறந்ததும், காப்பாற்ற வந்த நண்பர்கள் 2 பேர் பலியானதும் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post டேங்கர் லாரி மோதி ஆசிரியை பலி பயத்தில் டிரைவர் தீக்குளித்து தற்கொலை: காப்பாற்ற முயன்ற 2 நண்பர்களும் சாவு; மேலும் 4 பேர் கவலைக்கிடம் appeared first on Dinakaran.

Related Stories: