வாழும் கைவினைப் பொக்கிஷம், பூம்புகார் மாநில விருதுகள் 18 சிறந்த கைவினைஞர்களுக்கு விருதுகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

சென்னை: வாழும் கைவினைப் பொக்கிஷம் விருதுகளை 8 சிறந்த கைவினைஞர்களுக்கும், பூம்புகார் மாநில விருதுகளை 10 சிறந்த கைவினைஞர்களுக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வழங்கினார். சென்னை தலைமை செயலகத்தில் தமிழ்நாடு கைத்தறி தொழில்கள் வளர்ச்சி கழகத்தின் சார்பில் இதற்கான நிகழ்ச்சி நடைபெற்றது. கைவினைத் தொழிலுக்காகவே தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்ட 65 வயதுக்கு மேற்பட்ட சிறந்த கைவினைஞர்களுக்கு தமிழ்நாடு அரசால் “வாழும் கைவினைப் பொக்கிஷம்’’ எனும் விருது வழங்கப்படுகிறது. கைவினைஞர்களை பாராட்டுவதற்கும், அவர்களின் திறனை ஊக்குவிப்பதற்கும், அதன்மூலம் திறனை வெளிக்கொணர்ந்து மற்றவர்களை ஊக்குவிப்பதற்கும் தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சிக் கழகத்தால் இவ்விருது ஆண்டு தோறும் 15 லட்சம் மதிப்பில் வழங்கப்பட்டு வருகிறது. வாழும் கைவினைப் பொக்கிஷம் விருதிற்காக ஒவ்வொரு பிரிவிற்கும் ஒருவர் வீதம் தலா 8 கிராம் தங்கப் பதக்கம், தாமிர பத்திரம், சான்றிதழுடன் ஒரு இலட்சம் ரூபாய்க்கான காசோலை வழங்கப்படுகிறது.

அதன்படி, 2022-23ம் ஆண்டிற்கான “வாழும் கைவினைப் பொக்கிஷம்’’ விருதுகளை – காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் மற்றும் தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த உமாபதி, திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த ராஜகோபால் , திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த மணி ஆச்சாரி , கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த முத்துசுவாமி ஆச்சாரி, தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த கோவிந்தராஜ், திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த சுலைகாள் பீவி மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த தங்கஜோதி ஆகிய 8 விருதாளர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், வாழும் கைவினைப் பொக்கிஷம் விருதிற்கான தலா 1 லட்சம் ரூபாய்க்கான காசோலை, 8 கிராம் தங்கப் பதக்கம், தாமிரப் பத்திரம் மற்றும் சான்றிதழ் வழங்கி சிறப்பித்தார். “பூம்புகார் மாநில விருது” தமிழ்நாட்டின் சிறப்பான கைவினைஞர்களின் கைத்திறத் தொழிலின் பங்களிப்பு, அபிவிருத்தி மற்றும் படைப்புகளை கருத்தில் கொண்டு வழங்கப்படுகிறது. அதிகபட்சமாக பத்து கைவினைஞர்களுக்கு ஆண்டு தோறும் 12 லட்சம் ரூபாய் மதிப்பில் இவ்விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. இவ்விருதுகள் 50,000 ரூபாய் பரிசுத் தொகை, 4 கிராம் தங்கப் பதக்கம், தாமிரபத்திரம் மற்றும் தகுதிச் சான்றிதழும் கொண்டதாகும்.

அதன்படி, 2022-23ம் ஆண்டிற்கான பூம்புகார் மாநில விருதுகளை – தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த ரவி மற்றும் நாகலெட்சுமி, புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த ராஜப்பா , தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த முருகேசன், லோகநாதன் , கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த பூவம்மாள், செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த வரதன், ராஜரத்தினம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த சக்திவேல், கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த லில்லி மேரி ஆகிய 10 விருதாளர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பூம்புகார் மாநில விருதிற்கான தலா 50 ஆயிரம் ரூபாய்க்கான காசோலை, 4 கிராம் தங்கப் பதக்கம், தாமிரப் பத்திரம் மற்றும் சான்றிதழ்களை வழங்கி சிறப்பித்தார்.
இந்த நிகழ்ச்சியில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர்த்துறை முதன்மைச் செயலாளர் தர்மேந்திர பிரதாப் யாதவ், தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சிக் கழகத்தின் மேலாண்மை இயக்குநர் கவிதா ராமு மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post வாழும் கைவினைப் பொக்கிஷம், பூம்புகார் மாநில விருதுகள் 18 சிறந்த கைவினைஞர்களுக்கு விருதுகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார் appeared first on Dinakaran.

Related Stories: