ஒன்றிய பட்ஜெட்டில் தமிழக அரசின் போக்குவரத்து துறை சார்பாக அமைச்சர் தங்கம் தென்னரசு வைத்த கோரிக்கை.. என்ன தெரியுமா?

டெல்லி: ஒன்றிய பட்ஜெட்டில் தமிழகத்தில் போக்குவரத்து மேம்பாடு தொடர்பாக அளிக்கப்பட்ட கோரிக்கை என்ன? என்பதை விரிவாக பார்க்கலாம். வரும் பட்ஜெட்டில் ஒன்றிய அரசிடம் தமிழக அரசு பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துள்ளது. ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம், தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இக்கோரிக்கைகளை கடந்த மாதம் நேரில் வழங்கியுள்ளார். அதில் போக்குவரத்து தொடர்பாக பல்வேறு கோரிக்கைகள் இடம் பெற்றுள்ளன.

சென்னையின் தென்பகுதி வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் நிலையில் தாம்பரம் – செங்கல்பட்டு இடையே சில ஆண்டுகளுக்கு முன் 3வது நடைபாதை அமைக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்துள்ளது. பயணிகள் நெரிசலை சமாளிக்க இது போதுமானதாக இல்லை என்ற நிலையில், 4வது பாதை அமைக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இதேபோல திருப்பத்தூரில் இருந்து கிருஷ்ணகிரி வழியாக ஓசூருக்கு ரயில்பாதை அமைக்கும் திட்டத்தையும் விரைந்து தொடங்க தமிழக அரசு கோரியுள்ளது.

மதுரையில் இருந்து அருப்புக்கோட்டை வழியாக தூத்துக்குடி ரயில் பாதை அமைக்கும் திட்டம் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக முடங்கியுள்ள நிலையில், அப்பணிகளையும் விரைந்து முடிக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் இருந்து ஸ்ரீபெரும்புதூர், ஒரகடம், சிங்கப்பெருமாள் கோயில் வழியாக மதுராந்தகத்திற்கு ரயில்பாதை அமைக்கவும் தமிழக அரசு கோரியுள்ளது. பயணிகள் போக்குவரத்துக்கு மட்டுமல்லாமல் சரக்கு போக்குவரத்துக்கும் தொழில் வளர்ச்சிக்கும் உதவும் வகையில் இந்த திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

சென்னையில் இருந்து சேலம் வழியாக கோவைக்கு மிகஅதிவேக ரயில்வே வழித்தடம் அமைக்க வேண்டும் என்றும் இது சேலத்தில் இருந்து பெங்களூருவுக்கும், கோவையில் இருந்து எர்னாகுளத்திற்கும் நீட்டிக்கும் வகையில் உருவாக்கப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சாலைகளை பொறுத்தவரை தாம்பரத்தில் இருந்து செங்கல்பட்டு வழியாக திண்டிவனத்திற்கு உயர்மட்ட சாலை திட்டத்தை செயல்படுத்தவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. சென்னை – கன்னியாகுமரி நான்கு வழிச்சாலை திட்டத்தை விரிவாக்கவும் ஒன்றிய அரசிடம் தமிழக அரசு கோரிக்கை வைத்துள்ளது. இந்த கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் பட்சத்தில் தமிழக அரசின் போக்குவரத்து வசதிகள் அதிகரித்து பொருளாதார வளர்ச்சி மேம்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

The post ஒன்றிய பட்ஜெட்டில் தமிழக அரசின் போக்குவரத்து துறை சார்பாக அமைச்சர் தங்கம் தென்னரசு வைத்த கோரிக்கை.. என்ன தெரியுமா? appeared first on Dinakaran.

Related Stories: