மீனம்பாக்கம்: பலத்த மழை, சூறைக்காற்று காரணமாக புறப்பாடு, வருகை என சென்னையில் 31 விமான சேவை பாதிக்கப்பட்டது. இதனால் பயணிகள் கடும் அவதிக்குள்ளானார்கள். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்றிரவு 8 மணியிலிருந்து கடுமையான சூறை காற்றுடன் பலத்த மழை பெய்தது. அந்த மழை அவ்வப்போது விட்டு விட்டு, அதே நேரத்தில் இரவு முழுவதும் நீடித்தது. இதனால் சென்னை விமான நிலையத்துக்கு வந்த விமானங்கள் தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்து கொண்டிருந்தன. மதுரை, டெல்லி, அயோத்தி, லக்னோ, கோவை, ஐதராபாத், ராஞ்சி, மும்பை, கோழிக்கோடு, கவுகாத்தி, துபாய், பக்ரைன், ஃபிராங்பார்ட் உட்பட 15 விமானங்கள் நீண்ட நேரமாக தொடர்ந்து வானில் வட்டமடித்தன.
வானிலை சீர் அடையாததால், 269 பயணிகளுடன் துபாயிலிருந்து வந்த எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், 232 பயணிகளுடன் பக்ரைனிலிருந்து வந்த ஃகல்ப் ஏர்வேஸ் விமானம், 172 பயணிகளுடன் கவுகாத்தியிலிருந்து வந்த, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம், 168 பயணிகளுடன் மும்பையில் இருந்து வந்த விஸ்தாரா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் ஆகிய 4 விமானங்கள், பெங்களூருக்கு திருப்பி அனுப்பப்பட்டன. மற்ற விமானங்கள் தொடர்ந்து வானில் வட்டமடித்து பறந்தபடி இருந்தன. அதேபோல் சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய விமானங்களான மும்பை, டெல்லி, கொல்கத்தா, கோவை, மங்களூர், ஐதராபாத், பெங்களூர், கொச்சி, துபாய், பஹ்ரைன், குவைத், தோகா, ஃபிராங்பார்ட், இலங்கை உட்பட 16 விமானங்கள் பல மணி நேரங்கள் தாமதமாக புறப்பட்டு சென்றன.
இந்நிலையில் அவ்வப்போது சூறைக்காற்றும் மழையும் சிறிது ஓய்யும் நேரத்தில், வானில் வட்டமடித்து கொண்டிருந்த விமானங்கள், அவசர அவசரமாக ஒன்றன்பின் ஒன்றாக சென்னையில் தரையிறங்கின. அதேபோல் பெங்களூருக்கு திருப்பி அனுப்பப்பட்ட 4 விமானங்களும், நள்ளிரவு 12 மணிக்கு மேல் சென்னைக்கு திரும்பி வந்தன. சென்னை விமான நிலையத்தில் 15 வருகை விமானங்கள், 16 புறப்பாடு விமானங்கள் என மொத்தம் 31 விமான சேவைகள் பாதிக்கப்பட்டு, பயணிகள் அவதிக்குள்ளாகியினர்.
The post பலத்த மழை, சூறைக்காற்றால் புறப்பாடு, வருகை என சென்னையில் 31 விமான சேவை பாதிப்பு: பயணிகள் கடும் அவதி appeared first on Dinakaran.