செய்யூர் அருகே மழுவங்கரணை கிராமத்தில் நாட்டு சாராயம் காய்ச்சிய முதியவர் கைது: கலெக்டர் நேரில் ஆய்வு


செய்யூர்: சித்தாமூர் அருகேயுள்ள மழுவங்கரணை கிராமத்தில் நாட்டு சாராயம் காய்ச்சியவரை, போலீசார் அதிரடியாக கைது செய்தனர். தகவலறிந்து செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அருண்ராஜ், அங்கு விரைந்து சென்று அப்பகுதியை நேரில் ஆய்வு செய்தார். செங்கல்பட்டு மாவட்டம், சித்தாமூர் அடுத்த மழுவங்கரணை கிராமத்தை சேர்ந்தவர் தேவன் (67). இவர், கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் சாராயம் விற்பனை செய்து வந்துள்ளார். அதன்பின், போலீஸ் கெடுபிடியால் சாராயம் விற்பதை நிறுத்திவிட்டு, கிராமத்தையொட்டிய பகுதியில் சுமார் 50 ஏக்கர் பரப்பளவில் விவசாயம் மற்றும் விறகை எரிய வைத்து விறகுகரி வியாபாரம் செய்து வந்துள்ளார்.தமிழ்நாடு அரசு போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் எரி சாராயம் விற்பனையை இரும்பு கரம் கொண்டு ஒடுக்கியது. இதனால் அந்த பகுதிகளில் சாராயம் விற்பனை முற்றிலும் நின்றுபோனது.

இதனால் சாராயம் கிடைக்காததால் தேவன் அவரது விவசாய பகுதியில் பட்டை, கடுக்காய், வெள்ளம், ஆகியவற்றை பயன்படுத்தி ஊறல் போட்டு நாட்டு சாராயத்தை கடந்த சில தினங்களுக்கு முன்பு சாராயம் காய்ச்சினார்.இந்நிலையில், தேவன் வயலில் நேற்று வேலைக்கு வந்த அதே பகுதியை சேர்ந்த அய்யனார், பெருமாள், மணி ஆகிய 3 பேருக்கு, தேவன் தான் காய்ச்சிய நாட்டு சாராயத்தை கொடுத்துள்ளார். நாட்டு சாராயம் குடித்தவர் சாராயம் காய்ச்சுவது குறித்து சித்தாமூர் போலீசாருக்கு தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்தார். இதனை மேல்மருவத்தூர் இன்ஸ்பெக்டர் ஏழுமலை, சூனாம்பேடு இன்ஸ்பெக்டர் அமிர்தலிங்கம் ஆகியோர் நேற்று விடியற்காலை தேவன் விவசாய நிலத்திற்கு அதிரடியாக சென்று, அங்கு வைத்திருந்த 20 லிட்டர் நாட்டு சாராயம், நிலத்தில் பதுக்கி வைக்கப்பட்ட 200 லிட்டர் ஊரல்கள் மூலப்பொருட்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்து, மதுராந்தகம் மதுவிலக்கு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த மதுராந்தகம் ஆர்டிஓ தியாகராஜன், தாசில்தார் சரவணன் ஆகியோர் மருத்துவ குழுவினருக்கு தகவல் கொடுத்ததின்பேரில், உடனடியாக அங்கு மருத்துவ முகாம் ஏற்பாடு செய்யப்பட்டது. இதனையடுத்து மது அருந்திய 3 பேர் பரிசோதனை செய்யப்பட்டு, மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், நாட்டு சாரயம் காய்ச்சிய தேவனை கைது செய்து, இந்த கிராமத்தில் யாரேனும் நாட்டு சாராயம் குடித்து பாதிக்கப்பட்டுள்ளனர்கள் என பலரை பரிசோதனை செய்தனர். இச்சோதனையில், அந்த கிராமத்தில் 3 பேரை தவிர வேறு யாரும் பாதிக்கப்படவில்லை என மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்நிலையில், செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அருண்ராஜ், மாவட்ட எஸ்பி சாய்பிரனீத், கலால் டிஎஸ்பி வேல்முருகன், மதுராந்தகம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு (பெறுப்பு) அனுசியா மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்தை நேரில் ஆய்வு செய்தனர். தொடர்ந்து, இதுபோன்ற சம்பவங்கள் நிகழாதபடி காவல்துறை மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் அதிகாரிகள் துரிதமாக செயல்பட வேண்டும் என ஊக்குவித்தார்.

The post செய்யூர் அருகே மழுவங்கரணை கிராமத்தில் நாட்டு சாராயம் காய்ச்சிய முதியவர் கைது: கலெக்டர் நேரில் ஆய்வு appeared first on Dinakaran.

Related Stories: