அரசு மருத்துவர்கள் முதுநிலை மருத்துவம் படிக்க 50% உள்ஒதுக்கீடு நிறுத்தி வைத்து அரசாணை வெளியீடு: ரத்து செய்ய மருத்துவர்கள் சங்கம் கோரிக்கை

சென்னை: தமிழ்நாடு மருத்துவ பணியில் உள்ள அரசு மருத்துவர்களுக்கு முதுநிலை மருத்துவம் படிக்க 50% உள் ஒதுக்கீடு இடங்கள் நிறுத்தி வைப்பதாக வெளியிட்ட அரசாணையை ரத்து செய்ய வலியுறுத்தி அரசு மருத்துவர்கள் மற்றும் பட்ட மேற்படிப்பு மருத்துவர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து அரசு மருத்துவர்கள் மற்றும் பட்ட மேற்படிப்பு மருத்துவர்கள் சங்கம் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு மருத்துவ பணியில் உள்ள அரசு மருத்துவர்களுக்கு முதுநிலை மருத்துவம் படிக்க 50% இடங்கள் உள் ஒதுக்கீடாக நீண்ட காலமாக வழங்கப்பட்டு வருகிறது. அதில் குறிப்பிட்ட சில துறைகளில் பணியிடங்கள் இல்லை என்ற காரணத்தை காட்டி 2024-2025ம் ஆண்டு முதல் இந்த ஒதுக்கீடு நிறுத்தி வைக்கப்படுவதாக அரசாணை எண் 151 ஐ மருத்துவத் துறை வெளியிட்டிருக்கிறது. ஆனால் அவர்கள் குறிப்பிடும் துறைகளில் தேசிய மருத்துவ ஆணைய இளநிலை, முதுநிலை படிப்புகள் ஒவ்வொரு துறையிலும் சுமார் 100 பணியிடங்கள் உருவாக்கப்பட வேண்டிய தேவை உள்ளது.

தேசிய மருத்துவ ஆணையம் எம்எஸ்ஆர் 2023 இளநிலை, முதுநிலை படிப்புகள் நடத்த தேவையான குறைந்தபட்ச அளவு மட்டும்தான். ஆனால் நோயாளிகள் எண்ணிக்கைக்கு ஏற்ப மேலும் பணியிடங்கள் உருவாக்கப்பட வேண்டிய தேவையும் உள்ளது. ஆனால் தேவையான பணியிடங்களே உருவாக்காமல் செயற்கையாக மிகையான தோற்றம் உருவாகி வருகிறது எனக் கூறி, குறிப்பிட்ட சிறப்பு மருத்துவர்கள் படிப்பிற்கான இட ஒதுக்கீட்டை அரசு மருத்துவர்களுக்கு தர மறுப்பது எதிர்கால தேவையை கருத்தில் கொள்ளாமல் எடுக்கப்பட்ட பிற்போக்கான நடவடிக்கை ஆகும்.

இதனை அரசு உடனடியாக திரும்ப பெற்று விதிகளின் படி தேவைப்படும் பணியிடங்களை உருவாக்க வேண்டும். இந்த அரசாணை மூலம் எதிர்காலத்தில் அரசு பணியில் சிறப்பு மருத்துவர்களின் எண்ணிக்கை குறைந்து மருத்துவக் கல்லூரிகளுக்கு அங்கீகாரம் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும். தரமான சிறப்பு சிகிச்சைகளும் சேவையும் பாதிக்கப்படும். எனவே அரசு மருத்துவர்கள் மற்றும் பட்ட மேற்படிப்பு மருத்துவர்கள் சங்கம் இந்த அரசாணையை ரத்து செய்ய கோரிக்கை வைக்கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post அரசு மருத்துவர்கள் முதுநிலை மருத்துவம் படிக்க 50% உள்ஒதுக்கீடு நிறுத்தி வைத்து அரசாணை வெளியீடு: ரத்து செய்ய மருத்துவர்கள் சங்கம் கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: