12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மின்ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் காத்திருப்பு போராட்டம்

ஊட்டி, ஜூலை 10: தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் 12 அம்ச கோரிக்கையினை வலியுறுத்தி ஊட்டி பஸ் நிலையம் அருகே மின் வாரிய அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. நீலகிரி கிளைத்தலைவர் ரவி சண்முகம் தலைமை வகித்தார். இப்போராட்டத்தில் அனைத்து காலிப்பணியிடங்களையும் நிரப்ப வேண்டும். வேலைப்பளு ஒப்பந்தத்திற்கு எதிராக வெளியிட்டுள்ள பல்வேறு உத்தரவுகளை திரும்பப்பெற வேண்டும். முத்தரப்பு ஒப்பந்தத்தில் உள்ள அநீதிகளைக்களைந்து அரசு உத்தரவாதத்துடன் கூடிய புதிய ஒப்பந்தத்தை ஏற்படுத்த வேண்டும். மின்வாரியத்தை பல கூறுகளாக பிரித்து தனியார் மயப்படுத்தும் நடவடிக்கையை கைவிட வேண்டும். பணியாளர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கு வழங்க வேண்டிய பணப்பயன்களை வழங்கிட கால தாமதம் செய்யகூடாது. மேலும், அரசு ஊழியர்கள் பெறுகின்ற குடும்ப நல நிதி ரூ.5 லட்சத்தை மின் வாரியத்திலும் அமல்படுத்த வேண்டும். மின் விபத்தில் உயிரிழக்கும் மின்வாரிய பணியாளர்களுக்கு சிறப்பு நிதி ரூ.10 லட்சம் அறிவித்ததற்கான அரசாணைப்படி வாரிய உத்தரவு வெளியிட வேண்டும். என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் நிர்வாகிகள் சண்முகம், வேல்முருகன், ரமேஷ் சிஐடியு மாவட்ட செயலாளர் வினோத், பொருளாளர் நவீன் சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மின்ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் காத்திருப்பு போராட்டம் appeared first on Dinakaran.

Related Stories: