இந்தியன் ஆயில் நிறுவன டேங்கர் லாரி உரிமையாளர்கள் இன்று வேலைநிறுத்தம்

சென்னை: சென்னை இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவன டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் அவசர ஆலோசனை கூட்டம், கொருக்குப்பேட்டையில் நேற்று நடந்தது. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு: தண்டையார்பேட்டை, அத்திப்பட்டு ஆகிய 2 இடங்களில் பெட்ரோல், டீசல் நிரப்பும் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு டேங்கர் லாரிகள் செல்வதற்கான சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளது. மேலும் மெட்ரோ ரயில் திட்டப் பணிகளால் மாற்று வழியில் லாரிகளை இயக்கி சென்றால் அதிக கிலோ மீட்டர் தூரம் சுற்றிச் செல்ல வேண்டியுள்ளது. அதற்கு உண்டான டீசல் பணமும் தருவதில்லை.

சிறு பிரச்னைக்கு கூட ஐஓசி நிர்வாகம் தங்களது ஒப்பந்தத்தை ரத்து செய்து சர்வாதிகார போக்கில் செயல்படுகிறது. இதனால் 8 மாத காலமாக வேலையில்லாமல், டேங்கர் லாரிகள் நிறுத்தி வைக்கப்பட்டு, உரிமையாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. இதனை கண்டித்து 300 லாரிகள் இன்று (10ம் தேதி) வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளன. உடனடியாக லாரி உரிமையாளர் சங்கத்தை அழைத்து பேச்சுவார்த்தை ஈடுபடாவிட்டால், வரும் 26ம் தேதி தமிழகம் முழுவதும் அனைத்து பெட்ரோலிய நிறுவனங்களில் செயல்படும் டேங்கர் லாரிகள் ஒன்றிணைந்து வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

The post இந்தியன் ஆயில் நிறுவன டேங்கர் லாரி உரிமையாளர்கள் இன்று வேலைநிறுத்தம் appeared first on Dinakaran.

Related Stories: