கீழ்குந்தாவில் ‘தெவ்வ’ பண்டிகை கொண்டாட்டம்

மஞ்சூர் : கீழ்குந்தாவில் படுகரின மக்களின் பாரம்பரிய அறுவடை திருவிழாவான ‘தெவ்வ ஹப்பா’ கொண்டாடப்பட்டது. நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே உள்ள கீழ்குந்தாவில் படுகரின மக்களின் குலதெய்வமான காடெ ஹெத்தையம்மன் கோயில் உள்ளது. நூற்றாண்டு பழமை வாய்ந்த இந்த கோயிலில் ஆண்டுதோறும் அறுவடை திருவிழா கொண்டாடுவது வழக்கம். ஜூலை மாதத்தில் நடைபெறும் இத்திருவிழாவை ‘தெவ்வ ஹப்பா’ என குறிப்பிடுகின்றனர்.

குந்தா பகுதியில் நடக்கும் முக்கியத் திருவிழாக்களில் ‘தெவ்வ’ பண்டிகையும் ஒன்றாகும். தொடர்ந்து நடப்பாண்டு திருவிழா கடந்த 1ம் தேதி துவங்கியது. இதைத்தொடர்ந்து விழாவின் முக்கிய அம்சமாக ‘அரிக்கட்டுதல்’ மற்றும் ஹெத்தையம்மனுக்கு காணிக்கை செலுத்தும் நிகழ்ச்சிகள் நடைபெற்றது. முன்னதாக ஆண்டுக்கொரு முறை மட்டுமே திறக்கப்படும் பனகுடி சிவன் கோயில் திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. தொடர்ந்து பனகுடியில் இருந்து ஹெத்தையம்மன் கோயிலுக்கு ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்டார்.

அப்போது குந்தை சீமைக்குட்பட்ட கீழ்குந்தா, மஞ்சூர், கரியமலை, மட்டகண்டி, தூனேரி, பாக்கொரை, எடக்காடு, முக்கிமலை உள்பட 14 ஊர்களில் இருந்து பாரம்பரிய வெள்ளை உடைகளை உடுத்தி வந்திருந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட படுகரின மக்கள் அம்மனை வரவேற்கும் விதமாக கீழ்குந்தா சேலட்டி மைதானத்தில் திரண்டு தரையில் விழுந்து வணங்கினர்.ஹெத்தையம்மன் குடியமர்த்தப்பட்டதும் ‘அரிக்கட்டுதல்’ நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பருவம் தவறாமல் மழை பெய்யவும், விவசாயம் செழிக்க வேண்டி புதிதாக விளைந்த கோதுமை, திணை உள்ளிட்ட பயிர்களை அம்மனுக்கு படைத்தனர். இதை தொடர்ந்து நீண்ட வரிசையில் நின்றபடி அம்மனுக்கு காணிக்கை செலுத்தி தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றினர். தொடர்ந்து அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டதுடன் படுகரின மக்களின் நடனம் மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.

இதற்கான ஏற்பாடுகளை குந்தைசீமை பார்ப்பத்தி அன்னமலை முருகேசன் மேற்பார்வையில் 14 ஊர் சின்னகனி கவுடர் போஜாகவுடர், முன்னாள் மாவட்ட நீதிபதி சந்திரன், விழா ஒருங்கிணைப்பாளர்கள் ராஜேந்திரன், தீபக்பரதன், தேவராஜ், சிவா, செந்தில் பெள்ளன், கென்னடிகிருஷ்ணன், ராமச்சந்திரன் மற்றும் கிழ்குந்தா ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.
விழாவை முன்னிட்டு ஏடிஎஸ்பி சவுந்திரராஜன் தலைமையில் ரூரல் டிஎஸ்பி விஜயலட்சுமி, அனைத்து மகளிர் காவல்நிலைய ஆய்வாளர் முத்துமாரியம்மாள், குந்தா தாசில்தார் கலைச்செல்வி மற்றும் போலீசார், வருவாய்துறையினர் பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

சமையலில் கடுகு பயன்படுத்துவதில்ைல

‘தெவ்வ ஹப்பா’ திருவிழாவை முன்னிட்டு கீழ்குந்தாவில் விழா நடைபெறும் 3 நாட்களும் படுகரின மக்கள் தங்களது பாராம்பரிய சம்பிரதாயப்படி வீடுகளில் சமையல் செய்யும்போது தாளித்தல் மற்றும் எண்னை, கடுகு உள்ளிட்ட பொருட்களை பயன்படுத்துவதில்ைல. இதேபோல் துக்க நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ள மாட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

The post கீழ்குந்தாவில் ‘தெவ்வ’ பண்டிகை கொண்டாட்டம் appeared first on Dinakaran.

Related Stories: