நெடுஞ்சாலைத்துறை இடத்தை ஆக்கிரமித்துள்ள கடைகளால் போக்குவரத்து நெரிசலில் திணறும் கூடங்குளம் ‘மெயின் பஜார்’

* 2 பஸ்கள் சென்றாலே அரை மணி நேரம் பாதிப்பு

* பள்ளி, கல்லூரி, வேலைக்கு செல்வோர் அவதி

கூடங்குளம் : கூடங்குளத்தில் நெடுஞ்சாலைத்துறை இடத்தை கடைகள் ஆக்கிரமித்துள்ளதால் மெயின் பஜார் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கிறது. இதனால் பள்ளி, கல்லூரி, வேலைக்கு செல்வோர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். நெல்லை மாவட்டத்தில் கூடங்குளத்தில் அணுமின் நிலையம் தொடங்கப்பட்ட பிறகு உள்ளூர், வெளியூர் வாகனங்கள் அதிகளவில் வந்து செல்வதால் மெயின் பஜார் பிரதான சாலை எப்போதும் பரபரப்பாக காணப்படுகிறது. நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இந்த சாலையை ஆக்கிரமித்து பல கடைகள் கட்டப்பட்டுள்ளன.

இதனால் நாளடைவில் சாலை குறுகி தற்போது இடநெருக்கடி ஏற்படும் அளவுக்கு சுருங்கிவிட்டது. இப்பகுதியில் உள்ள கடைகளுக்கு செல்பவர்கள் தங்களது வாகனத்தை சாலையோரம் நிறுத்தி செல்வதால் போக்குவரத்து இடையூறு ஏற்படுகிறது. இந்த சாலையில் இரு பஸ்கள் எதிரெதிரே வந்தால் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்படும் சூழல் உள்ளது. இதனால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். அதுவும் பீக்அவர் நேரத்தில் நிலைமை இன்னும் மோசமாகி விடுகிறது.

காலை 8 மணிக்கு இவ்வழியாக அணுமின் நிலைய வேலைக்கு செல்பவர்கள் அதிக வாகனங்களில் ெசல்கின்றனர். பள்ளி, கல்லூரிகளுக்கு செல்வோரும் இந்த சாலையை பயன்படுத்துவதால் போக்குவரத்து கடும் நெருக்கடி ஏற்படுகிறது. இதனால் மெயின் பஜாரை கடக்க பல மணி நேரம் ஆகிறது. இதனால் பணி மற்றும் பள்ளிக்கு செல்வோர் முன்கூட்டியே புறப்பட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இப்பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க சாலையில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதன் மூலம் சிரமமின்றி பயணிக்க வழிவகை செய்ய பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், அணுமின் நிலையம் துவங்கிய பிறகு உள்ளூர், வெளியூர் வாகனங்களின் பயன்பாடு அதிகரித்துள்ளதால் கூடங்குளம் மெயின்பஜார் எப்போதுமே போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படுகிறது. பஜாரில் சாலையை ஆக்கிரமித்து பல கடைகள் கட்டப்பட்டுள்ளதால் தற்போது சாலை குறுகலாகி கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. கடைகளுக்கு செல்பவர்கள் வாகனங்களை சாலையில் நிறுத்தி செல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இதனால் பஸ் செல்வதற்கு கூட இடையூறு ஏற்படுகிறது. எனவே, கூடங்குளம் மெயின்பஜார், மேற்கு மற்றும் கிழக்கு பஜார் பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றினால் இடையூறின்றி வாகனங்களால் சிரமமின்றி பயணிக்க முடியும்’ என்றனர்.

The post நெடுஞ்சாலைத்துறை இடத்தை ஆக்கிரமித்துள்ள கடைகளால் போக்குவரத்து நெரிசலில் திணறும் கூடங்குளம் ‘மெயின் பஜார்’ appeared first on Dinakaran.

Related Stories: