ஆர்.கே.பேட்டை, கும்மிடிப்பூண்டி, ஊத்துக்கோட்டை பகுதிகளில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட 49 வீடுகள் இடித்து தரை மட்டம்: தீக்குளித்த வாலிபரால் பரபரப்பு

ஆர்.கே.பேட்டை: ஆர்.கே.பேட்டை, கும்மிடிப்பூண்டி, ஊத்துக்கோட்டை பகுதிகளில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட 49 வீடுகளை போலீஸ் பாதுகாப்புடன் இடித்து நிலங்களை மீட்டனர். திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை அருகே எஸ்.வி.ஜி.புரம் மலைக்கு அருகில் கடந்த 2000ம் ஆண்டு ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு 106 குடும்பங்களை சேர்ந்தவர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது. இலவச வீட்டு மனை வழங்கி 25 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில் மூன்று குடும்பங்களை சேர்ந்தவர்கள் மட்டும் வீடுகள் கட்டிக் கொண்டு குடியிருந்து வருகின்றனர்.

மற்றவர்கள் குறைந்த விலைக்கு இலவச வீட்டுமனைகள் விற்பனை செய்ததாக கூறப்படுகின்றது. இலவச வீட்டுமனை பெற்ற பயனாளிகள் அதிகபட்சமாக 10 ஆண்டுகளில் வீடு கட்டிக்கொண்டு குடியிருக்க வேண்டும் என்று நிலையில் 25 ஆண்டுகளாக வீடுகள் கட்டிக்கொண்டு குடியேறததால், கடந்த 2 மாதங்களுக்கு முன்பு வருவாய்த் துறையினர் இலவச வீட்டுமனைகள் வழங்கப்பட்ட இடம் அரசுக்கு சொந்தமானது அந்த இடத்தில் யாரும் வீடுகள் கட்டக் கூடாது என்றும் மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டது.

இருப்பினும் சிலர் கூரை மற்றும் சிமெண்ட் சீட் வீடுகள் கட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அரசு வழங்கிய இலவச வீட்டுமனையில் வீடுகள் கட்டிக்கொள்ள அனுமதி வழங்க கோரி மாவட்ட கலெக்டர், திருத்தணி வருவாய் கோட்டாட்சியர், ஆர்கே பேட்டை வட்டாட்சியர் ஆகியோரிடம் பயனாளிகள் மனு வழங்கி இருந்தனர். இந்நிலையில், நேற்று காலை 6 மணிக்கு திருத்தணி டிஎஸ்பி விக்னேஷ், ஆர்.கே.பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் தர்மலிங்கம் ஆகியோர் தலைமையில் 200க்கும் மேற்பட்ட போலீசார் எஸ்.வி.ஜி.புரத்தில் குவிக்கப்பட்டு பாதுகாப்பணியில் ஈடுபட்டனர்.

ஆர்.கே.பேட்டை தாசில்தார் விஜயகுமார் தலைமையில் வருவாய் துறையினர் 6 பொக்லைன் இயந்திரங்கள் மூலம் அனுமதியின்றி அரசு நிலத்தில் கட்டப்பட்டுள்ள 25 ஷீட் வீடுகள் கட்டப்பட்டு வரும் 10 வீடுகள் உட்பட 35 வீடுகளை இடித்து ஆக்கிரமிப்புகள் அகற்றினர். அப்போது வீடுகள் கட்டி வரும் பயனாளிகள் கதறி அழுது தங்களது மனக்குமுறலை வெளிப்படுத்திய சம்பவம் ஆர்.கே. பேட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. வீடுகள் இடிக்கப்பட்ட பகுதியில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட 10-க்கும் மேற்ப்பட்டோரை போலீசார் அங்கிருந்து அழைத்துச் சென்று திருமண மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டு மாலை வீடுகளுக்கு அனுப்பிவைத்தனர். அனுமதியின்றி கட்டப்பட்ட வீடுகள் இடிக்கப்பட்ட சம்பவம் ஆர்.கே.பேட்டை பகுதியில் பரபரப்பை ஏற்ப்படுத்தியது.

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அடுத்த தேர்வழி ஊராட்சி கோட்டக்கரை நேதாஜி நகரைச் சேர்ந்தவர்கள் தினகரன் – கல்யாணி தம்பதி. இவர்கள் சுமார் 50 வருடங்களுக்கு முன்பு பர்மாவில் இருந்து தமிழ்நாட்டிற்கு வந்து தஞ்சம் புகுந்தனர். கணவனை இழந்த கல்யாணி தனது 2 மகன்களுடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் கல்யாணியின் வீட்டின் பின்புறம் சிலர் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டியுள்ளனர். இதில் நடைபாதைக்கான இடத்தை கொடுக்குமாறு அவர்கள் கல்யாணியை மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. பின்பு அதிகாரிகளிடம் புகார் மனுவும் வழங்கப்பட்டதாகவும், 2 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த வட்டாட்சியர், கல்யாணியின் இடத்தை நேரடியாக ஆய்வு செய்து நீதிமன்றத்தை நாடி முறையாக தீர்வு பெறுமாறு இருதரப்புக்கும் எழுத்துப்பூர்வமாக தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

இதைத் தொடர்ந்து கல்யாணிக்கு வருவாய்த்துறை சார்பில், இந்த இடம் ஆக்கிரமிப்பு இடம் எனக்கூறி கடிதம் கொடுத்து வீட்டை அகற்ற முடிவு செய்துள்ளனர். இதற்காக நேற்று காவல்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் மின்வாரிய நிர்வாகிகள் பொக்லைனுடன் அங்கு வந்து வீட்டை இடிக்க தயாராகினர். அப்போது ஒரு வாரம் அவகாசம் தாருங்கள் என அதிகாரிகளிடம் கல்யாணி கெஞ்சியுள்ளார். ஆனால் மின்வாரியத்துறையினர் அதிரடியாக வீட்டின் மின் இணைப்பை துண்டித்துள்ளனர். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான கல்யாணியின் இளைய மகன் ராஜ்குமார்(28), அதிகாரிகளின் நடவடிக்கையை கண்டித்து வீட்டை பூட்டிக்கொண்டு உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தனக்குத்தானெ தீ வைத்துக்கொண்டார். பின்னர் தீக்குளித்தவாறு அவர் வீட்டைவிட்டு வெளியேறி அதிகாரிகள் முன்னிலையில் தெருக்களில் அலறி ஓடினார்.

அப்போது உடனே சுதாரித்துக்கொண்ட காவல்துறையினரும், தீயணைப்புத்துறையினரும் தீயை அணைத்து ராஜ்குமாரை மீட்டு குமிடிப்பூண்டி கோட்டக்கரை அரசு மருத்துவமனையில் அவரை சிகிச்சைக்காக அனுமதித்தனர். 60 சதவீதம் தீக்காயம் அடைந்த நிலையில், அவர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். இதுகுறித்து கும்மிடிப்பூண்டி போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர். ராஜ்குமார் தீக்குளித்தபடி தெருவில் ஓடிய வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ராஜ்குமார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் சூழலில் காவல்துறையினரின் உதவியோடு வருவாய்த்துறையினர் ஆக்கிரமிப்பை அகற்றி இடத்தை மீட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

* ரூ.3 கோடி மதிப்பிலான அரசு நிலம் மீட்பு
பெரியபாளையம் அருகே ஏனம்பாக்கம் கிராமத்தில் அரசு நிலங்களை சிலர் ஆக்கிரமிப்பு செய்வதாக திருவள்ளூர் கலெக்டருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் ஊத்துக்கோட்டை தாசில்தார் மதன் தலைமையில் பெரியபாளையம் வட்டார வளர்ச்சி அலுவலர் அற்புதராஜ், வருவாய் ஆய்வாளர் கீதா, விஏஓ சற்குணம் மற்றும் பொதுப்பனித்துறை அதிகாரிகள் நேற்று ஏனம்பாக்கம் கிராமத்தில் குவிந்தனர். நிலத்தை அளவீடு செய்த அதிகாரிகள் முன்னிலையில் பொக்லைன் இயந்திரம் மூலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த நீர்நிலை மற்றும் வண்டிப்பாதை நிலம் என அரசுக்குச் சொந்தமான சுமார் 5 ஏக்கர் நிலங்கள் மீட்கப்பட்டன. மேலும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த 13 வீடுகளையும் அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. மீட்கப்பட்ட இடங்களின் மொத்த மதிப்பு ரூ.3 கோடி என அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் அந்த கிராமத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

The post ஆர்.கே.பேட்டை, கும்மிடிப்பூண்டி, ஊத்துக்கோட்டை பகுதிகளில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட 49 வீடுகள் இடித்து தரை மட்டம்: தீக்குளித்த வாலிபரால் பரபரப்பு appeared first on Dinakaran.

Related Stories: