வாலிபர் தீக்குளித்த விவகாரம் தாசில்தார் உட்பட 3 பேர் பணியிட மாற்றம்: மாவட்ட ஆட்சியர் உத்தரவு

கும்மிடிப்பூண்டி, ஜூலை 6: கும்மிடிப்பூண்டி அடுத்த தேர்வழி ஊராட்சியில் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட போது வாலிபர் ஒருவர் தீக்குளித்த விவகாரத்தில் தாசில்தார் உட்பட 3 பேரை பணியிட மாற்றம் செய்து திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் உத்தரவிட்டுள்ளார். கும்மிடிப்பூண்டி அடுத்த தேர்வழி ஊராட்சி நேதாஜி நகர் பகுதியில் ராஜ்குமார் என்பவரது இடத்தை வருவாய்த்துறை அதிகாரிகளான கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் பிரீத்தி, எளாவூர் வருவாய் ஆய்வாளர் கோமதி, கிராம நிர்வாக அலுவலர் பாக்கிய ஷர்மா மற்றும் போலீசார் ஆகியோர் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடத்தை பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்ற முயன்றனர்.

அப்போது இடத்தின் உரிமையாளர் ராஜ்குமார் என்ற இளைஞர் வருவாய்துறை அதிகாரிகளிடம் 2 நாள் கால அவகாசம் வழங்குமாறு கெஞ்சியதாக கூறப்படுகிறது. இதற்கு மறுத்த வட்டாட்சியர் பிரீத்தி ஆக்கிரமிப்பை அகற்ற உத்தரவிட்டார். இதையறிந்த வாலிபர் ராஜ்குமார் 3 லிட்டர் பெட்ரோலை உடலில் ஊற்றி தீப்பற்ற வைத்து சாலையில் அங்கும் இங்குமாய் ஓடினார். இதனையறிந்த தீயணைப்பு வீரர்கள் உடனடியாக ரசாயனம் கலந்த கலவையை ராஜ்குமார் மீது ஊற்றி தீயை அணைத்தனர். இதனையடுத்து, ராஜ்குமாரை கோட்டக்கரை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை கே.எம்.சி. மருத்துவமனையில் 80 சதவீதம் தீ காயங்களுடன் அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம் அனைத்து சமூக ஊடங்களிலும் பரவியதை தொடர்ந்து பல அரசியல் கட்சி பிரமுகர்கள் தங்களது கண்டனத்தை தெரிவித்தனர். இதுகுறித்து திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், மேற்கண்ட நேதாஜி நகரில் உள்ள புஞ்சை நிலத்திற்கு ஆஷா என்ற பெயரில் பட்டா உள்ளதாகவும், 40 வருடங்களுக்கு முன்பு பதிவு பெறாத வீட்டு மனைகளாக பிரிக்கப்பட்டபோது வருவாய் துறை வரைபடத்தில் அது நடைபாதையாக இருந்ததாகவும், இது சம்பந்தமாக வருவாய்த்துறை சார்பில் 2023ம் ஆண்டு 2 முறை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள உரிமையாளருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. இந்நிலையில், ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் ஊர் பொதுமக்கள் வருகின்ற மழைக்காலத்தில் மேற்கண்ட ஆக்கிரமிப்பு உள்ள இடம் பெரிதும் இடையூறாக உள்ளது என மாவட்ட ஆட்சியருக்கு மனு கொடுத்ததாக கூறியுள்ளனர்.

அதன் அடிப்படையில் நேற்று முன்தினம் வருவாய்த்துறை, காவல்துறை மின்வாரியத்துறை ஆகிய அதிகாரிகள் முன்னிலையில் பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்ற முயன்றனர். அப்போது ராஜ்குமார் என்ற வாலிபர் பெட்ரோலை உடலில் ஊற்றி தீ கொளுத்தியுள்ளார். தற்போது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இது சம்பந்தமாக, கவனக்குறைவாக செயல்பட்ட கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் பிரீத்தி, எளாவூர் வருவாய் ஆய்வாளர் கோமதி, தேர்வழி கிராம நிர்வாக அலுவலர் பாக்கிய ஷர்மா ஆகியோரை பணியிட மாற்றம் செய்தும் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டதாக இந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

The post வாலிபர் தீக்குளித்த விவகாரம் தாசில்தார் உட்பட 3 பேர் பணியிட மாற்றம்: மாவட்ட ஆட்சியர் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: