முன்னாள் டிஜிபி ஜாபர்சேட் மனைவி பர்வீன் ஜாபர் முறைகேடாக வீட்டுமனை ஒதுக்கீடு பெற்றதாக தொடரப்பட்ட வழக்கை முடித்துவைத்தது உயர்நீதிமன்றம்: சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியது செல்லாது எனவும் உத்தரவு

சென்னை: முன்னாள் டிஜிபி ஜாபர்சேட் மனைவி பர்வீன் ஜாபர் முறைகேடாக வீட்டுமனை ஒதுக்கீடு பெற்றதாக தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் முடித்து வைத்துள்ளது. மேலும் சொத்துக்களை அமலாகத்துறை முடக்கியது செல்லாது என்றும் உத்தரவிட்டுள்ளது. முன்னாள் டிஜிபி ஜாபர்சேட் மனைவி பர்வீன் ஜாபர் முறைகேடாக வீட்டுமனை ஒதுக்கீடு பெற்றதாக தொடரப்பட்ட வழக்கின் தொடர்ச்சியாக புனையப்பட்ட அமலாக்கத்துறை வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் முடித்து வைத்துள்ளது. இதுசம்மந்தமாக தொடரப்பட்ட வழக்கை ஏற்கனவே உச்சநீதிமன்றம் இந்த வழக்கில் முகாந்திரம் இல்லை, மேலும் அரசுக்கு எந்த வருவாய் இழப்பும் இல்லை.

மேலும் தனி நபருடன் சேர்ந்து கூட்டு முயற்சியில் ஈடுபடுவதில் எந்த தடையும் இல்லை என்ற காரணங்களுக்காக உச்ச நீதிமன்றம் பர்வீன் ஜாபர் மீது உள்ள வழக்கை கடந்த மாதம் முடித்து வைத்தது. அடிப்படை வழக்கு உச்சநீதிமன்றத்தால் முடித்து வைக்கப்பட்டதின் பேரில் தன்மீது புனையப்பட்ட அமலாக்கத்துறை வழக்கில் இருந்து தம்மை விடுவிக்க வேண்டும் என்று பர்வீன் ஜாபர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். வழக்கு விசாரணையின் போது அமலாக்கத்துறை வாதங்களையும், பிரதி வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள் ரமேஷ் மற்றும் சுந்தர்மோகன் அமர்வு பர்வீன் ஜாபர் மீது புனையப்பட்ட அமலாக்கத்துறை வழக்கை முடித்து வைத்தது.

ஏற்கனவே டெல்லியில் உள்ள அமலாக்கத்துறையின் சொத்து முடக்கம் தொடர்பான மேல்முறையீட்டுத் தீர்ப்பாயம் பர்வீன் ஜாபர் சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியது செல்லாது என்று தீர்ப்பளித்திருந்தது. இதைத்தொடர்ந்து முடக்கப்பட்ட அவரின் சொத்துக்கள் விடுவிக்கப்படும் எனத் தெரியவருகிறது. 2011ம் ஆண்டு புனையப்பட்ட இந்த வழக்கு 13 ஆண்டுகள் கழித்து முழுமையாக முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இது குறித்து வழக்கறிஞர் முபாரக் அகமது கூறுகையில், ‘‘13 ஆண்டுகள் சட்டப் போராட்டத்திற்கு பின் இறுதியில் நீதியே வென்றுள்ளது. இத்துடன் முன்னாள் முதல்வர் கருணாநிதி தனிச்செயலாளர், முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி ராஜமாணிக்கம் மீது தொடரப்பட்ட அமலாக்கத் துறை வழக்கும் முடித்து வைக்கப்பட்டது’’ என்றார்.

The post முன்னாள் டிஜிபி ஜாபர்சேட் மனைவி பர்வீன் ஜாபர் முறைகேடாக வீட்டுமனை ஒதுக்கீடு பெற்றதாக தொடரப்பட்ட வழக்கை முடித்துவைத்தது உயர்நீதிமன்றம்: சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியது செல்லாது எனவும் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: