சர்வதேச டி20 போட்டியில் இருந்து கோஹ்லியை தொடர்ந்து கேப்டன் ரோகித், ஜடேஜா ஓய்வு

பிரிட்ஜ்டவுன்: ஐசிசி உகல கோப்பை டி20 தொடரில் இந்திய அணி 2வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்த நிலையில், விராத் கோஹ்லியை தொடர்ந்து கேப்டன் ரோகித் ஷர்மா, ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா ஆகியோரும் சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து விடைபெறுவதாக அறிவித்துள்ளனர். அமெரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் இணைந்து நடத்திய டி20 உலக கோப்பை தொடரின் பரபரப்பான இறுதிப் போட்டி, பார்படாஸ் கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது.

கடைசி ஓவர் வரை ரசிகர்களின் இதயத்துடிப்பை எகிறவைத்த அந்த போட்டியில் இந்தியா 7 ரன் வித்தியாசத்தில் தென் ஆப்ரிக்காவை வீழ்த்தி 2வது முறையாக டி20 உலக கோப்பையை முத்தமிட்டது. டாஸ் வென்று பேட் செய்த இந்தியா 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 176 ரன் குவித்த நிலையில் (கோஹ்லி 76, அக்சர் 47, துபே 27), தென் ஆப்ரிக்கா 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 169 ரன் எடுத்து தோல்வியைத் தழுவியது (கிளாஸன் 52, டி காக் 39, ஸ்டப்ஸ் 31, மில்லர் 21). இந்திய பந்துவீச்சில் ஹர்திக் 3, பும்ரா, அர்ஷ்தீப் தலா 2, அக்சர் 1 விக்கெட் வீழ்த்தினர்.

அக்சர் படேல் வீசிய 15வது ஓவரில் 24 ரன் விட்டுக்கொடுத்ததால், தென் ஆப்ரிக்கா வெற்றியை நெருங்கியது. அந்த அணி ஓவருக்கு 6 ரன் எடுத்தாலே போதும் என்ற நிலையில், பும்ரா அமர்க்களமாகப் பந்துவீசி 16வது ஓவரில் 4 ரன், 18வது ஓவரில் 2 ரன் மட்டுமே கொடுக்க ஆட்டம் இந்தியா பக்கம் திரும்பியது. கடைசி ஓவரில் மில்லர் சிக்சருக்கு தூக்கிய பந்தை சூரியகுமார் அமர்க்களமாகப் பிடித்ததும் முக்கிய திருப்பு முனையாக அமைந்தது.

2007ல் நடந்த முதலாவது டி20 உலக கோப்பை போட்டியில் தோனி தலைமையிலான இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றிருந்த நிலையில், 17 ஆண்டுகளுக்குப் பிறகு ரோகித் தலைமையில் இந்தியா மீண்டும் டி20 உலக சாம்பியனாக முடி சூடியது. ஐசிசி நடத்தும் போட்டிகளில் கடந்த 11 ஆண்டுகளாக கோப்பையை வெல்ல முடியாமல் தவித்து வந்த இந்திய அணியின் சோக வரலாறும் இந்த வெற்றியால் முடிவுக்கு வந்தது.

பைனலில் சிறப்பாக விளையாடி ஆட்ட நாயகன் விருது பெற்ற நட்சத்திர வீரர் விராத் கோஹ்லி (35 வயது), சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார் (125 போட்டியில் 4188 ரன், அதிகம் 122*, சராசரி 48.69, சதம் 1, அரை சதம் 38).
அவரைத் தொடர்ந்து, கேப்டன் ரோகித் ஷர்மா, ஆல் ரவுண்டர் ஜடேஜாவும் சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து விடைபெறுவதாக அறிவித்துள்ளனர்.

* ரோகித் (37 வயது) 159 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடி 4231 ரன் (அதிகம் 121*, சராசரி 32.05, சதம் 5, அரை சதம் 32) விளாசியுள்ளார்.

* ஜடேஜா (35 வயது) 74 சர்வதேச டி20ல் 515 ரன் (அதிகம் 46*, சராசரி 21.45) மற்றும் 54 விக்கெட் (சிறப்பு 3/15) எடுத்துள்ளார்.

* இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டும் (51 வயது) இந்த உலக கோப்பை தொடருடன் விடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

* இனி வெற்றிகள் குவியும்…
இந்திய கிரிக்கெட்டில் தற்போது மிகத் திறமையான வீரர்கள் உள்ளனர். அவர்களின் ஆற்றலும், தன்னம்பிக்கையும் வியப்பளிக்கும் வகையில் உள்ளது. ஒரு ஐசிசி டிராபிக்காக நீண்ட காலம் காத்திருந்தோம். இனி அப்படி காத்திருக்க வேண்டிய அவசியம் எழாது. அடுத்த 5 ஆண்டுகளில் இன்னும் பல கோப்பைகளை நாம் வெல்வோம். ராகுல் டிராவிட்

* தொலைபேசியில் வாழ்த்து…
உலக கோப்பையை வென்ற இந்திய அணிக்கு உடனடியாகத் தனது X வலைத்தள பக்கத்தில் வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி, கேப்டன் ரோகித் ஷர்மா, ஆட்ட நாயகன் விருது பெற்ற விராத் கோஹ்லி , தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஆகியோரை செல் போனில் தொடர்பு கொண்டும் வாழ்த்தினார்.

* இந்திய அணிக்கு ரூ.125 கோடி பரிசு
ஐசிசி உலக கோப்பை டி20 தொடரில் 2வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ள இந்திய அணிக்கு ரூ.125 கோடி ரொக்கப்பரிசு வழங்கப்படும் என அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். நமது அணி தொடர் முழுவதும் சிறப்பாக, உறுதியுடன், விளையாட்டு நெறியுடன் செயல்பட்டது. இந்த மகத்தான சாதனைக்காக வீரர்கள், பயிற்சியாளர்கள், உதவியாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்… என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய (பிசிசிஐ) செயலர் ஜெய் ஷா அறிவித்துள்ளார்.

The post சர்வதேச டி20 போட்டியில் இருந்து கோஹ்லியை தொடர்ந்து கேப்டன் ரோகித், ஜடேஜா ஓய்வு appeared first on Dinakaran.

Related Stories: