சரக்குல ‘கிக்’ இல்ல துரைமுருகன் காமெடி

கள்ளச்சாராயத்தை முற்றிலும் ஒழிக்கும் வகையில் கொண்டு வரப்பட்ட மதுவிலக்கு தொடர்பான சட்டத்திருத்த மசோதா மீது செல்வப்பெருந்தகை (காங்கிரஸ்), ஜி.கே.மணி (பாமக), எஸ்.எஸ்.பாலாஜி (விசிக), சதன்திருமலைகுமார் (மதிமுக), நாகை மாலி (மார்க்சிஸ்ட்), தளி ராமச்சந்திரன் (இந்திய கம்யூ.), ஜவஹருல்லா ((மமக) ஈஸ்வரன் (கொமதேக), வேல்முருகன் (தவாக) ஆகியோர் பேசினர். பாமக உறுப்பினர் ஜி.கே.மணி பூரணமதுவிலக்கு கொண்டு வர வேண்டும் என்றார்.

இதற்கு பதில் அளித்து அவை முன்னவர் துரைமுருகன் பேசியதாவது: பலரும் பூரண மதுவிலக்கு பற்றி பேசுகின்றனர். ஆனால் அப்போதே முதல்வர் கருணாநிதி சட்டப்பேரவையில் கூறியிருந்தார். கர்நாடகா, கேரளா, ஆந்திரா, புதுச்சேரி என தமிழகத்தை சுற்றி இருக்கும் மாநிலங்களில் மது விற்கும்போது தமிழ்நாட்டை மட்டும் எப்படி பற்றிக் கொள்ளாத கற்பூரமாக பாதுகாக்கப்பட முடியும்? உழைப்பவர்களின் அசதியை போக்க அவர்களுக்கு மது தேவை. ஆனால் அரசாங்கம் விற்கும் மதுவில் அவர்களுக்கு தேவையான ‘கிக்’ இல்லாததால், கிக் வேண்டும் என்பதற்காக சிலர் கள்ளச்சாராயத்தை குடித்து விடுகின்றனர்.

அரசாங்கம் விற்கும் சரக்கு அவர்களுக்கு சாப்ட் ட்ரிங்க்ஸ் போல மாறிவிடுகிறது. அதனால் விட்டில் பூச்சி விளக்கில் போய் விழுவதை போன்று விழுந்து செத்து விடுகின்றனர். அதற்காக தெருவுக்கு தெரு போலீஸ் ஸ்டேஷன் திறக்க முடியாது. மனிதனாய் பார்த்துத்தான் திருந்த வேண்டும். கள்ளச்சாராய விற்பனைக்கு துணை போகும் அதிகாரிகளை தூக்கில் போடுவோம் என்று கூட சட்டம் இயற்றலாம். ஆனால் எல்லாத்துக்கும் ஒரு நியாயம் இருக்க வேண்டும். நடந்தது நடந்ததாக இருக்கட்டும், இனி நடப்பது நல்லவையாக இருக்கட்டும் என்றார்.

The post சரக்குல ‘கிக்’ இல்ல துரைமுருகன் காமெடி appeared first on Dinakaran.

Related Stories: