மதுபான கொள்கை தொடர்பான விவகாரம்; கெஜ்ரிவாலுக்கு 14 நாள் நீதிமன்ற காவல்: சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அதிரடி உத்தரவு


புதுடெல்லி: டெல்லி மதுபானக் கொள்கை தொடர்பான விவகாரத்தில், சிபிஐ அமைப்பு தொடர்ந்த வழக்கில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் வழங்கி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது. டெல்லியில் கடந்த 2021ம் ஆண்டு நவம்பரில் கொண்டு வரப்பட்ட புதிய மதுபானக் கொள்கை வழக்கில் கடந்த மார்ச் 21ம் தேதி அமலாக்கத்துறையால் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவால் நீதிமன்றக் காவலில் திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். மேலும் மதுபானக் கொள்கை தொடர்பான வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சிறப்பு நீதிமன்றம் வழங்கிய ஜாமீனுக்கு, டெல்லி உயர்நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டது. இதனால் அவர் சிறையில் இருந்து வெளியில் வருவதில் சிக்கல் ஏற்பட்டது.

இதுபோன்ற பரபரப்பான சூழலில் டெல்லி மதுபானக் கொள்கை தொடர்பான வழக்கில் திகார் சிறையில் இருந்த முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை சிபிஐ விசாரணை அமைப்பு கடந்த 28ம் தேதி நள்ளிரவில் கைது செய்தது. இதையடுத்து இதுதொடர்பான வழக்கை விசாரித்த சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி, அமிதாப் ராவத், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மூன்று நாள் சிபிஐ காவல் விதித்து கடந்த 29ம் தேதி உத்தரவிட்டிருந்தார். இந்த நிலையில் மேற்கண்ட சிபிஐ காவல் முடிவடைந்த நிலையில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று பிற்பகல் சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி சுனேனா சர்மா முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார்.

சிபிஐ அமைப்பு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘‘டெல்லி மதுபானக் கொள்கை விவகாரத்தில் அரவிந்த் கெஜ்ரிவாலை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க வேண்டும். மேலும் நீதிமன்றம் வழங்கிய மூன்று நாட்களில் அரவிந்த் கெஜ்ரிவால் போதிய ஒத்துழைப்பு எங்களுக்கு வழங்கவில்லை. அவர் வேண்டுமென்றே அதுபோன்ற செயலில் ஈடுபட்டார். அவர் செல்வாக்குமிக்க அரசியல்வாதி ஆவார். அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நிவாரணம் கொடுத்தால் அவர் வழக்கின் சாட்சிகளின் மீது தனது தனிப்பட்ட அதிகாரம் மற்றும் செல்வாக்கை பயன்படுத்தி ஆதாரங்களை சிதைக்கும் வேலையில் ஈடுபடுவார். அது விசாரணைக்கு மிகப்பெரிய தடையாக அமைந்து விடும்’’ என்று தெரிவித்தார்.

இதையடுத்து இருதரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதி சுனேனா சர்மா, ‘‘டெல்லி மதுபான கொள்கை தொடர்பான விவகாரத்தில், சிபிஐ அமைப்பு தரப்பில் தொடரப்பட்ட வழக்கில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜூலை 12ம் தேதி வரையில், அதாவது 14 நாட்கள் நீதிமன்ற காவல் வழங்குவதாக உத்தரவிட்டார். இதையடுத்து முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மீண்டும் திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.

The post மதுபான கொள்கை தொடர்பான விவகாரம்; கெஜ்ரிவாலுக்கு 14 நாள் நீதிமன்ற காவல்: சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அதிரடி உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: