கேரள கூட்டுறவு வங்கி ஊழல்; மார்க்சிஸ்ட் கட்சியின் நிலம், வங்கி டெபாசிட்டுகள் முடக்கம்: அமலாக்கத்துறை அதிரடி


புதுடெல்லி: கேரள மார்க்சிஸ்ட் கட்சி சட்ட விரோத பண மோசடியில் ஈடுபட்டுள்ளதாக கூறி அந்த கட்சிக்கு சொந்தமான ரூ.73 லட்சம் மதிப்பு நிலம் மற்றும் வங்கி டெபாசிட்டுகளை அமலாக்கதுறை முடக்கி உள்ளது. கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள கருவன்னூர் கூட்டுறவு வங்கி மார்க்சிட் கட்சியால் நடத்தப்படுகிறது. இந்த வங்கி ஒரே சொத்தின் பெயரில் பல முறை போலியாக கடன்கள் வழங்கியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த வங்கியில் ரூ.150 கோடிக்கு மேல் மோசடி நடந்ததாக கூறப்பட்டது. இதையடுத்து இந்த விவகாரத்தில் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது.

திருச்சூர், இரிஞ்சாலக்குடாவில் உள்ள வங்கி கிளை உட்பட 6 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கட்சியை சேர்ந்த பிரமுகர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டனர். வங்கியின் கமிஷன் ஏஜென்ட் உள்ளிட்ட பலரின் ரூ.28.65 கோடி சொத்துகளை அமலாக்கத்துறை பறிமுதல் செய்தது. கடந்த ஆண்டு 55 தனிநபர்கள்,நிறுவனங்கள் மீது அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. இந்நிலையில்,மார்க்சிஸ்ட் கட்சிக்கு சொந்தமான ரூ.73 லட்சம் மதிப்புள்ள நிலம், வங்கி டெபாசிட்டுகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. கூட்டுறவு வங்கியில் ஊழல் நடந்துள்ளது என்ற அமலாக்கத்துறையின் குற்றச்சாட்டை மார்க்சிஸ்ட் மறுத்துள்ளது.

The post கேரள கூட்டுறவு வங்கி ஊழல்; மார்க்சிஸ்ட் கட்சியின் நிலம், வங்கி டெபாசிட்டுகள் முடக்கம்: அமலாக்கத்துறை அதிரடி appeared first on Dinakaran.

Related Stories: