மக்களவையில் தொடர்ந்து 2வது முறையாக சபாநாயகராக ஓம்பிர்லா மீண்டும் தேர்வு: பதவியேற்றதும் எமர்ஜென்சி குறித்த தீர்மானம் கொண்டு வந்ததால் அவையில் கடும் அமளி

புதுடெல்லி: மக்களவையில் தொடர்ந்து 2வது முறையாக சபாநாயகராக ஓம்பிர்லா தேர்வு செய்யப்பட்டார். சபாநாயகருக்கான அரிதான தேர்தலில் குரல் வாக்கெடுப்பு மூலம் அவர் தேர்வு செய்யப்பட்டார். பதவியேற்றதும் முதல் தீர்மானமாக எமர்ஜென்சி குறித்து ஓம்பிர்லா பேசியதால் மக்களவையில் கடும் அமளி ஏற்பட்டது. ஒன்றியத்தில் 3வது முறையாக பாஜ தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிப் பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, 18வது மக்களவை கூட்டத்தொடர் கடந்த 24ம் தேதி தொடங்கியது. முதல் 2 நாட்கள் புதிய எம்பிக்கள் பதவியேற்றதைத் தொடர்ந்து, சபாநாயகர் தேர்வு நேற்று நடைபெற்றது.

வழக்கமாக ஆளும் கட்சி, எதிர்க்கட்சிகள் ஒருமித்த கருத்துடன் சபாநாயகர் தேர்வு செய்யப்படும் நிலையில், இம்முறை துணை சபாநாயகர் பதவியை எதிர்க்கட்சிக்கு ஒதுக்க பாஜ தரப்பில் எந்த உறுதியும் தரப்படாததால், சபாநாயகர் தேர்தலில் போட்டியிட காங்கிரஸ் முடிவு செய்தது. இதனால், பாஜ தரப்பில் ஓம் பிர்லாவும், இந்தியா கூட்டணி தரப்பில் காங்கிரசின் மூத்த எம்பி கே.சுரேஷும் சபாநாயகர் பதவிக்கு வேட்புமனுதாக்கல் செய்தனர். காலை 11 மணிக்கு அவை கூடியதும், சபாநாயகர் பதவிக்கு ஓம் பிர்லாவை முன்மொழிந்து பிரதமர் மோடி தீர்மானம் கொண்டு வந்தார்.

இந்த தீர்மானத்தின் மீது குரல் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில், தீர்மானம் வெற்றி பெற்றதாக இடைக்கால சபாநாயகர் ப்ர்த்ருஹரி மகதாப் அறிவித்தார். தீர்மானத்தின் மீது மக்களவை உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் காகித சீட்டில் வாக்களிக்கும் டிவிசன் வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தவில்லை. இதையடுத்து, சபாநாயகராக ஓம் பிர்லா தேர்வு செய்யப்பட்டதாக மகதாப் அறிவித்தார். உடனே, பிரதமர் மோடியும், நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ இருவரும் ஓம்பிர்லா இருக்கைக்கு சென்று அவரை வரவேற்றனர்.

அவர்களுடன் எதிர்க்கட்சி தலைவரான ராகுலும் ஓம்பிர்லாவை வரவேற்று கைகுலுக்கினார். பிரதமர் மோடியும், ராகுலும், ஓம்பிர்லாவை சபாநாயகர் இருக்கைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு இடைக்கால சபாநாயகர் மகதாப் எழுந்து நின்று, ஓம்பிர்லாவுக்கு வழிவிட்டார். இதையடுத்து, தொடர்ந்து 2வது முறையாக ஓம்பிர்லா மக்களவை சபாநாயகராக பொறுப்பேற்றுக் கொண்டார். மக்களவையில் தொடர்ந்து 2வது முறையாக பதவியேற்கும் 5வது சபாநாயகர் ஓம்பிர்லா என்பது குறிப்பிடத்தக்கது. அவருக்கு மோடி, ராகுல் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.

அப்போது பிரதமர் மோடி பேசுகையில், ‘‘சபாநாயகர் பிர்லாவின் பணி புதிய எம்பிக்களுக்கு உத்வேகமாக இருக்க வேண்டும். அடுத்த 5 ஆண்டுகள் உங்கள் வழிகாட்டுதலை எதிர்நோக்குகிறேன். 1980 முதல் 1989 வரையிலான காலகட்டத்தில் பல்ராம் ஜாக்கருக்குப் பிறகு முழு 5 ஆண்டுகள் பதவி வகித்து 2வது முறையாக சபாநாயகரான முதல் நபர் பிர்லா. அவர் மேலும் பல உச்சங்களை பெறுவார் என நம்புகிறேன்’’ என்றார். எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி பேசுகையில், ‘‘அவையில் மக்களுக்காக குரல் எழுப்ப எதிர்க்கட்சிகள் அனுமதிக்கப்படும் என்று நம்புகிறேன். இந்த முறையாகவும், சிறப்பாகவும் செயல்பட வேண்டுமென எதிர்க்கட்சிகள் விரும்புகின்றன.

அதற்கு, நம்பிக்கையுடன் ஒத்துழைப்பது மிகவும் முக்கியம். இது மக்களின் குரலை பிரதிபலிக்கக் கூடிய சபை. நிச்சயமாக இங்கு அரசுக்கு அரசியல் அதிகாரம் உள்ளது. அதே சமயம் எதிர்க்கட்சிகளும் மக்களின் குரலைப் பிரதிபலிக்கின்றன. எனவே, சபையில் எங்களையும் பேச அனுமதிப்பீர்கள் என்று நான் நம்புகிறேன்’’ என்றார். சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ், ‘‘நீங்கள் அவையை பாரபட்சமின்றி வழிநடத்திச் செல்வீர்கள், எல்லாக் கட்சிகளுக்கும் சமமான வாய்ப்பையும் மரியாதையையும் அளிப்பீர்கள் என்று நாங்கள் நம்புகிறோம்’’ என்றார். திமுக எம்பி டி.ஆர்.பாலு பேசுகையில், ‘‘நீங்கள் பாஜ எம்பிக்களால் தேர்வு செய்யப்பட்டிருந்தாலும், சபாநாயகருக்கு எந்த கட்சியும் கிடையாது. இனி நீங்கள் எதிர்க்கட்சி, ஆளும்கட்சியை சமமாக நடத்த வேண்டும்’’ என வலியுறுத்தினார்.

ஆனால், சபாநாயகர் ஓம்பிர்லா பேசுகையில், ‘‘கருத்து வேறுபாடுகள், விமர்சனங்கள் இருந்தாலும், அவையில் இடையூறுகள் இருக்காது என நம்புகிறேன்’’ என்று கூறியவர், சிறிது நேரத்திலேயே எமர்ஜென்சி குறித்த கண்டன தீர்மானத்தை வாசித்தது அவையில் கடும் அமளியை ஏற்படுத்தியது. எதிர்க்கட்சிகளின் கடுமையான எதிர்ப்புக்கு மத்தியில் சபாநாயகர் ஓம்பிர்லா, ‘‘ஜூன் 25, 1975 இந்திய வரலாற்றில் எப்போதும் ஒரு கருப்பு அத்தியாயமாக நினைவுகூறப்படும். இந்த நாளில், அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி அவசரநிலையை அமல்படுத்தி அம்பேத்கர் உருவாக்கிய அரசியலமைப்பை தாக்கினார்’’ என தீர்மானத்தை வாசித்தார்.

அதைத் தொடர்ந்து எம்பிக்கள் அனைவரும் ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்துமாறு சபாநாயகர் கூறியபோதும் எதிர்க்கட்சியினர் கோஷமிட்டபடி இருந்தனர். இந்த அமளியுடன் அவை இன்றைக்கு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. பின்னர் எமர்ஜென்சியை கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் பாஜ எம்பிக்கள் பதாகைகள் ஏந்தி போராட்டம் நடத்தினர். சபாநாயகராக பிர்லா பதவியேற்ற முதல் நாளே எமர்ஜென்சி குறித்து பேசி எதிர்க்கட்சிகளை அமளி செய்ய தூண்டியிருப்பது பெரும் விமர்சனத்திற்குள்ளாகி இருக்கிறது.

* இன்று கூட்டுக்கூட்டத்தில் ஜனாதிபதி முர்மு உரை
மக்களவையைத் தொடர்ந்து மாநிலங்களவை இன்று கூடுகிறது. புதிய அரசின் முதல் கூட்டத்தொடர் என்பதால் இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையாற்றி தொடங்கி வைக்க உள்ளார். அதைத் தொடர்ந்து ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் நடைபெறும். இதற்கு பிரதமர் மோடி பதிலளித்து பேசுவார். அதைத் தொடர்ந்து ஜூலை 3ம் தேதியுடன் கூட்டத்தொடர் நிறைவடையும்.

* டிவிஷன் வாக்கெடுப்பு கேட்காதது ஏன்?: காங்.
பொதுவாக மக்களவையில் தீர்மானம் நிறைவேற்ற குரல் வாக்கெடுப்பு முதலில் நடத்தப்படும். இந்த வாக்கெடுப்பு முடிவை எதிர்க்கட்சிகள் ஏற்க மறுத்து ஆட்சேபம் தெரிவித்தால், டிவிசன் வாக்கெடுப்பு நடத்தப்படும். இதில், ஆம், இல்லை என வாக்களிக்க வேண்டும். நேற்று சபாநாயகர் தேர்வில் காங்கிரஸ் சார்பில் டிவிசன் வாக்கெடுப்பு கேட்கப்படவில்லை. இது குறித்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் அளித்த விளக்கத்தில், ‘‘இந்தியா கூட்டணி கட்சிகள் தங்களின் ஜனநாயக உரிமையை பயன்படுத்தி, மக்களவை சபாநாயகராக கொடிகுன்னில் சுரேசை ஆதரித்து தீர்மானத்தை கொண்டு வந்தன. அதன் மீது குரல் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதன் பிறகு டிவிஷன் வாக்கெடுப்பு கேட்கப்படவில்லை. இதற்குக் காரணம், பிரதமர் மோடி மற்றும் பாஜ கூட்டணியின் செயல்பாடுகளில் ஒருமித்த மனப்பான்மை மற்றும் ஒத்துழைப்பு மேலோங்க வேண்டும் என்பதற்காகத்தான்’’ என்றார்.

* டிவிசன் வாக்கெடுப்பு நடத்த பாஜவுக்கு பயம்
திரிணாமுல் காங்கிரஸ் எம்பி அபிஷேக் பானர்ஜி அளித்த பேட்டியில், ‘‘அவையில் யாராவது ஒரு எம்பி கேட்டாலும், டிவிசன் வாக்கெடுப்பு நடத்த வேண்டும். ஆனால், பல்வேறு எதிர்க்கட்சி எம்பிக்கள் கேட்டும், டிவிசன் வாக்கெடுப்பை அரசு தரப்பில் நடத்தவில்லை. இதற்கு காரணம் அவர்களுக்கு வெற்றிக்கு தேவையான போதிய பலம் இல்லை என்பதால்தான். போதிய பலமில்லாமல் தான்இந்த அரசு செயல்படுகிறது. இது சட்டவிரோதம், அநீதி, வெட்கக்கேடு, அரசியலமைப்புக்கு எதிரானது’’ என்றார். நாடாளுமன்றத்தில் தற்போதுள்ள 542 எம்பிக்களில் பாஜ கூட்டணிக்கு 293 உறுப்பினர்களும், இந்தியா கூட்டணிக்கு 233 எம்பிக்களும் (ராகுல் காந்தி வயநாடு தொகுதி எம்பி பதவியை ராஜினாமா செய்ததால்) இருப்பது குறிப்பிடத்தக்கது.

* எதிர்க்கட்சி தலைவராக ராகுல் நியமனம் ஏற்பு
இந்தியா கூட்டணி கட்சிகள் ஆலோசனைக் கூட்டத்தில் எதிர்க்கட்சி தலைவராக ராகுல் காந்தி நேற்று முன்தினம் தேர்வு செய்யப்பட்டார். அவரை மக்களவை எதிர்க்கட்சி தலைவராக சபாநாயகர் ஓம்பிர்லா நேற்று முறைப்படி அங்கீகரித்தார். இதுதொடர்பாக மக்களவை செயலகம் வெளியிட்ட அறிவிப்பில், ‘‘காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, ஜூன் 9 முதல் மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவராக அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்படுகிறார்’’ என கூறப்பட்டுள்ளது. தன்னை எதிர்க்கட்சி தலைவராக நியமித்த காங்கிரஸ் தலைவர் கார்கே உள்ளிட்ட தலைவர்களுக்கு நன்றி தெரிவித்த ராகுல், ‘‘நாடாளுமன்றத்தில் ஒவ்வொரு இந்தியரின் குரலையும் எழுப்புவோம், நமது அரசியலமைப்பைப் பாதுகாப்போம், தேசிய ஜனநாயக கூட்டணியின் செயல்களுக்கு அரசை பொறுப்பேற்கச் செய்வோம்’’ என்றார்.

* முதல் முறையாக கைகுலுக்கிய மோடி, ராகுல்
மக்களவையில் நேற்று ஓம்பிர்லாவை சபாநாயகர் இருக்கைக்கு அழைத்துச் செல்வதற்காக வந்த போது பிரதமர் மோடியும், ராகுல் காந்தியும் பரஸ்பரம் கைகுலுக்கி வரவேற்றுக் கொண்ட வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளன. இதற்கு முன், மக்களவையில் பல்வேறு விவாதங்களில் இரு தலைவர்களும் ஒருவரை ஒருவர் காரசாரமாக விமர்சித்து பேசிய நிலையில், தற்போது முதல் முறையாக அவையில் கைகுலுக்கி உள்ளனர்.

The post மக்களவையில் தொடர்ந்து 2வது முறையாக சபாநாயகராக ஓம்பிர்லா மீண்டும் தேர்வு: பதவியேற்றதும் எமர்ஜென்சி குறித்த தீர்மானம் கொண்டு வந்ததால் அவையில் கடும் அமளி appeared first on Dinakaran.

Related Stories: