மாநில பிரிவினையால் ஏற்பட்ட நஷ்டத்தை விட ஆந்திராவில் ஜெகன்மோகன் ஆட்சியில் இரட்டிப்பு இழப்பு

*வெள்ளை அறிக்கை வெளியிட்டு முதல்வர் சந்திரபாபு நாயுடு பேச்சு

திருமலை : ஆந்திர மாநில பிரிவினையால் ஏற்பட்ட நஷ்டத்தை விட ஜெகன்மோகன் ஆட்சியில் இரட்டிப்பு இழப்பு ஏற்பட்டுள்ளது என்று வெள்ைள அறிக்கை வெளியிட்டு முதல்வர் சந்திரபாபு நாயுடு பேசினார்.ஆந்திர மாநிலம் அமராவதியில் உள்ள வெலகம்புடியில் உள்ள தலைமைச் செயலகத்தில் முதல்வர் சந்திரபாபு நாயுடு போலவரம் அணை குறித்த வெள்ளை அறிக்கை நேற்று வெளியிட்டார். அப்போது போலவரம் அணை கட்டும் திட்டத்தில் கடந்த ஆட்சியில் நடந்து கொண்ட விதத்தால் ஏற்பட்ட இழப்பு குறித்து விளக்கம் அளித்து முதல்வர் சந்திரபாபு நாயுடு பேசியதாவது:

மாநிலத்தின் வளர்ச்சிக்கு உயிர்நாடியாக விளங்கும் திட்டம் போலவரம். மக்களுக்கு உண்மை நிலையை தெரிவிக்கவே இந்த வெள்ளை அறிக்கை. போல வரம் அணை கட்ட வேண்டும் என 1951ம் ஆண்டு முடிவு செய்யப்பட்டது. ஆனால் நிதி பற்றாக்குறையால் அப்போது காட்டன்துறை தவளைஸ்வரம் அணையை கட்டினார். போலவரம் அணை கட்டப்படுவதன் மூலம் 50 லட்சம் கன அடி தண்ணீர் கோதாவரி ஆற்றில் இருந்து திசை திருப்பும் திட்டமாகும். இதன் போலவரம் அணையில் முழு கொள்ளவு 322 டிஎம்சி வரை தண்ணீர் பயன்படுத்திக் கொள்ளும் வசதி உள்ளது. கடலுக்கு சென்று கலக்கக்கூடிய 500 முதல் 700 டிஎம்சி தண்ணீரை இந்த அணை மூலமாக மாநிலம் முழுவதும் உள்ள ஏரி குளங்களை இணைத்து நிரப்பி கொண்டால் மாநிலத்தில் வறட்சி என்பதே இருக்காது.

இந்த திட்டத்தின் மூலம் 7,20,000 ஏக்கர் பாசனத்திற்கும், 23.50 லட்சம் ஆயக்கட்டுக்கு, 28.50 லட்சம் மக்களுக்கான குடிநீர் தேவை பூர்த்தி செய்யும், 950 மெகாவாட் மின்சார உற்பத்தி, சுற்றுலா மற்றும் படகு போக்குவரத்துக்கும், வருமானம் ஈட்டி தரும் பயனுள்ள திட்டம். மாநிலத்தில் உள்ள நிபுணர்கள், வல்லுநர்கள் உட்பட அனைவரின் ஆலோசனைகளையும் ஏற்போம். எங்களை வெற்றி பெற செய்த மக்கள் வெற்றிபெற வேண்டும், மாநிலம் நிலைக்க வேண்டும், 25 நாட்களில் பட்ஜெட் தாக்கல் செய்ய வேண்டும். அனைத்து ஆவணங்களும் இணையதளங்கள் மூலம் அனைவரும் பார்க்கும் விதமாக வைக்கப்படும்.

போலவரமும், அமராவதியும் ஆந்திர மாநிலத்தின் இரு கண்கள். ஜெகன் மோகன் அழித்த போலவரம் திட்டத்தின் அழிவு தேசத்திற்கு எதிரான அழிவு. இந்திட்டத்தின் மூலம் மாநிலத்திற்கு கிடைக்கும் நீர்மின்சாரம் முக்கியமானது. மாநில பிரிவினையால் ஏற்பட்ட இழப்பை காட்டிலும் ஜெகன்மோகனின் ஆட்சியால் நடந்த இழப்பு அதிகம்.

இந்த திட்டம் நிறைவேறினால் விவசாயம் வளர்ச்சி பெறும். இதனை கருத்தில் கொண்டு 2014- 2019 இடையே எனது ஆட்சியில் போலவரத்துக்கு ரூ.11,762 கோடி செலவு செய்தோம். ஜெகன்மோகன் அரசு செலவழித்தது ரூ.4,167 கோடி.

ஜெகன்மோகன் ஆட்சிக்கு வந்ததும் பணிகளை நிறுத்தி, 2 பருவகால மழை முடிந்த பிறகு தொடங்கியதால் டயாபிராம் சுவர் சேதமடைந்தது. ஐதராபாத் ஐஐடி குழு டயாபிராம் சுவர் சேதமடைந்தது குறித்து தெரிவித்தும் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகுதான் ஜெகன்மோகனுக்கு டயாபிராம் சுவர் சேதம் குறித்து தெரிந்தது. 2009ல் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி ஒப்பந்ததாரரை மாற்றியதால் தலைமைப் பணிகள் நிறுத்தப்பட்டன. அதேபோன்று அவரது மகன் ஜெகன்மோகன் ஒப்பந்ததாரரை மாற்றினார்.

2019ம் ஆண்டு ஆகஸ்ட் 16ம் தேதி பிபிஏ எச்சரிக்கை செய்து ஏஜென்சிகளை மாற்ற வேண்டாம் என முதன்மை செயலாளருக்கு கடிதம் எழுதியது. நிதி ஆயோக் குழு பழைய அரசாங்கத்தின் தவறுகளை சுட்டிக்காட்டியது. காபர் அணை இடைவெளிகளை நிறைவு செய்யும்போது மாற்றப்பட்டது. 2018ல் ரூ.436 கோடியில் முடிக்கப்பட்ட டாயபிராம் சுவர் பழுதுக்கு ரூ.447 கோடிக்கு செய்தனர்.

ஆனாலும் புதிய டயாபிராம் கட்ட ரூ.990 கோடி செலவாகும். புதிய டயாபிராம் சுவர் கட்ட குறைந்தது 2 சீசன்கள் தேவை. காபர் டேம் கசிவால் எந்த பணியும் செய்ய முடியாது. ஜெகன்மோகன் ஆட்சியில் இந்த திட்டத்தின் வரைப்படத்தை மாற்றியது. ரூ.80 கோடியில் கட்டப்பட்ட வழிகாட்டி பத்திரம் பயனில்லாமல் போனது.

தெலுங்கு தேச கட்சி ஆட்சியில் போலவரம் பணிகள் 72 சதவீதம் முடிந்தது. ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆட்சியில் 3.84 சதவீத பணிகள் மட்டுமே செய்தனர். மத்திய அரசு போலவரம் திட்டத்திற்கு வழங்கிய ரூ.3,385 கோடி வேறு திட்டத்திற்கு பயன்படுத்தப்பட்டது.

ஜெகன்மோகன் போலவரத்தை கோதாவரி நதியில் மூழ்கடித்தார். போலவரத்தை சரிசெய்ய அமெரிக்கா மற்றும் கனடாவில் இருந்து நிபுணர்கள் வரவழைக்கப்படும். அமெரிக்கா மற்றும் கனடா நிபுணர்கள் குழு இங்கு தங்கி மேற்பார்வையிடும்.

சர்வதேச, உள்நாட்டு வல்லுநர்கள் உதவியுடன் பிரச்சனையை சமாளிப்போம். ஏஜென்சியை மாற்றவில்லை என்றால் 2020க்குள் இந்த திட்டம் முடிந்திருக்கும். ஜெகன்மோகன் அரசின் அலட்சியத்தால் ரூ.4,900 கோடி இழப்பு. 38 சதவீதம் செலவு அதிகரித்தது. மின் உற்பத்தியை இழந்தோம், மின் உற்பத்தி இழப்பால் ரூ.3 ஆயிரம் கோடி இழப்பு, போலவரம் தாமதத்தால் விவசாயிகளுக்கு ரூ.45 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

மத்திய அரசின் ஆதரவுடன் சவால்களை சமாளிப்போம். திட்டத்தைக் கட்டுவதை விட பழுது பார்ப்பது கடினம். தகுதி இல்லாதவர்கள் ஆட்சிக்கு வந்ததால் போலவரத்துக்கான முயற்சியை வீணடித்துள்ளார் ஜெகன்மோகன். போலவரத்தை சரிசெய்ய எவ்வளவு காலம் ஆகும் என்பதை நிபுணர்கள் தீர்மானிக்க வேண்டும். போலவரத்தில் தவறு செய்த அதிகாரிகளை மாற்றுகிறோம்.

போலவரத்தில் இழப்பிற்கு காரணமான முக்கிய குற்றவாளியை மக்கள் வீட்டுக்கு அனுப்பினார்கள். போலவரம் அணையின் உயரத்தில் சமரசம் இல்லை. போலவரம் அணையின் நிலையை பார்த்ததும் கண்களில் கண்ணீர் வந்தது.இவ்வாறு முதல்வர் சந்திரபாபு கூறினார்.

The post மாநில பிரிவினையால் ஏற்பட்ட நஷ்டத்தை விட ஆந்திராவில் ஜெகன்மோகன் ஆட்சியில் இரட்டிப்பு இழப்பு appeared first on Dinakaran.

Related Stories: