திருமயம் தாலுகாவில் ₹5.35 கோடியில் 3 அணை சீரமைக்க ஒப்புதல்: முதலமைச்சருக்கு விவசாயிகள் நன்றி

திருமயம்,ஜூன் 26: திருமயம் தாலுகாவில் உள்ள 3 அணைக்கட்டுகள் புதுப்பிக்கும் பணிக்காக ₹5.35 கோடி ஒதுக்கி ஒப்புதல் அளித்த முதலமைச்சர், அமைச்சர்களுக்கு அப்பகுதி மக்கள், விவசாயிகள் நன்றி தெரிவித்துக் கொண்டனர். தமிழகத்தின் சட்டமன்ற கூட்டத்தொடர் கடந்த வாரம் முதல் நடைபெற்று வருகிறது. இதில் திமுக தலைமையிலான அரசின் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி பல்வேறு துறை அமைச்சர்களும் மானிய கோரிக்கையின் போது மக்கள் நலத்திட்ட அறிவிப்புகள் வெளியிட்டு வருகின்றனர். இதன் அடிப்படையில் நீர்வளத்துறை சார்பில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் மானிய கோரிக்கை வாசித்தார். இதன் அடிப்படையில் புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் தாலுகாவிற்கு உட்பட்ட தெற்கு வெள்ளாறு பகுதியில் உள்ள கும்மங்குடி அணைக்கட்டு ₹1.25 கோடி மதிப்பில் புனரமைக்கப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதேபோல் கடையக்குடி ஹோல்ட்ஸ்வெர்த் அணைக்கட்டு புனரமைப்பு பணி மற்றும் திருகு பலகைகள் புதுப்பிக்கும் பணிக்காக ரூ 2.60 கோடி ரூபாயும், கூடலூர் வலது புற தலை மதகினை பழுதுபார்த்தல் மற்றும் பாதுகாப்பு சுவர் புதுப்பிக்கும் பணிக்காக ₹ 1.55 கோடியில் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது அப்பகுதி விவசாயிகள், மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து கும்மங்குடியை சேர்ந்த விவசாயி அருள்தாஸ் கூறியதாவது: புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் தாலுகா எல்லைப் பகுதியில் தெற்கு வெள்ளாறு பாய்கிறது. இதில் பருவ காலத்தில் மட்டுமே நீரோட்டம் இருக்கும். அதுவும் கடந்த சில ஆண்டுகளாக புதுக்கோட்டை மாவட்ட பகுதிகளில் கடும் வறட்சி நிலவுவதால் தெற்கு வெள்ளாறில் நீரோட்டம் என்பது மிக மிக குறைந்த அளவே உள்ளது.

அதேசமயம் பெரு மழையின் போது வெள்ளாற்றில் வெள்ளம் ஏற்படும் போதும் தண்ணீரை சேமிக்க தரமான அணைகள் இல்லாததால் நீரை சேமித்து கிளை கால்வாய்களில் தண்ணீர் வழங்க இயலாத நிலை ஏற்பட்டு வந்தது. மேலும் அணையில் நீர் சேமிக்க முடியாததால் அப்பகுதியில் நிலத்தடி நீர் வெகுவாக குறைந்து குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவாகி உள்ளது. மேலும் விவசாயிகளுக்கு போதுமான நீர் இல்லாததால் விவசாயம் ஆண்டுதோறும் பொய்த்து பொய்த்து போகிறது. இதனை போக்க சம்பந்தப்பட்ட அணைகளை புதுப்பிக்க அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் பல ஆண்டுகளாக அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதனிடையே . சம்பந்தப்பட்ட அணைகளை புதுப்பிக்க தினகரன் நாளிதழ் செய்தி வெளியிட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் எங்கள் பகுதி மக்கள், விவசாயிகள் கோரிக்கையை ஏற்று நடப்பு சட்டப்பேரவை கூட்டத் தொடரில் பல கோடி ஒதுக்கி அணைகள் புதுப்பிக்க நடவடிக்கை எடுத்திருப்பது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்காக உறுதுணையாக இருந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், சட்டத்துறை அமைச்சர் ரகுபதி உள்ளிட்ட அமைச்சர்கள், அரசு அதிகாரிகளுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

The post திருமயம் தாலுகாவில் ₹5.35 கோடியில் 3 அணை சீரமைக்க ஒப்புதல்: முதலமைச்சருக்கு விவசாயிகள் நன்றி appeared first on Dinakaran.

Related Stories: