ரேணுகாசாமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 4 குற்றவாளிகளும் தும்கூரு சிறைக்கு மாற்ற வேண்டும்: நீதிமன்றம் உத்தரவு

பெங்களூரு: ரேணுகாசாமி கொலை வழக்கில் முதலில் சரணடைந்த 4 குற்றவாளிகளை பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து தும்கூரு சிறைச்சாலைக்கு மாற்ற பெங்களூரு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கர்நாடக மாநிலம், சித்தரதுர்கா மாவட்டத்தை சேர்ந்த ரேணுகாசாமி, தொடர்ந்து சமூக வலைதளங்களில் நடிகர் தர்ஷனின் தோழி பவித்ரா கவுடாவுக்கு தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து நடிகர் தர்ஷன் மற்றும் பவித்ராகவுடா ஆகியோர் கூட்டாளிகளுடன் சேர்ந்து ரேணுகாசாமியை சித்தரதுர்கா நகரில் இருந்து கடந்த 8 ம் தேதி கடத்தி வந்து பெங்களூரு நகரில் உள்ள ஒரு கார் குடோனில் வைத்து அவரை கொடூரமாக தாக்கி கொலை செய்தனர்.

ரேணுகாசாமியின் உடல் பெங்களூரு நகரில் இருந்த கால்வாயில் இருந்து கடந்த 9 ம் தேதி காவல்துறையினர் மீட்டனர். அதே நாளில் நடிகர் தர்ஷனின் கூட்டாளிகள் கேசவ மூர்த்தி, கார்த்திக், நிகில் மற்றும் ரவிசங்கர் என்ற நான்கு பேர் பெங்களூரு காமாட்சிபாளையம் காவல் நிலையத்தில் தாங்கள் தான் இந்த கொலையை செய்தோம் என்று சரண் அடைந்தனர். சரண் அடைந்த நான்கு நபர்களையும் போலீசார், வேறு வேறு அறைகளில் வைத்து விசாரித்த போது அவர்கள் ஒவ்வொருவரும் முரண்பட்ட தகவல்களை வழங்கிய நிலையில் நான்கு நபர்களையும் போலீசார் அவர்களுக்கு உரிய பாணியில் விசாரித்த போது அதிர்ச்சி அடையும் விதமாக நடிகர் தர்ஷனின் பெயரை குறிப்பிட்டனர்.

இந்த கொலை தர்ஷனின் தோழிக்காக செய்யப்பட்டது என்றும் கொலை நடந்த போது தர்ஷன் மற்றும் பவித்ரகவுடா ஆகியோர் சம்பவம் நடந்த இடத்தில் இருந்ததையும் அவர்கள் இருவரும் தங்களுடன் சேர்ந்து ரேணுகா சாமியை கொடூரமாக தாக்கியதாகவும் நால்வரும் ஒப்புக்கொண்டனர். அவர்களது வாக்குமூலத்தின் அடிப்படையில் போலீசார் கடந்த 11ம் தேதி நடிகர் தர்ஷன், பவித்ரா கவுடா மற்றும் கொலைக்கு உடந்தையாக இருந்தவர்கள் என 17 பேரை இதுவரை கைது செய்து அனைவரையும் சிறையில் அடைத்தனர்.

தர்ஷனை, கடந்த சனிக்கிழமை பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைத்தனர். அதே நாளில் இந்த வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞராக இருக்கும் பிரசன்ன குமார், பெங்களூரு குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஒரு மனுவை சனிக்கிழமை தாக்கல் செய்தார். அந்த மனுவில் இந்த கொலை வழக்கில் முதன்முதலாக சரணடைந்த நான்கு பேர் அரசு தரப்பில் ஒப்புதல் வாக்குமூலம் வழங்கியுள்ளனர். அதன் அடிப்படையில் தான் தர்ஷன் உள்ளிட்ட அனைத்து குற்றவாளிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆகையால் அனைவரும் ஒரே சிறைச்சாலையில் இருக்கும் போது அவர்கள் மீது தர்ஷன் மற்றும் அவருடன் இருப்பவர்கள் தாக்குதல் நடத்தப்பட வாய்ப்புள்ளது. ஆகையால் தர்ஷனை தும்கூரு சிறைச்சாலைக்கு மாற்ற வேண்டும் இல்லை என்றால் அப்ரூவராக மாறியுள்ள நான்கு குற்றவாளிகளை தும்கூரு சிறைச்சாலைக்கு மாற்ற வேண்டும் என்று மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

அந்த மனு மீது பெங்களூரு 24வது ஏசிஎம்எம் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பு வழக்கறிஞர் வாதம் கேட்டபின், நீதிபதி அப்ரூவராக மாறிய ரவிசங்கர், கார்த்திக், நிகில் மற்றும் கேசவமூர்த்தி ஆகிய நான்கு பேரை மட்டும் உடனடியாக தும்கூரு சிறைச்சாலைக்கு மாற்ற உத்தரவிட்டார். அவர்கள் நான்கு பேரும் இன்று பார்ப்பன அக்ரஹாரா சிறைச்சாலையில் இருந்து தும்கூரு சிறைச்சாலைக்கு மாற்றப்படுவார்கள் என்று தெரியவருகிறது.

The post ரேணுகாசாமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 4 குற்றவாளிகளும் தும்கூரு சிறைக்கு மாற்ற வேண்டும்: நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: