சின்னசேலத்தில் பொதுஇடங்களில் குப்பை கொட்டுவதை தடுக்க கோலமிட்டு விழிப்புணர்வு

சின்னசேலம்: பொதுஇடங்களில் குப்பை கொட்டுவதை தடுக்க அந்த இடத்தில் வண்ண வண்ண கோலம் போட்டு சின்னசேலம் பேரூராட்சி நிர்வாகத்தினர் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். சின்னசேலம் பேரூராட்சி பகுதியில் நேற்றுமுன்தினம் பெய்த மழையின் காரணமாக பிளாஸ்டிக் பேப்பர் உள்ளிட்ட குப்பைகள் மழைநீரில் அடித்து செல்லப்பட்டு தெருக்களில் கிடந்தது. இதையடுத்து சின்னசேலம் பேரூராட்சி செயல் அலுவலர் மோகனரங்கன் உத்தரவின்பேரில் துப்புரவு ஆய்வாளர் ராஜா தலைமையில் திரௌபதி அம்மன் கோயில், பிள்ளையார் கோயில் தெரு, மேட்டு தெரு, கடைவீதி, சிவன் கோயில், ஒற்றைவாடை தெரு உள்ளிட்ட பகுதிகளில் 15க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்களை கொண்டு குப்பைகளை சேரித்து ஒரு இடத்தில் கொட்டினர்.

பின்னர் மட்கும் குப்பை, மட்காத குப்பை என தரம் பிரித்து குப்பை கிடங்கில் கொட்டி வைத்தனர். அதைப்போல அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி நுழைவு வாயில் முன்பும் உள்ள குப்பைகளை, செடிகளை அகற்றினார்கள். அதைப்போல சின்னசேலம் விஜயபுரம் 10வது தெருவில் பொதுமக்கள் நடமாட்டம் உள்ள பொதுஇடத்தில் சிலர் குப்பை கொட்டி வைத்தனர். பேரூராட்சி தூய்மை பணியாளர்கள் அந்த இடத்தில் இருந்த குப்பைகளை அகற்றினர். பின்னர் அந்த இடங்களில் பேரூராட்சி துப்புரவு ஆய்வாளர் ராஜா மேற்பார்வையில் மகளிர் தூய்மை பணியாளர்கள் இந்த இடத்தில் குப்பைகளை கொட்டாதீர்கள் என்று எழுத்தால் எழுதியும், வண்ண வண்ண கோலம் போட்டும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். இது சமூக ஆர்வலர்களால் பெரிதும் பாராட்டப்பட்டது.

The post சின்னசேலத்தில் பொதுஇடங்களில் குப்பை கொட்டுவதை தடுக்க கோலமிட்டு விழிப்புணர்வு appeared first on Dinakaran.

Related Stories: