நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக உயர்நீதிமன்றங்களில் இருக்கும் வழக்குகளை விசாரிக்க தடை: உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: நடப்பாண்டுக்கான நீட் தேர்வு கடந்த மே.5ம் தேதி நடத்தப்பட்டது. குறிப்பாக வினாத்தாள் முன்னதாக சட்டத்திற்கு புறம்பாக கசிந்துள்ளது. அதேப்போன்று கருணை மதிப்பெண் என்ற பெயரில் தேசிய தேர்வு முகமை மாணவர்களுக்கு சரியான மதிப்பெண்களை வழங்காமல், முறைகேடான மதிப்பெண்களை வழங்கியுள்ளது. குறிப்பாக நீட் வினாத்தாள் கசிந்த ராஜஸ்தான் மாநிலத்தில் மட்டும் சுமார் 11 மாணவர்கள் 720 மதிப்பெண்களை பெற்றுள்ளனர். இது மிகப்பெரிய சந்தேகத்தை எழுப்பியுள்ளது. இதையடுத்து இதுதொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட 20க்கும் மேற்பட்ட வழக்குகளை விசாரித்த உச்ச நீதிமன்றம், கருணை மதிப்பெண் ரத்து செய்யப்பட்ட 1,563 மாணவர்களுக்கு வருகிற 23ம் தேதி மறுதேர்வு நடத்த வேண்டும்.

அதேப்போன்று நீட் தேர்வு முறைகேடுகள் குறித்தும், இதுகுறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்ற வழக்குக்கும் ஒன்றிய அரசு மற்றும் தேசிய தேர்வுகள் முகமை பதிலளிக்க வேண்டும் என்று நோட்டீஸ் பிறப்பித்து கடந்த இரு தினங்களுக்கு முன்னதாக உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் உச்ச நீதிமன்றத்தில் ஒரு புதிய மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அதில், ‘‘நீட் தேர்வு காலதாமதத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்களையும் மறு தேர்வுக்கு அனுமதிக்க வேண்டும். மேலும் முன்னதாக நடத்தப்பட்ட நீட் தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதால், கலந்தாய்வுக்கு தடை விதிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து மேற்கண்ட மனுவானது உச்ச நீதிமன்றத்தில் கோடைக்கால சிறப்பு அமர்வு நீதிபதி விக்ரம் நாத் தலைமையிலான அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தபோது பிறப்பித்த உத்தரவில், ‘‘நடைபெறவிருக்கும் நீட் தேர்வு கலந்தாய்வுக்கு எந்தவித தடையும் விதிக்க முடியாது. மேலும் கால தாமதத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்களை மறு தேர்வுக்கு அனுமதிப்பது குறித்து தேசிய தேர்வுகள் முகமை மற்றும் ஒன்றிய அரசு ஆகியோர் பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பிக்கப்படுகிறது. ஏனெனில் அதுகுறித்து அவர்கள் தான் முடிவெடுக்க முடியும். மேலும் நீட் தேர்வு மற்றும் அதன் முறைகேடுகள் தொடர்பாக பல்வேறு உயர்நீதிமன்றங்களில் இருக்கும் வழக்குகளின் விசாரணைக்கு தடை விதிக்கப்படுகிறது. இதுதொடர்பாக தேசிய தேர்வுகள் முகமை தாக்கல் செய்திருந்த மனுவுக்கு, எதிர்மனுதாரர்கள் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.

The post நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக உயர்நீதிமன்றங்களில் இருக்கும் வழக்குகளை விசாரிக்க தடை: உச்ச நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: