ஜெகன்மோகன் வீட்டின் அறைகளை இடித்த அதிகாரி மீது நடவடிக்கை: காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார்

திருமலை: ஐதராபாத்தில் உள்ள பஞ்சாரா ஹில்ஸில் உள்ள ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டிக்கு சொந்தமான வீட்டின் அறைகளை இடித்த அதிகாரி காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டார். தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள பஞ்சாரா ஹில்ஸில் ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் ஜெகன்மோகனுக்கு சொந்தமான வீடு உள்ளது. ஆந்திர அரசியலில் ஈடுபட்டு வருவதால் ஜெகன்மோகன் நீண்ட நாட்களாக இந்த வீட்டில் வசிக்கவில்லை. குண்டூர் மாவட்டம் தாடேபள்ளியில் புதிதாக வீடு கட்டி அங்கேயே வசித்து வருகிறார்.

பஞ்சாரா ஹில்ஸ் வீட்டில் ஆந்திர மாநில காங்கிரஸ் தலைவரும், ஜெகன்மோகனின் சகோதரியுமான ஒய்.எஸ்.ஷர்மிளா, ஜெகனின் தாயார் விஜயம்மா மற்றும் குடும்பத்தினர் தங்கியுள்ளனர். முன்னதாக, இந்த வீடு ஒய்.எஸ்.ஷர்மிளாவின் ஒய்எஸ்ஆர் தெலங்கானா கட்சியின் தலைமை அலுவலகமாகவும் இருந்தது. அந்தக்கட்சியும் அங்கேதான் உருவானது. அதன்பிறகு கட்சியை கலைத்து காங்கிரஸில் இணைந்தார் ஷர்மிளா. இந்நிலையில் இந்த வீட்டின் முன்புறம் பாதுகாவலர்களுக்காக அமைக்கப்பட்டிருந்த சில கட்டிடங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக கூறி ஐதராபாத் மாநகராட்சி அதிகாரிகள் கடந்த 15ம் தேதி இடித்தனர்.

ஆனால் இந்த விவகாரத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரப்பூர்வ உத்தரவு எதுவும் பிறப்பிக்கப்படவில்லை எனவும், முதல்வர் ரேவந்த்ரெட்டிக்கும் இந்த விஷயம் தெரியாது என்றும் கூறப்படுகிறது. தெற்கு தெலங்கானாவை சேர்ந்த அமைச்சர் ஒருவர், ஜெகனின் வீட்டில் உள்ள அறைகளை அகற்ற வாய்மொழி உத்தரவு பிறப்பித்ததையடுத்து அதிகாரிகள் இந்த நடவடிக்கையை எடுத்ததாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் தொடர்பாக ஐதராபாத் மாநகராட்சி மண்டல ஆணையர் போர்கேட் ஹேமந்த் சகாதேவராவ், மாற்றப்பட்டு காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார்.

The post ஜெகன்மோகன் வீட்டின் அறைகளை இடித்த அதிகாரி மீது நடவடிக்கை: காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார் appeared first on Dinakaran.

Related Stories: