இவிஎம் இயந்திரங்களின் செயல்பாடுகள் குறித்து பொது வெளியில் விவாதிக்க திமுக சட்டத்துறை வலியுறுத்தல்

சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள திமுக சட்டத்துறை அலுவலகத்தில் திமுக வழக்கறிஞர் அணி மாநில நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. சட்டத்துறைச் செயலாளர் மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ எம்.பி. தலைமை தாங்கினார். சட்டத்துறைத் தலைவர் மூத்த வழக்கறிஞர் இரா.விடுதலை முன்னிலை வகித்தார். கூட்டத்தில், சட்டத்துறை இணைச் செயலாளர்கள் கே.எஸ்.ரவிச்சந்திரன், ஈரோடு ராதாகிருஷ்ணன், கே.எம்.தண்டபாணி, துணைச் செயலாளர்கள் ஜெ.பச்சையப்பன், கே.சந்துரு, வி.வைத்தியலிங்கம், தலைமைக் கழக வழக்கறிஞர்கள் ப.கணேசன், சூர்யா வெற்றிகொண்டான், கே.ஜெ.சரவணன், வீ.கவிகணேசன் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில், இந்திய துணை கண்டமே வியந்து நோக்கும் வண்ணம் தமிழ்நாட்டில் உள்ள 40 தொகுதிகளிலும் “இந்தியா கூட்டணி” வேட்பாளர்கள் அதிக வாக்கு வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிபெற வியூகம் அமைத்ததோடு, வெற்றிக்கு பாடுபட்ட முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும்- பாசிச பாஜ மற்றும் அதிமுக கூட்டணி வேட்பாளர்களை படுதோல்வி அடையச் செய்து, இந்தியா கூட்டணி வேட்பாளர்களின் வெற்றியை உறுதி செய்திட, பாடுபட்ட திமுக இளைஞர் அணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு கூட்டம் மனமார்ந்த பாராட்டுதலையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறது. நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பயன்படுத்தப்பட்ட இவிஎம் இயந்திரங்களின் நம்பகத்தன்மை குறித்து இன்று நாடு முழுவதும் பேசுபொருளாக மாறியிருக்கிறது.

இச்சூழ்நிலையில் இந்திய தேர்தல் ஆணையம் இவிஎம் செயல்பாடுகள் குறித்து, பொதுவெளியில் விவாதிக்க வேண்டும். அண்மையில் நடந்த நீட் தேர்வு குளறுபடிகளுக்கு கண்டனத்தை பதிவு செய்வதோடு, நீட் நுழைவுத் தேர்வை நிரந்தரமாக ரத்து செய்ய வேண்டும். விக்கிரவாண்டி தொகுதி இடைத் தேர்தலில், திமுக நிர்வாகிகளுக்கு உறுதுணையாக இருப்பதுடன், அவர்களுக்கு தேவைப்படும் அனைத்து சட்ட உதவிகளை வழங்கி, சிறப்பாக செயல்பட வேண்டும். மாவட்ட அமைப்பாளர்களின் கூட்டம் வருகிற ஜூலை 21ம் தேதி நடத்துவது உள்ளிட்ட 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

The post இவிஎம் இயந்திரங்களின் செயல்பாடுகள் குறித்து பொது வெளியில் விவாதிக்க திமுக சட்டத்துறை வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: