கும்மிடிப்பூண்டி அருகே எளாவூர் சோதனைச் சாவடியில் லாரி உரிமையாளர்கள் ஆர்ப்பாட்டம்

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அருகே எளாவூர் சோதனைச் சாவடியில் லாரி உரிமையாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கும்மிடிப்பூண்டி சிப்காட்டில் ஓபிஜி, காமாட்சி, துல்சியான், பாட்டியா உள்ளிட்ட 9 அனல் மின் நிலையங்கள் உள்ளது. இந்த அனல் மின்நிலையங்களுக்கு தேவையான நிலக்கரிகளை நெல்லூர் துறைமுகத்தில் இருந்து, கும்மிடிப்பூண்டி சுற்று வட்டாரத்தில் உள்ள 200க்கும் மேற்பட்ட லாரிகள் மூலமாக கொண்டு வரப்படுகிறது. இந்நிலையில், கடந்த சில மாதங்களாக உள்ளூர் லாரிகளுக்கு பதிலாக தெலுங்கானா, மேற்கு வங்காளம், ஓடிசா மாநில லாரிகள் மூலமாக கும்மிடிப்பூண்டியில் உள்ள அனல் மின் நிலையங்களுக்கு நிலக்கரி ஏற்றிச் செல்லப்பட்டது.

இது குறித்து கும்மிடிப்பூண்டி லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் தொழிற்சாலை நிர்வாகத்தாரிடம் முறையிட்டும், உள்ளூர் வாகனங்கள் புறக்கணிக்கப்பட்டது. இந்நிலையில், கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூரில் உள்ள ஒருங்கிணைந்த சோதனை சாவடியை கும்மிடிப்பூண்டி சுற்றுவட்டார லாரி உரிமையாளர் சங்கத்தின் செயலாளர் கே.பிரபாகரன் தலைமையில் முற்றுகையிட்டு நிலக்கரி ஏற்றி வந்த பிற மாநில லாரிகளை மடக்கி அவர்களை கும்மிடிப்பூண்டிக்குள் அனுமதிக்காமல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்துவந்த கும்மிடிப்பூண்டி டிஎஸ்பி(பொறுப்பு) குமார், ஆரம்பாக்கம் இன்ஸ்பெக்டர் டில்லிபாபு மற்றும் போலீசார், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட லாரி உரிமையாளர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.

தொடர்ந்து, தொழிற்சாலை நிர்வாகத்தினரிடம் பேசி உள்ளூர் லாரி உரிமையாளர்களுக்கு பணி வழங்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். இதனை தொடர்ந்து கும்மிடிப்பூண்டி லாரி உரிமையாளர்கள் சங்கத்தினருக்கும். தொழிற்சாலை நிர்வாகத்தாருக்கும் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது தொழிற்சாலை நிர்வாகிகள், ஓரிரு நாட்களில் முடிவெடுக்கப்படும் எனவும், அதுவரை வெளி மாநில லாரிகள் நிலக்கரி ஏற்றுவதற்கு தடை செய்யப்படும் என்று தெரிவித்தனர். இதையடுத்து லாரி உரிமையாளர்கள் சங்கத்தின ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் சோதனைச்சாவடியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

The post கும்மிடிப்பூண்டி அருகே எளாவூர் சோதனைச் சாவடியில் லாரி உரிமையாளர்கள் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Related Stories: