முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தில் முதிர்வுத்தொகை பெற விண்ணப்பிக்கலாம்: காஞ்சி கலெக்டர் தகவல்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் மகளிர் உரிமை துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் கீழ் பயனடைந்த பயனாளிகள் முதிர்வுத்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் கீழ் பயனடைந்த பயனாளிகளில், தற்போது 18 வயதை கடந்தும், முதிர்வுத்தொகை பெறப்படாமல் உள்ள பெண் குழந்தைகள், தாங்கள் பயனடைந்த வட்டாரத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனம் மூலம் வழங்கப்பட்டுள்ள வைப்புத் தொகை பத்திரத்தின் நகல், பெண் குழந்தையின் பெயரில் உள்ள வங்கி கணக்கு புத்தகத்தின் நகல், 10ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் நகல், மாற்று சான்றிதழ் நகல் (ஜிசி), பிறப்பு சான்று நகல், ஆதார் அட்டை நகல், தாய் மற்றும் பெண் குழந்தையின் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் 2 எண்ணிக்கை ஆகியவற்றுடன் நேரில் சென்று சமூக நல விரிவாக்க அலுவலர் மற்றும் மகளிர் ஊர்நல அலுவலர்களிடம் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

அல்லது மாவட்ட சமூகநல அலுவலகம், பழைய ஊரக முகமை கட்டிடம் முதல் தளம், மாவட்ட கலெக்டர் வளாகம், காஞ்சிபுரம் – 631501 என்ற முகவரியில் நேரில் வந்து சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மேலும் விண்ணப்பிக்கும் பயனாளிகளின் கருத்துரு தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு, அவர்களுக்கு உண்டான முதிர்வுத்தொகை 18 வயது நிரம்பிய அப்பெண் குழந்தையின் பெயரில், தற்போது செயலில் உள்ள வங்கி கணக்கிற்கு மின் பரிவர்த்தனை மூலம் நேரடியாக செலுத்தப்படும். இவ்வாறு கூறியுள்ளார்.

விமானப்படை தேர்வு : இந்திய ராணுவத்தின் அக்னி வீர் வாயு இந்திய விமானப்படை தேர்விற்கு 08.07.2024 முதல் 28.07.2024 வரை https://agnipathvayu.cdac.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இத்தேர்வு இணையதளம் வாயிலாக 18.10.2024 முதல் நடைபெற உள்ளது. இத்தேர்விற்கான வயது வரம்பு 17 முதல் 20 மற்றும் கல்வித்தகுதி 12ம் வகுப்பு அல்லது மூன்று வருட பட்டயபடிப்பு அல்லது தொழில் படிப்புகள் ஆகும். இத்தேர்விற்கான கட்டணம் ரூ.550 + GST ஆகும். தகுதியும் விருப்பமும் உள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த விண்ணப்பதாரர்கள், இத்தேர்விற்கு விண்ணப்பித்து பயன்பெறலாம் என்று கலெக்டர் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளார்.

The post முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தில் முதிர்வுத்தொகை பெற விண்ணப்பிக்கலாம்: காஞ்சி கலெக்டர் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: