செல்லப் பிராணிகளுக்கான உரிமம் பெற 20ம் தேதிக்குள் இணையதளம் மூலம் உரிமையாளர்கள் விண்ணப்பிக்கலாம்: தாம்பரம் மாநகராட்சி வேண்டுகோள்

தாம்பரம்: செல்லப் பிராணிகளுக்கான உரிமம் பெறுவதற்கு, இணையதளம் வாயிலாக 20ம்தேதிக்குள் விண்ணப்பித்து பெற்றுக்கொள்ளலாம் என்று அதன் உரிமையாளர்களுக்கு, தாம்பரம் மாநகராட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.

தாம்பரம் மாநகராட்சி, பொதுசுகாதாரத்துறையின் கீழ் 3 நாய் இனக்கட்டுப்பாட்டு மையங்கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. மேலும், அனகாபுத்தூர், பாரதிபுரம் மற்றும் குண்டுமேடு ஆகிய இனக்கட்டுப்பாட்டு மையங்களில் தெரு நாய்களுக்கு இனக்கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படுவதோடு, வெறிநாய்க்கடி நோய் தடுப்பூசியும் போடப்பட்டு வருகிறது.

மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பிடிக்கப்படும் தெரு நாய்களுக்கு, நாய்கள் இனக்கட்டுப்பாட்டு மையத்தில் கால்நடை மருத்துவக் குழுவினரால் இனக்கட்டுப்பாடு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு, சிகிச்சை முடிந்து 5 நாட்கள் வரை பராமரிக்கப்பட்டு, உடல் தகுதி பெற்ற பின் வெறிநாய்க்கடி நோய் தடுப்பூசியும் போடப்பட்டு பிறகு பிடித்த இடத்திலேயே விடப்படுகிறது.அதன்படி, கடந்த 1.5.2024 முதல் 11.6.2024 வரை 320 தெருநாய்கள் பிடிக்கப்பட்டு, 306 தெருநாய்களுக்கு நாய்கள் இனக்கட்டுப்பாடு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. வீடுகளில் செல்லப் பிராணிகளாக வளர்க்கப்படும் நாய் மற்றும் பூனை ஆகியவை பொது இடங்களுக்கு உரிமையாளர்களால் அழைத்து செல்லப்படுகிறது. இதற்கு வெறிநாய்க்கடி நோய் தடுப்பூசி கட்டாயமாக போடப்பட்டிருக்க வேண்டும். செல்லப்பிராணிகள் மற்றும் தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி நோய் தடுப்பூசி போடப்படுவதன் மூலம் பொதுமக்களின் நலனை பாதுகாக்க உறுதி செய்யப்படும்.

அதனைத்தொடர்ந்து, தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகளுக்கு, அவற்றின் உரிமையாளர்கள் செல்லப்பிராணிகளுக்கான உரிமத்தினை அவசியம் பெற்றிட வேண்டும் என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது. செல்லப் பிராணிகளுக்கான உரிமம் பெறுவதற்காக, தாம்பரம் மாநகராட்சியின் https://tcmcpublichealth.in என்ற இணையதளம் வாயிலாக உரிமையாளர்கள் விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டு, விண்ணப்பித்து வருகின்றனர்.

இதுவரை, 503 செல்லப்பிராணிகளுக்கு உரிமம் பெறுவதற்கு இணையதளம் வாயிலாக, அதன் உரிமையாளர்களின் விண்ணப்பித்த விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டு இதுவரை 317 செல்லப்பிராணிகளுக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளது. மேலும், உரிமம் பெற விண்ணப்பங்கள் தொடர்பான சந்தேகங்களுக்கு மாநகராட்சியின் கால்நடை மருத்துவர் – 8825791424 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும். எனவே, செல்லப் பிராணிகளின் உரிமையாளர்கள் 20.6.2024ம் தேதிக்குள்ளாக இணையதளம் வாயிலாக விண்ணப்பித்து தங்கள் செல்லப் பிராணிகளின் விவரங்களை பதிவேற்றம் செய்து, செல்லப் பிராணிகளுக்கான உரிமத்தினை பெற்று பயனடையுமாறு மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post செல்லப் பிராணிகளுக்கான உரிமம் பெற 20ம் தேதிக்குள் இணையதளம் மூலம் உரிமையாளர்கள் விண்ணப்பிக்கலாம்: தாம்பரம் மாநகராட்சி வேண்டுகோள் appeared first on Dinakaran.

Related Stories: