கோயம்பேடு மார்க்கெட் வளாகத்தில் இயங்கும் தள்ளுவண்டி கடைகளில் தரமற்ற உணவுகள் விற்பனை: உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு செய்ய வியாபாரிகள் கோரிக்கை

வளசரவாக்கம்: கோயம்பேடு மார்க்கெட் வளாகத்தை சுற்றிலும் இயங்கி வரும் தள்ளுவண்டி கடைகளில் தரமற்ற உணவுகள் விற்பனை செய்யப்படுவதை, தடுக்க உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும், என்று வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கோயம்பேடு மார்க்கெட்டிற்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் காய்கறிகள், பழங்கள், கீரை வகைகள், பூ வகைகள், உணவு தானியங்கள் ஆகியவை விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. மேலும், ஆந்திரா, கர்நாடகா, கேரளா, மகாராஷ்ட்ரா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்தும் காய்கறிகள், பழங்கள் லாரிகள் மூலமாக கொண்டு வரப்படுகிறது. அனைத்து வகையான காய்கறிகளும் மொத்தமாகவும், சில்லரை விற்பனையிலும் கிடைப்பதால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள ஏராளமான சிறு வியாபாரிகள், பொதுமக்கள் இங்கு வந்து காய்கறிகளை வாங்கிச் செல்கின்றனர். இதன் காரணமாக கோயம்பேடு மார்க்கெட்டில் எப்போதும் பொதுமக்கள் நடமாட்டம் அதிகரித்து காணப்படும். 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் காய்கறி மூட்டைகளை ஏற்றி, இறக்கும் பணியில் இரவு, பகலாக ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த லாரி டிரைவர்கள், சுமை தூக்கும் தொழிலாளர்களை குறிவைத்து, கோயம்பேடு மார்க்கெட் வளாகத்தை சுற்றிலும் 50க்கும் மேற்பட்ட தள்ளுவண்டி உணவுக் கடைகள் இயங்கி வருகின்றன. இங்கு விற்பனை செய்யப்படும், சைவம் மற்றும் அசைவ உணவுகளை லாரி டிரைவர்கள், தொழிலாளர்கள் வாங்கி சாப்பிடுகின்றனர். இந்நிலையில், சில தள்ளுவண்டி கடைகள் இரவு முழுவதும் இயங்கி வரும் நிலையில், அங்கு விற்பனை செய்யப்படும் பிரியாணி உள்ளிட்ட அசைவ உணவுகள் மிகவும் தரமற்ற முறையில் தயாரித்து விற்பனை செய்யப்படுகிறது.

விலை குறைவு என்பதால் பெரும்பாலான தொழிலாளிகள், தள்ளுவண்டி கடைகளில் விற்பனை செய்யப்படும் உணவு வகைகளை அதிகளவில் வாங்கி சாப்பிடுகின்றனர். சுடச்சுட பிரியாணி, பரோட்டா, சிக்கன் ரைஸ், சில்லி சிக்கன் போன்றவை விற்பனை செய்யப்படுவதால் கூட்டம் அலைமோதுகிறது. இரவு 7 மணிக்கு தொடங்கும் உணவு விற்பனை நள்ளிரவு 1 மணி வரை நீடிக்கிறது. மீண்டும் 3.30 மணியளவில் தள்ளுவண்டிகளில் இறைச்சி உணவுகள் விற்பனை செய்யப்படுகிறது.

குறிப்பாக எண்ணெயில் பொறித்து எடுக்கப்படும் உணவுகளான மீன், ஆம்லெட், சமோசா, பஜ்ஜி, போண்டா உள்ளிட்ட உணவுகள் கண்ணாடி பெட்டிகளில் வைத்து விற்பனை செய்யாமல், திறந்தவெளியில் வைத்து விற்பனை செய்யப்படுகிறது. இவற்றின் மீது அவ்வழியே செல்லும் வாகனங்களால் ஏற்படும் தூசி உணவுகளின் மீது படர்ந்து காணப்படுகிறது. இவற்றை வாங்கி சாப்பிடுபவர்களுக்கு நோய் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. மேலும், சமையலுக்கு பழைய எண்ணெய் பயன்படுத்துகின்றனர். சுகாதாரமற்ற நிலையில் உள்ள உணவுகளை வாங்கி உண்ணும் தொழிலாளிகள் வயிற்றுபோக்கு, ஒவ்வாமை போன்ற பாதிப்புகளால் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

அதேபோல், சில தள்ளுவண்டி கடைகளில் விற்கப்படும் சைவ உணவுகளின் தரமும் கேள்விக்குறியாகவே உள்ளது. புளித்துபோன மாவில் தயாரிக்கப்பட்ட இட்லி, தோசை விற்பனை செய்யப்படுகிறது. இத்தகைய உணவுகளை சாப்பிடுவதால் தொழிலாளர்களின் உடல்நலம் கேள்விக்குறியாகி வருகிறது. இதுதொடர்பாக உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும், எடுக்கப்படவில்லை, என்று மார்க்கெட் வியாபாரிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

மேலும், இதுகுறித்து கோயம்பேடு மார்க்கெட் வியாபாரிகள் மற்றும் தொழிலாளர்கள் கூறுகையில், ‘‘மார்க்கெட் வளாகத்தைச் சுற்றிலும் 300க்கும் மேற்பட்ட தள்ளுவண்டி கடைகள் உள்ளன. மார்க்கெட்டில் வேலை செய்யும் தொழிலாளர்கள், வியாபாரிகள், லாரி டிரைவர்கள் இந்த தள்ளுவண்டி கடைகளில் விற்பனை செய்யப்படும் உணவுகளை வாங்கி சாப்பிடுகின்றனர். இதில், பெரும்பாலான கடைகளில் தரமற்ற முறையில் தயாரிக்கப்படும் உணவுகள்
விற்பனை செய்யப்படுகிறது. மேலும், திடீரென்று சாலையோரங்களில் முளைக்கும் தள்ளுவண்டி உணவுக் கடைகளால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. கோயம்பேடு மார்க்கெட்டில் வேலை செய்யும் தொழிலாளர்களின் நலனை பாதுகாக்கும் வகையில் மார்க்கெட் வளாகத்தைச் சுற்றிலும் உள்ள தள்ளுவண்டி கடைகளில் விற்பனை செய்யப்படும் உணவுகளின் தரம் குறித்து உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்ள வேண்டும். தரமற்ற உணவுகளை விற்பனை செய்யும் கடை உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றனர்.

The post கோயம்பேடு மார்க்கெட் வளாகத்தில் இயங்கும் தள்ளுவண்டி கடைகளில் தரமற்ற உணவுகள் விற்பனை: உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு செய்ய வியாபாரிகள் கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: