குவைத் தீ விபத்தில் பலியான தமிழர்கள் உள்பட 45 இந்தியர் உடல்கள் விமானத்தில் கொச்சி வந்தன: கேரள முதல்வர், தமிழக அமைச்சர் செஞ்சி மஸ்தான் அஞ்சலி

திருவனந்தபுரம்: குவைத் தீ விபத்தில் பலியான தமிழ்நாட்டைச் சேர்ந்த 7 பேரின் உடல்கள் உள்பட 45 பேரின் உடல்கள் நேற்று காலை கேரள மாநிலம் கொச்சி வந்தன. விமான நிலையத்தில் முதல்வர் பினராயி விஜயன், தமிழக அமைச்சர் செஞ்சி மஸ்தான் அஞ்சலி செலுத்தினர். குவைத்தில் உள்ள மங்காப் நகரில் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் தங்கியிருந்த 7 மாடிக் குடியிருப்பில் கடந்த 12ம்தேதி பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் 45 இந்தியர்கள் உட்பட 49 பேர் உடல் கருகி இறந்தனர். 50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

இந்தநிலையில் தீ விபத்தில் பலியான இந்தியர்களின் உடல்கள் நேற்று அதிகாலை விமானப் படையின் தனி விமானம் மூலம் குவைத்தில் இருந்து கொச்சிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. கேரள மாநிலத்தை சேர்ந்த 23 பேரின் உடல்கள், தமிழ்நாட்டைச் சேர்ந்த 7 பேரின் உடல்கள் உள்பட மொத்தம் 45 பேரின் உடல்கள் நேற்று காலை 10.35 மணிக்கு கொச்சிக்கு வந்தன. வெளியுறவுத்துறை இணையமைச்சர் கீர்த்தி வர்தன் சிங்கும் இதே விமானத்தில் வந்தார்.

கொச்சி விமான நிலையத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயன், தமிழக அமைச்சர் செஞ்சி மஸ்தான், ஒன்றிய இணையமைச்சர் சுரேஷ் கோபி, கேரள அமைச்சர்கள் ஆகியோர் உடல்களைப் பெற்றுக் கொண்டனர். தொடர்ந்து உடல்களுக்கு முதல்வர் பினராயி விஜயன், தமிழக அமைச்சர் செஞ்சி மஸ்தான் ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். கேரள போலீசாரும் மலர் வளையம் வைத்து இறுதி அஞ்சலி செலுத்தினர். அதே விமானத்தில் மற்ற மாநிலங்களை சேர்ந்த 14 பேரின் உடல்கள் டெல்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டன. தமிழகத்தை சேர்ந்த 7 பேரின் உடல்களும் 7 ஆம்புலன்சில் ஏற்றப்பட்டு தமிழ்நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

கேரள போலீசார் தமிழக எல்லை வரை வந்து வழியனுப்பி வைத்தனர். இதேபோல் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவரின் உடலும், கேரளாவைச் சேர்ந்த 23 பேரின் உடல்களும் போலீஸ் பாதுகாப்புடன் தனித்தனி ஆம்புலன்சுகளில் அவர்களது ஊர்களுக்கு உடனடியாக அனுப்பி வைக்கப்பட்டன. இதற்கிடையே, சிகிச்சை பெற்று வந்த மேலும் ஒரு இந்தியர் உயிர் இறந்ததால் பலி எண்ணிக்கை 46 ஆக உயர்ந்துள்ளது. மொத்த பலி எண்ணிக்கை 50 ஆக அதிகரித்துள்ளது.

 

The post குவைத் தீ விபத்தில் பலியான தமிழர்கள் உள்பட 45 இந்தியர் உடல்கள் விமானத்தில் கொச்சி வந்தன: கேரள முதல்வர், தமிழக அமைச்சர் செஞ்சி மஸ்தான் அஞ்சலி appeared first on Dinakaran.

Related Stories: