போன் கேட்ட 17 வயது இன்ஸ்டா காதலன் தாயின் நகையை விற்று ஐ-போன் வாங்கி தந்த 16 வயது காதலி: கைது செய்தது போலீஸ்

திருப்பூர்: திருப்பூர் கொங்கு மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் 17 வயது சிறுவன். இவருக்கும் 16 வயதான சிறுமிக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் பக்கத்து ஊரைச் சேர்ந்தவர்கள் என்றாலும் இன்ஸ்டாமூலம் கிடைத்த நட்பு நாளடைவில் காதலாக மாறியது. அவர்கள் 2 பேரும் நேரில் சந்திக்க திட்டமிட்டனர். அதன்படி, அவர்கள் சந்தித்தபோது இருவரும், ‘‘நாம் வைத்துள்ள செல்போன்கள் பழையதாக உள்ளது. புதிய போன் வாங்க வேண்டும்’’ என பேசிக்கொண்டனர்.

இந்நிலையில், காதலனுக்கு ஐபோன் வாங்கி கொடுக்க வேண்டும். நாமும் ஐபோன் பயன்படுத்தவேண்டும் என்ற ஆசை அந்த சிறுமிக்கு ஏற்பட்டது. அதற்கு என்ன செய்யலாம் என திட்டமிட்டார். அப்போதுதான் வீட்டில் பீரோவில் இருக்கும் தனது தாயின் நகையை எடுத்து, அதில் கிடைக்கும் பணத்தில் ஐபோன் வாங்கிவிடலாம் என முடிவு செய்தார். அதன்படி பீரோவில் இருந்து 7 பவுன் நகையை அந்த சிறுமி யாருக்கும் தெரியாமல் எடுத்துக்கொண்டார். இது பற்றி தனது காதலனுக்கும் தகவல் தெரிவித்தார்.

இதையடுத்து மீண்டும் இருவரும் சந்திக்க முடிவெடுத்து, சிறுமி திருப்பூர் மத்திய பஸ் நிலையத்துக்கு வந்தார். அங்கு தயாராக நின்ற காதலனிடம் நகையை கொடுத்தார். பின்னர் அந்த நகையை விற்று இருவரும் ஆளுக்கொரு புதிய ஐபோன்களை வாங்கியுள்ளனர். மீதம் இருந்த பணத்தில் இருவரும் திருப்பூரை ஜாலியாக சுற்றி வந்துள்ளனர். பின்னர் அவரவர் வீடுகளுக்கு திரும்பினர். வீட்டில் நகை காணாமல் போனதால் சிறுமியின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.

அப்போது சிறுமி ஐபோன் வைத்திருப்பதை பார்த்து சந்தேகத்தில் விசாரித்துள்ளனர். அவர், நகையை எடுத்துச் சென்று விற்று காதலனுக்கும், தனக்கும் புதிய ஐபோன் வாங்கியதாகவும், மீதமுள்ள பணத்தை செலவழித்ததாகவும் கூறியுள்ளார். இதையடுத்து சிறுமியின் பெற்றோர் வடக்கு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் சிறுமிக்கு ஆசை வார்த்தை கூறி பணத்துடன் ஊர் சுற்றியதால் போலீசார் போக்சோ வழக்குப்பதிந்து சிறுவனை கைது செய்தனர்.

The post போன் கேட்ட 17 வயது இன்ஸ்டா காதலன் தாயின் நகையை விற்று ஐ-போன் வாங்கி தந்த 16 வயது காதலி: கைது செய்தது போலீஸ் appeared first on Dinakaran.

Related Stories: