வழிநெடுகிலும் மலர் தூவி உற்சாக வரவேற்பு ஆந்திர முதல்வராக சந்திரபாபு நாயுடு பொறுப்பேற்பு: 5 முக்கிய கோப்புகளில் கையெழுத்து

திருமலை: ஆந்திர தலைமை செயலகத்தில் முதல்வராக சந்திரபாபு நாயுடு நேற்று பொறுப்பேற்று 5 முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார். ஆந்திர மாநில சட்டப்பேரவை தேர்தலில் தெலுங்குதேசம் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. இதையடுத்து ஆந்திர மாநில முதல்வராக சந்திரபாபு நாயுடு நேற்று முன்தினம் பதவி ஏற்றுக்கொண்டார். இந்நிலையில் நேற்று காலை திருப்பதி ஏழுமலையான் கோயில், விஜயவாடா கனகதுர்க்கை அம்மன் கோயிலில் குடும்பத்தினருடன் முதல்வர் சுவாமி தரிசனம் செய்தார்.

அதன் பின்னர் குண்டூர் மாவட்டம், உண்டவல்லியில் உள்ள தனது வீட்டிலிருந்து வெலகம்புடியில் உள்ள தலைமைச் செயலகத்திற்கு சென்றார். செல்லும் வழியில் அமராவதி தலைநகருக்காக நிலம் வழங்கிய விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் வழிநெடுகிலும் மலர் தூவி வரவேற்றனர். தலைமைச் செயலகத்தில் முதன்மைச் செயலாளர் நிரப்குமார் பிரசாத் மற்றும் ஊழியர்கள் முதல்வரை வரவேற்றனர்.
அதனைத் தொடர்ந்து முதல்வர் அலுவலகதுக்கு சென்ற சந்திரபாபு நாயுடு சிறப்பு பூஜைகளை செய்து பொறுப்பேற்று கொண்டார்.

பின்னர் தனது அலுவலகத்தில் ஐந்து முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார். அதில் 16,347 ஆசிரியர் பணியிடங்களை நிரப்பும் விதமாக மெகா டிஎஸ்சி தேர்வுக்காக கையெழுத்திட்டார். இரண்டாவதாக கடந்த ஜெகன்மோகன் ஆட்சியில் கொண்டுவரப்பட்ட நில உரிமை சட்ட மசோதாவை ரத்து செய்தும், மூத்த குடிமக்கள் மற்றும் விதவைகளுக்கு வழங்கப்பட்டு வரும் பென்ஷன் தொகை ரூ.3 ஆயிரத்தில் இருந்து ரூ.4 ஆயிரமாக உயர்த்துவது,

சந்திரபாபு நாயுடு ஆட்சியில் கொண்டுவரப்பட்டு ஜெகன்மோகன் ஆட்சியில் மூடப்பட்ட அண்ணா கேன்டீன் மீண்டும் திறக்கவும், திறன் மேம்பாட்டு பயிற்சி கணக்கீடு உள்ளிட்ட ஐந்து கோப்புகளில் சந்திரபாபு நாயுடு கையெழுத்திட்டார். பின்னர் அங்கு வந்த பொதுமக்களிடம் சந்திரபாபு நாயுடு பேசினார். அதனை தொடர்ந்து அதிகாரிகளிடம் மாநில வளர்ச்சிக்கும், நிதி வளர்ச்சியை மேம்படுத்தும் விதமாக அதிகாரிகள் ஊழியர்கள் அனைவரும் இணைந்து பணிபுரிவோம் என்றார்.

‘கஞ்சா, மாமிசம், மது கூடாரமாக மாற்றப்பட்ட திருப்பதி’
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று முதல்வர் சந்திரபாபு நாயுடு சுவாமி தரிசனம் செய்தார். அதன் பின்னர் காயத்ரி நிலையம் விருந்தினர் மாளிகையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் பேசியதாவது: ஆந்திராவில் எனது 4.0 ஆட்சி தொடங்கியுள்ளது. ஆந்திரா ஐந்து ஆண்டுகால ஆட்சியில் 30 ஆண்டுகள் பின்னோக்கி சென்றுள்ளது. அதனை மீண்டும் மாற்ற வேண்டுமென 93 சதவீதம் மக்கள் வெற்றி பெற செய்துள்ளனர்.

எனது ஆட்சி நிர்வாகத்தால் ஆந்திராவின் நிதி வளர்ச்சி அடைய செய்யும் வழிமுறைகளை கொண்டு வருவேன். திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் பல சீர்திருத்தம் கொண்டு வந்து தூய்மையாக வைத்திருந்தோம். ஆனால் அதனை கடந்த ஐந்தாண்டுகளில் கஞ்சா, மாமிசம், மது என அரசியல் கூடாரமாக மாற்றி விட்டனர். பிரசாதங்கள் தரத்தையும் இழந்துள்ளது பலமுறைகேடுகள் நடந்துள்ளது. தவறு செய்தவர்கள் தண்டிக்கப்படுவார்கள். பழிவாங்கும் அரசியலாக இருக்காது” என்றார்.

The post வழிநெடுகிலும் மலர் தூவி உற்சாக வரவேற்பு ஆந்திர முதல்வராக சந்திரபாபு நாயுடு பொறுப்பேற்பு: 5 முக்கிய கோப்புகளில் கையெழுத்து appeared first on Dinakaran.

Related Stories: