நமீபியாவுக்கு எதிராக ‘பவர் பிளே’ வெற்றி சூப்பர் 8 சுற்றில் ஆஸ்திரேலியா

நார்த் சவுண்ட்: நமீபியா அணியுடனான உலக கோப்பை பி பிரிவு லீக் ஆட்டத்தில், ‘பவர் பிளே’ ஓவரிலேயே அபாரமாக வென்ற ஆஸ்திரேலியா சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியது.
ஆன்டிகுவாவில் நடந்த இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸி. பந்துவீச்சை தேர்வு செய்தது. நமீபியா பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்னில் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்து அணிவகுக்க, அந்த அணி 17 ஓவரில் 72 ரன் மட்டுமே சேர்த்து ஆல் அவுட்டானது. பொறுப்புடன் விளையாடிய கேப்டன் ஜெரார்ட் எராஸ்மஸ் அதிகபட்சமாக 36 ரன் (43 பந்து, 4 பவுண்டரி, 1 சிக்சர்), தொடக்க வீரர் மைகேல் வான் லிங்கன் 10 ரன் எடுத்தனர்.

ஆஸி. பந்துவீச்சில் ஆடம் ஸம்பா 4 ஓவரில் 12 ரன்னுக்கு 4 விக்கெட் கைப்பற்றி அசத்தினார். ஹேசல்வுட், ஸ்டாய்னிஸ் தலா 2 , கம்மின்ஸ், எல்லிஸ் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். டி20ல் நமீபியா எடுத்த குறைந்தபட்ச ஸ்கோராக இது அமைந்தது.அடுத்து 20 ஓவரில் 73 ரன் எடுத்தால் வெற்றி என்ற மிக எளிய இலக்குடன் களமிறங்கிய ஆஸி. 5.4 ஓவரிலேயே 1 விக்கெட் இழப்புக்கு 74 ரன் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. வார்னர் 20 ரன் (8 பந்து, 3 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி டேவிட் வீஸ் பந்துவீச்சில் டிரம்பல்மேன் வசம் பிடிபட்டார். டிராவிஸ் ஹெட் 34 ரன் (17 பந்து, 5 பவுண்டரி, 2 சிக்சர்), கேப்டன் மிட்செல் மார்ஷ் 18 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

ஆஸி. 6 பவர் பிளே ஓவருக்குள்ளாகவே வெற்றியை வசப்படுத்தியது குறிப்பிடத்தக்கது. இந்த ஆட்டத்தின் பவர் பிளேவில் நமீபியா 3 விக்கெட் இழப்புக்கு 17 ரன் மட்டுமே எடுத்திருந்தது. பவர் பிளேயில் இரு அணிகளுக்கும் இடையே 57 ரன் வித்தியாசம் என்ற வகையில் ஆஸி. முதலிடம் பிடித்து சாதனை படைத்தது.2021ல் ஸ்காட்லாந்துக்கு எதிராக பவர் பிளேவில் நமீபியா கூடுதலாக 55 ரன் பெற்றதே முந்தைய அதிகபட்சமாக இருந்தது. ஆடம் ஸம்பா ஆட்ட நாயகன் விருது பெற்றார். பி பிரிவில் ஹாட்ரிக் வெற்றியுடன் (6 புள்ளி) முதலிடத்தில் உள்ள ஆஸி. சூப்பர் 8 சுற்று வாய்ப்பை உறுதி செய்தது.

The post நமீபியாவுக்கு எதிராக ‘பவர் பிளே’ வெற்றி சூப்பர் 8 சுற்றில் ஆஸ்திரேலியா appeared first on Dinakaran.

Related Stories: