டி.20 உலக கோப்பை கிரிக்கெட்: அமெரிக்காவுடன் இந்தியா இன்று மோதல்

நியூயார்க்: 9வது ஐசிசி டி.20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் வெஸ்ட்இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதில் இன்று இரவு 8 மணிக்கு நியூயார்க்கில் நடைபெறும் 25வது லீக் போட்டியில் வலுவான இந்திய அணி, கத்துக்குட்டி அமெரிக்காவுடன் மோதுகிறது. முதல் போட்டியில் அயர்லாந்து. 2வது போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா இன்று ஹாட்ரிக் வெற்றியுடன் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதிபெறும் முனைப்பில் உள்ளது. இன்றைய போட்டியிலும் இந்திய அணியில் பெரிய மாற்றம் இருக்காது. ஒருவேளை ஷிவம் துபேவுக்கு பதிலாக சஞ்சு சாம்சன் இடம்பெறக்கூடும். பவுலிங்கில் பும்ரா எதிரணிக்கு கிலி ஏற்படுத்தி வருகிறார்.

மறுபுறம் அமெரிக்கா முதல் போட்டியில் கனடாவை வென்ற நிலையில், 2வது போட்டியில் சூப்பர் ஓவரில் பாகிஸ்தானை வீழ்த்தி வரலாற்று சாதனை படைத்த உற்சாகத்தில் உள்ளது. இன்று வென்றால் அந்த அணியும் சூப்பர் 8 சுற்று வாய்ப்பை உறுதி செய்யும். அமெரிக்கா அணியில் கேப்டன் மோனாங்க் படேல், ஹர்மீத்சிங், ஜஸ்தீப் சிங், சவுரப் நேத்ரவல்கர், நிதிஷ்குமார் என 5 இந்திய வம்சாவளி வீரர்கள் உள்ளனர். இதில் நேத்ரவல்கர் மும்பை அணிக்காக(15 வயதுக்குட்பட்டோர்) ரஞ்சி, விஜய்ஹசாரே தொடரில் சூர்யகுமாருடன் இணைந்து ஆடி இருப்பது குறிப்பிடத்தக்கது. நியூயார்க் நாசாவ் கவுன்டி மைதானம் பேட்ஸ்மேன்களுக்கு கடும் சவாலாக உள்ளது. இங்கு இதுவரை நடந்துள்ள 7 போட்டியில் எந்த அணியும் 150 ரன்னை தாண்டவில்லை. அயர்லாந்துக்கு எதிராக கனடா 137 ரன் எடுத்ததே அதிகபட்சமாகும்.

The post டி.20 உலக கோப்பை கிரிக்கெட்: அமெரிக்காவுடன் இந்தியா இன்று மோதல் appeared first on Dinakaran.

Related Stories: