பள்ளி கட்டிடத்தை விரைந்து சீரமைக்கக்கோரி நெல்லை-திருச்செந்தூர் சாலையில் 7வது வார்டு மக்கள் மறியல்

நெல்லை : பள்ளி கட்டிடத்தை விரைந்து சீரமைக்கக் கோரி நெல்லை மாநகராட்சி 7வது வார்டு மக்கள் நெல்லை- திருச்செந்தூர் சாலையில் நேற்று திடீர் மறியலில் ஈடுபட்டனர்.
நெல்லை மாநகராட்சி, 7வது வார்டுக்குட்பட்ட பாளை. பிராந்தன்குளம் பகுதியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. 1 முதல் 8ம் வகுப்பு வரையுள்ள இப்பள்ளியில் எம்கேபி நகர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.

பள்ளி கட்டிடம் பழுதடைந்த நிலையில் சுமார் ரூ.1 கோடி மதிப்பில் புனரமைப்பு பணிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில் பள்ளி நேற்றுமுன்தினம் திறக்கப்பட்ட நிலையில் போதிய கழிவறை வசதிகள் இல்லாமல் மாணவ, மாணவிகள் திண்டாடினர்.இதைத்தொடர்ந்து பெற்றோர்கள், பள்ளித்தலைமையாசிரியர், ஆசிரியர்கள் மாநகராட்சி நிர்வாகத்தை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதையடுத்து 7வது வார்டு பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள், பாளை சமாதானபுரம் பகுதியில் நெல்லை- திருச்செந்தூர் ரோட்டில் நேற்று காலை திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். ‘கல்வியை பிச்சையாக தாருங்கள்’ என்ற போஸ்டர்களை கையில் ஏந்தி இருந்தனர். இதையடுத்து மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். திமுக நிர்வாகி சுண்ணாம்பு மணி மற்றும் பெற்றோர்கள் தங்கள் கோரிக்கையை முன்வைத்தனர். முதலில் பள்ளிக்கு கழிப்பறைகளையும், பின்னர் பள்ளி கட்டிடத்தையும் கட்டித்தருவதாக உறுதியளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

The post பள்ளி கட்டிடத்தை விரைந்து சீரமைக்கக்கோரி நெல்லை-திருச்செந்தூர் சாலையில் 7வது வார்டு மக்கள் மறியல் appeared first on Dinakaran.

Related Stories: