கருவேப்பிலங்குறிச்சி அருகே இன்று காலை குடிநீர்கேட்டு பொதுமக்கள் திடீர் சாலைமறியல்

விருத்தாசலம்: கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த கருவேப்பிலங்குறிச்சி அருகே ராஜேந்திரப்பட்டினம் ஊராட்சிக்குட்பட்ட சின்னாத்துக்குறிச்சியில் சுமார் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள மேல்நிலை நீர்தேக்க தொட்டியின் மூலம் ஊராட்சி நிர்வாகம் சார்பில் அப்பகுதி மக்களுக்கு குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மின் மோட்டார் பழுதடைந்த காரணத்தினால் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு குடிநீர் ஏற்ற முடியாமல் குடிநீர் வினியோகம் தடைபட்டது. இதனால் குடிநீரின்றி அவதிப்பட்ட அப்பகுதி மக்கள் அக்கம் பக்கத்தில் உள்ள விவசாய நிலங்கள் மற்றும் பக்கத்து ஊர்களுக்கு சென்று குடிநீர் எடுத்து பயன்படுத்தி வருகின்றனர். மேலும் இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை கூறியும் நடவடிக்கை இல்லை என கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் இன்று காலை 8 மணி அளவில் விருத்தாசலம்-முஷ்ணம் நெடுஞ்சாலையில் சின்னாத்துக்குறிச்சி பேருந்து நிறுத்தத்தில் காலிக்குடங்களுடன் அமர்ந்து திடீர் சாலை மறியலில் ஈடுபட்ட னர். இதுகுறித்து தகவல் அறிந்து சென்ற கருவேப்பிலங்குறிச்சி சப்-இன்ஸ்பெக்டர் ராமலிங்கம் மற்றும் போலீசார் விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது சம்பந்தப்பட்ட ஊராட்சி மன்ற தலைவர் சுரேஷ் மற்றும் ஊராட்சி ஒன்றிய நிர்வாக அதிகாரிகளிடம் பேசி குடிநீர் கிடைப்பதற்கு ஏற்பாடு செய்வதாக தெரிவித்தனர். இதனையடுத்து சாலை மறியலை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால் விருத்தாசலம்-ஸ்ரீமுஷ்ணம் நெடுஞ்சாலையில் சுமார் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

The post கருவேப்பிலங்குறிச்சி அருகே இன்று காலை குடிநீர்கேட்டு பொதுமக்கள் திடீர் சாலைமறியல் appeared first on Dinakaran.

Related Stories: