செங்கம் செய்யாற்றில் ஆக்கிரமிப்புகள் அதிகரிப்பு கட்டிட இடிபாடுகள் கொட்டும் கிடங்காக மாறியது

*சுகாதார சீர்கேடு அபாயம்

செங்கம் : செங்கம் செய்யாற்றில் ஆக்கிரமிப்புகள் மட்டுமின்றி கட்டிட இடிபாடுகள், குப்பைகள் கொட்டும் இடமாக மாறியுள்ளது. இதனால் அங்கு சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் நகரையொட்டி செய்யாறு ஓடுகிறது. இந்த ஆற்றில் பல ஆண்டுகளாக ஆக்கிரமிப்பு சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இதனால் ஆற்றின் அகலம் குறுகிய நிலையில் உள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக கட்டிடங்களை இடித்து அகற்றப்படும் கட்டிட கழிவுகள், குப்பை கழிவுகள் ஆகியவற்றை இங்கு கொட்டுகின்றனர்.

இதனால் ஆற்றில் மாசு ஏற்பட்டுள்ளது. மேலும் ஆற்றில் கழிவுநீரும் விடப்படுவதால் கடும் துர்நாற்றம் வீசுகிறது. செங்கம் நகரையொட்டி செல்லும் ஆற்றில் நீண்ட தூரம் இதே நிலையில்தான் உள்ளது.செய்யாற்றில் கரையின் இருபுறமும் செடிகள், முட்புதர்கள், மரங்கள் இருந்தது. இதனை அப்பகுதியை சேர்ந்த செய்யாறு மீட்புக்குழுவினர் அகற்றி தூய்மைப்படுத்தினர். இந்நிலையில் தற்போது ஆற்றின் கரையில் கட்டிட இடிபாடுகள், குப்பைகள் கொட்டுவதால் மழைக்காலங்களில் தண்ணீர் சீராக செல்லவும் வழியில்லாத நிலை உள்ளது.

எனவே, செய்யாற்றில் உள்ள ஆக்கிரமிப்பு மற்றும் கட்டிட இடிபாடுகளை அகற்றி தூய்மைப்படுத்த வேண்டும், ஆற்றில் கழிவுநீர் தேங்காதபடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இனிமேல் குப்பைகள், கட்டிட கழிவுகள் கொட்டாதபடி நடவடிக்கை எடுத்து ஆற்றில் உள்ள குடிநீர் கிணற்றை பாதுகாத்து சுகாதாரமான குடிநீர் விநியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post செங்கம் செய்யாற்றில் ஆக்கிரமிப்புகள் அதிகரிப்பு கட்டிட இடிபாடுகள் கொட்டும் கிடங்காக மாறியது appeared first on Dinakaran.

Related Stories: