கூடுவாஞ்சேரி பகுதிகளில் வளர்ச்சி பணிகளை கலெக்டர் ஆய்வு

கூடுவாஞ்சேரி, ஜூன் 9: கூடுவாஞ்சேரி சுற்றுபுற பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை செங்கல்பட்டு கலெக்டர் அருண்ராஜ் நேற்று மாலை திடீரென சென்று ஆய்வு செய்தார். செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகர் நகராட்சிக்கு உட்பட்ட 1வது வார்டு தைலாவரம் பகுதியில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விடம் மேம்பாட்டு வாரியம் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் குடியிருப்பு பகுதிகளை செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அருண்ராஜ் நேற்று மாலை திடீரென சென்று ஆய்வு செய்தார். இதனையடுத்து கூடுவாஞ்சேரி நெல்லிக்குப்பம் சாலையோரத்தில் உள்ள நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகராட்சியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை மூலம் இயங்கி வரும் மகளிர் விடுதிக்குச் சென்று குடிநீர், உணவு, கழிப்பிடம் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் குறித்து ஆய்வு செய்தார். பின்னர் அங்கு தங்கி இருக்கும் இளம் பெண்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட வண்டலூர் அடுத்த மண்ணிவாக்கம் ஊராட்சியில் உள்ள கே.கே.நகர் ஸ்டாலின் தெருவில் ஊரக வளர்ச்சித்துறை மூலம் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் தலா ₹3.50 லட்சம் மதிப்பீட்டில் 21 வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மாவட்டத்திலேயே முதல் முறையாக மேற்படி பகுதியில் கட்டி முடிக்கப்பட்டுள்ள கலைஞரின் கனவு இல்ல மாதிரி வீட்டிற்கு திடீரெனச் சென்று கலெக்டர் அருண்ராஜ் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது மண்ணிவாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் கெஜலட்சுமிசண்முகம், துணை தலைவர் சுமதிலோகநாதன், வட்டார வளர்ச்சி அலுவலர் கலைச்செல்வன், ஊராட்சி செயலர் ராமபக்தன் உட்பட ஏராளமானோர் உடனிருந்தனர்.

The post கூடுவாஞ்சேரி பகுதிகளில் வளர்ச்சி பணிகளை கலெக்டர் ஆய்வு appeared first on Dinakaran.

Related Stories: