வாக்கு எண்ணும் மையத்திற்குள் நுழைய ஒய்எஸ்ஆர் கட்சி எம்எல்ஏவுக்கு தடை: உச்ச நீதிமன்றம் அதிரடி

புதுடெல்லி: மின்னணு இயந்திரத்தை உடைத்த ஒய்எஸ்ஆர் கட்சி எம்எல்ஏ வாக்கு எண்ணும் மையத்திற்குள் நுழைய உச்ச நீதிமன்றம் தடை விதித்து உள்ளது. ஆந்திராவில் சட்டப்பேரவை மற்றும் மக்களவை தேர்தல் ஒரே கட்டமாக மே 13ம் தேதி நடந்தது. அப்போது மச்செர்லா தொகுதி ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏவும், தற்போதைய வேட்பாளருமான பின்னெல்லி ராமகிருஷ்ண ரெட்டி திடீரென வாக்குச் சாவடியில் நுழைந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை உடைத்து விட்டார். இந்த வழக்கில் அவரை கைது செய்யாமல் இருக்க மே 28ம் தேதி முன்ஜாமீன் வழங்கப்பட்டது.

இதை ரத்து செய்யக்கோரி தெலுங்குதேசம் கட்சி தேர்தல் முகவர் சேஷகிரி ராவ் நம்பூரி தாக்கல் செய்த 2 மனுக்களை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அரவிந்த் குமார், சந்தீப் மேத்தா ஆகியோர் அடங்கிய விடுமுறை கால அமர்வு விசாரித்தது. அப்போது இவிஎம் உடைக்கப்படும் வீடியோவை பார்த்த நீதிபதிகள், ‘இந்த வழக்கில் எம்எல்ஏவுக்கு முன்ஜாமீன் வழங்கியது இந்த வீடியோவை நீங்கள் பார்த்தவுடன், இது முற்றிலும் தவறான உத்தரவு என்பதை காண்பீர்கள். இது நீதித்துறையின் கேலிக்கூத்தாகும். எனவே இன்று எம்எல்ஏ ராமகிருஷ்ண ரெட்டி வாக்கு எண்ணும் மையத்திற்குள் நுழையவோ அல்லது அதன் அருகில் இருக்கவோ கூடாது’ என்று உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை ஜூன் 6ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

The post வாக்கு எண்ணும் மையத்திற்குள் நுழைய ஒய்எஸ்ஆர் கட்சி எம்எல்ஏவுக்கு தடை: உச்ச நீதிமன்றம் அதிரடி appeared first on Dinakaran.

Related Stories: